23. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி


23. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
x
தினத்தந்தி 7 Jan 2017 5:53 AM GMT (Updated: 7 Jan 2017 5:53 AM GMT)

திருப்பாவை மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூ

திருப்பாவை

மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்பு உடைய
சீரியசிங்கா தனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


மழைக்காலத்தில் ஒரு வீரமுடைய சிங்கம் வெளியே வர முடியாமல் மலைக்குகையில் படுத்து உறங்கு கிறது. மழைக்காலம் முடிந்த பிறகு அந்த சிங்கம் தூக்கத்தை நீக்கி, நெருப்பு போன்ற கண்களை திறக்கிறது. பிடரி யில் உள்ள மயிர்கள் சிலிர்த்து நிற்குமாறு நின்று கர்ஜனை செய்து குகையில் இருந்து வெளியே புறப்படுகிறது.  காயாம்பூவின் நிறத்தைக் கொண்டவனே! நீ உன் கோவிலிலிருந்து புறப்பட்டு மணிமண்டபத்திற்கு வந்து இந்தச் சீர்மைமிகு சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டு அருள்பாலிப்பாயாக!

திருப்பள்ளியெழுச்சி

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யளியளி யுதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்கு
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய்! எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!


இனிய குரலால் பூங்குயில்கள் பாடுகின்றன. கோழிகள் கூவின. மற்ற பறவைகள் ஆரவாரிக்கின்றன. வெண் சங்குகள் முழங் கின. வானத்தில் நட்சத்திரங்களின் ஒளி மறைந்தன. உதயத்தின் வெளிச்சம் எங்கும் பரவி விட்டது.

தேவாதிதேவனே! எம் பெருமானே!வீரக் கழல்அணிந்த  உன் திருவடி களைக் காட்டி அருள வேண்டும். திருப்பெருந்துறைச் சிவனே! எவரும் அறியமுடியாத தன்மை உடையவனே! அடியார்க்கு எளிமையானவனே! பள்ளி எழுந்து அருள்வாயாக!


Next Story