திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா அதிகாலை 2.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா அதிகாலை 2.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும்
x
தினத்தந்தி 29 Dec 2016 11:00 PM GMT (Updated: 29 Dec 2016 7:35 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி அன்று அதிகாலை 2.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி அன்று அதிகாலை 2.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை தலைமை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை தலைமை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வைகுண்ட ஏகாதசி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும், 8-ந் தேதி வைகுண்ட ஏகாதசி, 9-ந் தேதி துவாதசி விழாவும் நடைபெற உள்ளது.

8-ந் தேதி அதிகாலை திருப்பாவை சேவை முடிந்து, அதிகாலை 2.30 மணிக்குச் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதில், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சொர்க்கவாசல் வழியாக சென்று தங்கப்பிரகாரத்தில் வலம் வருகிறார்கள். பின்னர் சொர்க்கவாசல் அருகில் பக்தர்களின் வழிபாட்டுக்காக உற்சவ மூர்த்திகள் வைக்கப்படுகின்றனர்.

அன்று சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகிறது. நேரடியாக வரும் வி.ஐ.பி. புரோட்டோகால் பக்தர்கள் குறைந்த எண்ணிக்கையில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஏகாதசி, துவாதசிக்காக 44 மணிநேர தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முதியோர் தரிசனம் ரத்து

பின்னர் அதிகாலை 4 மணிக்குமேல் சிறப்புத்தரிசனம், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசன பக்தர்கள், இலவச தரிசன பக்தர்கள் ஆகியோர் தரிசனத்துக்காக கோவிலில் அனுமதிக்கப்படுகின்றனர். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், திருமலையில் நாராயணகிரி பூங்காவில் தற்காலிகமாக 12 தகர கொட்டகைகள் அமைக்கப்படுகிறது. அதில் கழிப்பறை, குடிநீர், மின் விளக்குகள், மின்விசிறி வசதிகள் செய்யப்படும். அங்கு 24 மணிநேரமும் உணவு வழங்கப்படும்.

திருப்பதியில், தேவஸ்தான அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை திருமலைக்குச் சென்று பக்தர்களுக்குச் சேவை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பக்தர்களுக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்கள், காணிக்கையாளர்களுக்கு ஜனவரி 1-ந் தேதி, 8 மற்றும் 9-ந் தேதி என 3 நாட்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறுஅவர் பேசினார்.

Next Story