பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கும் சாரங்கபாணி


பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கும் சாரங்கபாணி
x
தினத்தந்தி 3 Jan 2017 3:30 AM GMT (Updated: 2 Jan 2017 2:06 PM GMT)

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த ஆலயம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 108 திவ்வியதேசங்களில் ஒன்றான இந்த ஆலய இறைவனை, பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்,

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த ஆலயம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 108 திவ்வியதேசங்களில் ஒன்றான இந்த ஆலய இறைவனை, பெரியாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்கள் மங்களாசா சனம் செய்துள்ளனர். நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாக இது கருதப்படு கிறது.

மூலவர் திருநாமம் சாரங்கபாணி என்பதாகும். இவரை ஆராவமுதன், அபர்யாப்தாம்ருதன், சார்ங்கராஜா, சார்ங்கேசன் போன்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். மூலவர் பெருமாள் இரு திருக்கைகளுடன் வலது திருக்கையை திருமுடியின் கீழ் அமர்த்தி, உத்தான சயன கோலத்தில் பாம்பணை மீது பள்ளி கொண்டுள்ளார். உற்சவர் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம், உடைவாள் ஆகிய ஐந்து திவ்விய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயம் அளிக்கும் முத்திரையுடன் அழகாக காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லை  வைத்து இருப்பதால் சார்ங்கபாணி என அழைக்கப்படுகிறார்.

மூலஸ்தானத்தில் கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக் கிறார். நாபியில் பிரம்மா, தலைப்பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன.பெருமாள் பள்ளிக்கொண்டுயிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு உத்தான சயன கோலத்தில் இருக்கிறார். தாயாரின் திருநாமம் கோமளவல்லி என்பதாகும். பொற்கொடி என்பது இதன் தமிழ் பதம். பொற்றாமரை திருக்குளத்தில் அவதரித்தபடியால் தாயாரை பொய்கையில் பூத்த பொற்கொடி என்பது சாலப்பொருந்தும். நான்கு திருக்கைகளுடன் அருளே வடிவாக இறைவனின் கருவறைக்கு வலது பக்கத்தில் தனிக்கோவிலில் தாயார் எழுந்தருளியிருக்கிறார்.

தலவரலாறு


ஒரு சமயம் முனிவர்கள் ஒன்று கூடி யாகம் வளர்த்தனர். யாகத்தின் அவிர்பாகத்தை மும்மூர்த்திகளில் சாந்தமானவர்கள் யாரோ அவருக்கு வழங்க முடிவுசெய்தனர். அதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிருகு மகரிஷியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பிரம்மா, சிவனிடம் சென்றார். அவர்கள் பிருகு முனிவரை கண்டும் காணாததுபோல் இருந்தனர். வைகுண்டம் சென்ற பிருகு முனிவர் திருமாலின் சாந்தகுணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைத்தார். திருமால் அதைத் தடுக்காமல் பிருகுவின் பாதத்தை வருடினார்.

இதைப் பார்த்த மகாலட்சுமி கோபத்துடன், ‘சுவாமி! முனிவர் உங்கள் மார்பில் உதைக்கும் போது, அதைத் தடுக்காமல் விட்டுவிட்டீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழமாட்டேன்’ எனக்கூறி கணவரை பிரிந்து பூலோகம் வந்தார். பூலோகத்தில் கும்பகோணத்தில் உள்ள ஹேமபுஷ்கரணியில் 1008 தாமரை இதழ்களில் அழகிய குழந்தையாக அவதரித்தாள். அந்த நேரத்தில் அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஹேம மகரிஷி, குழந்தையை எடுத்து அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். கோமளவல்லிக்கு திருமண வயது வந்ததும், அவள் திருமாலை திருமணம் செய்யவேண்டி தவம் இருந்தாள். கோமளவல்லியின் தவத்துக்கு மகிழ்ந்து திருமால் வைகுண்டத்திலிருந்துதான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமள வல்லியை திருமணம் செய்துக்கொண்டார்.

