30. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி


30. திருப்பாவை - திருப்பள்ளியெழுச்சி
x
தினத்தந்தி 13 Jan 2017 11:30 PM GMT (Updated: 12 Jan 2017 11:37 PM GMT)

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட

திருப்பாவை

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட  ஆற்றை, அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசு உரைப்பார் ஈர்இரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


அலைகள் நிறைந்த திருப்பாற்கடலைக் கடைந்த கண்ணபிரானை, நிலவு போன்ற முகங்கொண்ட அழகிய அணிகலன்களை அணிந்த ஆயர்குலப் பெண்கள் வணங்கி, பாவை நோன்புக்காக பறையினை பெற்றிட, வழிவகையினைத் திருவில்லிபுத்தூரில் அவதரித்த, குளிர்ந்த தாமரை மாலையணிந்த பெரியாழ்வாரின் திருமகளான கோதை நாச்சியார் (ஆண்டாள்) பாடியருளினார். கூட்டம் கூட்டமாக மகளிர் சேர்ந்து அனுபவிக்கக் கூடிய இந்த முப்பது பாடல்களையும் பாடுபவர்கள்  நான்கு பெரிய மலைகள் போன்ற தோள்களையும், சிவந்த கண்களையும், அழகு திருமுகத்தையும் கொண்ட திருமாலின் திருவருளைப் பெற்றுப் பேரானந்தத்தில் மூழ்கியிருப்பர்.

திருப்பள்ளியெழுச்சி

புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவன் உய்யக்கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய்! திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.


அருமையான அமுதம் போன்றவனே! திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே! பூமியில் பிறந்தவர் கள் சிவ பெருமா னால் ஆட்கொள்ளப் படுகிறார்கள். நாம் பூமியில் போய் பிறக்காமல் வாழ்நாளை வீணாக கழிக்கின்றோமே என்று திருமாலும், பிரம்மாவும் ஆசைப்பட்டனர். உன்னுடைய பரந்த கருணையால் இந்த உலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே, துயில் நீங்கி எழுந்து அருள்புரிவாய். சுவாமி நீயும், கருணைக் கடலான அம்மையும் மண்உலகு வந்து பந்த பாசத்தை அறுத்து, ஞானத்தை அருளி இன்பம் தர பள்ளி எழுந்தருள்வாயாக.


Next Story