சாபங்களைப் போக்கும் மங்களநாதர்||Capankalaip-tendency-mankalanatar
home
சாபங்களைப் போக்கும் மங்களநாதர்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
54
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, ஜனவரி 06,2017, 7:00 AM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , ஜனவரி 05,2017, 8:08 PM IST
லகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த அற்புத பூமியும் இதுதான்.

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம். ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம்         பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.

அதே போல ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் முடிந்த பின்னர், புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தனர். அப்போது ராவணனின் வழிகாட்டு தலின்படி, மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார். பிரம்மஹத்தி தோ‌ஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தோன்றுவதற்கும், முன்னரே தோன்றிய ஆலயம் இது. இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம்.

உத்திர கோச மங்கை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், இத்தலத்தின் முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும். ‘திரு’ என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள். ‘உத்திரம்’ என்பதற்கு ரகசியம் என்றும், ‘கோசம்’ என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள்படும். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும். அம்பாளுக்கு ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை, இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருளாகும். அம்பாளுக்கு மட்டுமின்றி, மாணிக்கவாசகர் அடங்கிய ஆயிரவருக்கும், பிரணவப் பொருளை இங்கு இறைவன் உபதேசித்து உள்ளார்.

இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ‘மங்களநாதர்’ என்றும், இறைவி ‘மங்கள நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. மங்களநாதர் என்ற திருப்பெயரானது, இறைவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயராகும். ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் ‘மங்களநாதர்’ ஆனார்.

மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தாள். பரிவு கொண்ட சிவபெருமான், அவளுக்கு புத்திரப் பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கைக்கு எழுந்தருள எண்ணினார். அதற்கு முன்பாக தன் அடியார்கள் ஆயிரவர்களிடம், ‘எனது திரு மேனியை ராவணன் தீண்டும் போது, இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் எழுந்தருளிய இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு குழந்தையாக உருவெடுத்து வரமளித்தார்.

அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் அழகைப் பார்த்து, அதனை தன் கைகளால் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தான். ராவணன் தீண்டியவுடன் உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக் குளத்தில் அக்னி வளர்ந்தது. பிரணவப் பொருளை உபதேசம் பெற்ற ஆயிரவரும் அந்த அக்னியில் இறங்கி கயிலாயம் சென்றனர். ஆனால் இறைவன் அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து அருள்பாலித்தார். இந்த ஆயிரவரும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனோடு கலந்து விட்டனர். அதனை இங்குள்ள சகஸ்ர லிங்கத்தில் காணலாம். திருக்கோவில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் கோவில் கொண்டுள்ள மாணிக்கவாசகர் தனிச்  சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முற்காலத்தில் இந்தப் பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஆலயத்தின் தல விருட்சமும் இலந்தை மரம்தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டைக் கடந்தது என்று கூறுகிறார்கள்.

இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப–விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோ‌ஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.

ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது. பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின்  முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.

அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, ‘இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்’ என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக் கிறது.

முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட, இத்தல இறைவன் வழிவகை செய்கிறார். தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கையாகும். இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.  தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்.

–அறந்தாங்கி சங்கர்.

மரகத  நடராஜர்

இங்குள்ள நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது. ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு. இதன் பிறகே சிதம்பரத்தில் நடராஜர், நடனக்காட்சியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. வாழ்வில் ஒரு முறையேனும், இந்த மரகத மேனியனை தரிசனம் செய்து வருவது வாழ்வில் சிறப்பு தருவதாக இருக்கும்.
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
54
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2797 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4