மகாலட்சுமியின் அவதார தலமாக கருதப் படுவதாலும், இருந்த இடத்திலேயே தவமிருந்து பெருமாளை தம் இருப்பிடத்திற்கே வரவழைத்து மணம் புரிந்த மகிமையாலும் இத்தலம் சிறப்பு பெறுகிறது. கோமளவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புடவை சாத்தி வழிபட்டால், பெண்களுக்கு திருமணம் கைகூடும். மேலும் இறைவனையும் இறைவியையும் ஒரு சேர வழிபட்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

தாயாரை மணந்துக்கொள்ள வைகுண்டத்தில் இருந்து இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமியின் சன்னிதி, தேரின் அமைப்பில் இருக்கிறது. இந்தத் தேரில் குதிரை, யானை, தேர் சக்கரங்கள் எல்லாம் கல்லினால் ஆனவை. பார்ப்பவர்கள் பரவசப் படுத்தும் வகையில் இக்கோவில் கோபுரம் 150 அடி உயரத்தில் 11 நிலைகளுடன் காட்சியளிக்கிறது. கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தில் 108 கரணவகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோவிலில் உத்ராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல் உண்டு. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்ராயண வாசல் திறந்திருக்கும். பின்னர் அந்த வாசல் மூடப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

திருமால், தாயாரை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். ஆகவே தாயாருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படு கிறது. தாயாரை வணங்கிய பிறகே, பெருமாளை வணங்க வேண்டும். ஆகையால் தாயார் சன்னிதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னிதிக்குள் செல்லும் வகையில் ஆலயம் வடிவமைப்பு உள்ளது. நடைதிறக்கும் போது, சுவாமி சன்னிதியில்செய்யப்படும் கோமாதா பூஜையை, இக்கோவிலில் கோமளவல்லித் தாயார் சன்னிதி முன்பாக நடத்துகின்றனர். பின்னரே, சுவாமி சன்னிதியில் கோ பூஜை நடக்கிறது.

மகப்பேறு கிட்டாத தம்பதியர், இந்தத் திருக்கோவிலில் பெருமாள் சன்னிதியில் உள்ள, சந்தான கிருஷ்ணன் விக்கிரத்தினை பூஜை செய்வதன் மூலம் புத்திரபாக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை. இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

திருவிழா

இந்த ஆலயத்தில் சித்திரைத் திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மகத் தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும். ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

–மரு.நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.


பக்தனுக்கு மகனாக மாறிய பெருமாள்

லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர், சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தனது இறுதி காலம் வரையில் பெருமாளுக்கு சேவை செய்தார். இந்த ஆலயத்தின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அந்த பக் தருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு தீபாவளி நன்னாளன்று அவர் பெருமாளின் திரு வடியை அடைந்தார். ஒருவருக்கு சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், அந்த நபர் நரகம் செல்லும் நிலை ஏற்படும். எனவே தன்னுடைய பக்தருக்கு, தானே மகனாக இருந்து, சாரங்கபாணி இறுதிச்சடங்குகளை செய்தாராம். இது நடந்த மறுநாள் கோவிலை திறந்தபோது, பெருமாள் விக்கிரகத்தில் ஈர வேட்டியும், மாற்றிய பூணூலுமாக இறைவன் காட்சியளித்துள்ளார். அருகில் தர்ப்பைகள் கிடந்துள்ளன. இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று உச்சி காலத்தில், திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால் இதை பக்தர்கள் பார்க்க அனுமதியில்லை.

பாதாள சீனிவாசன்

திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் சீனிவாசப் பெருமாளே, பிருகு மகரிஷி காலத்தில் அங்கிருந்து கும்பகோணத்திற்கு எழுந்தருளி சிலகாலம் தங்கி இருந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக வந்த சீனிவாசன், பூமிக்கு கீழே ஒளிந்துகொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள்முன் தோன்றிய சுவாமி தாயாரை மணந்துகொண்டார். திருமால் ஒளிந்த இடம் கோவில் நிலவறைக்கு கீழ், பாதாள சீனிவாசன் சன்னிதி என்றப்பெயரில் உள்ளது. திருமணத்திற்கு பிறகு இவர் மேடான இடத்தில் மேட்டு சீனிவாசராக தாயார்களுடன் தனிசன்னிதியில் இருக்கிறார்.

****

வரசித்தி விநாயகர்

சென்னை மயிலாப்பூரில் கோபதி நாராயணன் செட்டித் தெருவில் உள்ளது கோலவிழி அம்மன் ஆலயம். இந்தக் கோவிலுக்குச் செல்லும் முகப்பில் ‘சடலாடும் வரசக்தி விநாயகர்’ கோவில் அமைந்துள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த ஆலயத்தில் மாதம் தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்படும். இதே போல் ஆவணி மாதத்தில் நடை பெறும் விநாயகர் சதுர்த்தியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளைப் பெற்றுச் செல் கிறார்கள். அன்றைய தினம் விநாயகர், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இத்தல விநாயகர், பக்தர் களின் வேண்டுதலை வரமாக அளிக்கும் வல்லமை கொண்டவர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

–மு.வெ.சம்பத், சென்னை.

Next Story