தடுமாற்றம் தரும் தலைவாசல் மரம்


தடுமாற்றம் தரும் தலைவாசல் மரம்
x
தினத்தந்தி 6 Jan 2017 12:45 AM GMT (Updated: 5 Jan 2017 2:25 PM GMT)

புராண காலம் தொட்டே வாஸ்து சாஸ்திரம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் அதன் தாக்கம் மக்களிடம் சில ஆண்டுகளாகத்தான் பரவத் தொடங்கியிருக்கிறது. மக்களிடம் இதன் மீது நம்பிக்கை இருப்பதால், பலரும்

புராண காலம் தொட்டே வாஸ்து சாஸ்திரம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் அதன் தாக்கம் மக்களிடம் சில ஆண்டுகளாகத்தான் பரவத் தொடங்கியிருக்கிறது. மக்களிடம் இதன் மீது நம்பிக்கை இருப்பதால், பலரும் பலவித கருத்துக்களைச் சொல்லி அவர்களைக் குழப்புவதும் அதிகரித்தே வந்திருக்கிறது. இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவதே வாஸ்து என்று மக்கள் நம்பும் அளவுக்கு ஒரு சிலரின் கருத்துகள் இருக்கின்றன. அதன் காரணமாக வாஸ்துவை பலரும் பயத்துடன் பார்க்கும் நிலையே இன்று நிலவிவருகிறது.

ஒரு வீட்டின் வாஸ்து சரியில்லை என்றால், அந்த வீட்டையே இடிக்க வேண்டுமா? அப்படி எதுவும் செய்யத் தேவையில்லை என்பதே பழமையான வாஸ்து நூல்கள் கூறும் உண்மை. எந்த ஒரு வாஸ்து குறைபாட்டையும், சிறு சிறு மாறுதல்கள், எளிய வழிமுறைகளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும்.

‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ இதுதான் இப்போது இந்த தேசத்திற்கு தேவையான, அவசியமான ஒன்று. பல மரங்களை புதிதுபுதிதாக முளைக்கும் வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளும், இன்னும் சில மரங்களை, அவ்வப்போது வந்துபோகும் புயலும் காவு வாங்கிவிடுகின்றன. ஒருசில மரங்கள், வீட்டின் விரிவாக்கத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டு விடுவதுண்டு.

ஒரு வீட்டின் தலைவாசலுக்கு நேராக, மரம் இருப்பது வாஸ்து குறைபாடு. அப்படி இருந்தால், குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் எடுத்த காரியங்களிலும், செய்யும் வேலைகளிலும் முன்னேற்றத் தடை உண்டாகக் கூடும். வீட்டில் செய்யலாம் என்று நினைத்திருக்கும் சுப காரியங்கள், படிப்பு, பணி என எல்லாவற்றிலும் சறுக்கல்களே வந்து சேரும்.

‘சரி.. இந்த தோ‌ஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?’ என்கிறீர்களா..

ஒத்தையாக இருக்கும் அந்த மரத்தை இரட்டையாக மாற்றிவிடுங்கள். அதுதான் பரிகாரம்.

இரட்டையாக மாற்றுவது என்றால், அந்த மரத்தை இரண்டாக பிளப்பது என்று பொருள் இல்லை. நம்மில் பலரும் இன்று அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மரம் என்பது மனித சமுதாயத்தின் தேவைக்கு இன்றியமையாதது. மேற்கண்ட வாஸ்து தோ‌ஷம் இருந்தால், தலைவாசலுக்கு நேராக இருக்கும் மரத்தின் பக்கத்தில், சிறியதாக இன்னொரு செடியை நட்டுவிடுங்கள். அதை மட்டும் செய்தால் போதும். அந்தச் செடியின் வளர்ச்சி, உங்களின் வாஸ்து தோ‌ஷத்தை முழுமையாக நீக்கிவிடும்.

தலைவாசல் கதவைத் திறந்ததும், அதற்கு நேராக மரம் இருந்தால் மட்டும்தான் அது வாஸ்து குறைபாடு. கொஞ்சம் பக்கவாட்டில் தள்ளியிருந்தாலும், நாம் அதைப் பற்றி சிந்திக்க வேண்டியதே இல்லை. ஏனென்றால் அப்படி இருப்பது வாஸ்து குறை கிடையாது.

Next Story