உயர்ந்த பக்தியால் இறைவனை உணரலாம்


உயர்ந்த பக்தியால் இறைவனை உணரலாம்
x
தினத்தந்தி 17 Jan 2017 1:30 AM GMT (Updated: 16 Jan 2017 12:21 PM GMT)

அது ஒரு தீபாவளி தினம். கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டிருந்தது. குஜராத் மாநிலத்தில் போகாபூர் என்ற நகரத்தில் அமைந்திருந்த விஷ்ணு ஆலயம் அது.

து ஒரு தீபாவளி தினம். கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டிருந்தது. குஜராத் மாநிலத்தில் போகாபூர் என்ற நகரத்தில் அமைந்திருந்த விஷ்ணு ஆலயம் அது. தீபங்கள் தந்த ஒளியால் ஆலயமே பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது. கோவில் மட்டுமா? வீடுகள்தோறும், பஜனை மடங்கள், சத்திரங்கள் என அனைத்திலும் ஏற்றப்பட்டிருந்த தீபங் களால், நாடே சூரியனைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அந்த தேசத்தை ஆண்ட மன்னன் குமான்சிங். நீதிநெறி தவறாதவன். மன்னரும் அதே ஊரில் வாழ்ந்த பண்ஹாஜி என்ற விஷ்ணு பக்தரும் நெருங்கிய நண்பர்கள். பொருளாசை இல்லாத பண்ஹாஜி, மன்னன் நம்முடைய நண்பன் என்பதற்காக அவரிடம் இருந்த எந்தச் சலுகையையும் எதிர்பார்த்தது கிடையாது.

மன்னனுக்கும், பண்ஹாஜிக்கும் பக்தி அதிகம் என்பதால், இருவருமாக இணைந்து ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி விழாக்களை விமரிசையாக கொண்டாடினார்கள். திருவிழா காலங்களில், புராண நாடகங்கள், சொற்பொழிவுகள் நடத்தினர். தினமும் ஆலயத்தில் சுவாமி புறப்பாடு ஆனவுடன் சாப்பிடுவார்கள். பின்னர் சுவாமியோடு வீதி உலா வருவார்கள். பக்தியின் காரணமாக அந்த ஊர் செழித்து விளங்கியது. மக்கள் அனைவரும் பக்தியோடு, நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடந்ததால் குற்றங்கள் ஏதும் இல்லை. அதனால் வழக்கு விசாரணையில் இல்லை.

அன்றைய தினம் தீபாவளி என்பதால், கோவிலில் பஜனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்ஹாஜி உருக்கமாக பஜனை செய்து கொண்டிருந்தார். தன் நண்பனின் அருகில் மன்னன் அமர்ந்து, கைதட்டி அந்த பஜனைப் பாடலை ரசித்துக் கொண்டிருந்தார். அவர்கள் முன்பாக திரண்டிருந்த கூட்டத்தினரும் அந்தப் பஜனையை கேட்டு மெய் மறந்து போய் அமர்ந்திருந்தனர்.

திடீரென்று அலறியபடி துள்ளி எழுந்த பண்ஹாஜி, ‘ஆ... ஆ...’ என்று கத்தியபடி தன்னுடைய வேட்டியை கசக்கி விட்டுக் கொண்டார். அவரது சத்தத்தால் கூட்டத்தில் இருந்த அனைவரும் பதறினர். அங்கிருந்த அமைதி கலைந்து போனது. மன்னனுக்கு என்ன நடக் கிறது? என்பதே புரியவில்ல். ‘இந்த பண்ஹாஜி எதற்காக இப்படிச் செய் கிறார்?’ என்று மனம் குழம்பிப்போய் பார்த்தார்.

‘இனிய பாடலுக்கு நடுவில் பண்ஹாஜி இப்படிச் செய்துவிட்டாரே’ என்ற எரிச்சல் மன்னனுக்கு இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘என்ன ஆச்சு பண்ஹாஜி?’ என்றார் மன்னன்.

‘துவாரகையில் தீபாராதனை நடந்தபோது, கற்பூரக்கட்டி சிதறி விழுந்து கண்ணனின் பட்டு பீதாம்பரத்தில் நெருப்புப் பற்றிக்கொண்டது. அதுதான் கசக்கி விட்டேன். இப்போது தீ அணைந்து விட்டது’ என்றார் பண்ஹாஜி.

அவர் சொன்னதை மன்னன் நம்பவில்லை. பண்ஹாஜி நாடக மாடுவதாக நினைத்தான். இவர் இருப்பதோ போகாபூரில், இறைவனின் பீதாம்பரத்தில் நெருப்பு பட்டதாக பண்ஹாஜி கூறும் இடமோ துவாரகை. இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் பெரியது. ஆனால் பண்ஹாஜி, தான் மானசீகமாக துவாரகா சன்னிதியில் இருந்தது போன்று பாசாங்கு செய்வது மன்னனுக்கு கோபத்தை வரவழைத்தது. இது மக்களை ஈர்க்க அவர் செய்யும் தந்திரம் என்று மன்னன் நினைத்தான்.

உடனே மன்னன், பண்ஹாஜியிடம் ‘சரி.. இப்போது துவாரகையில் பகவான் என்ன நிற ஆடை அணிந் திருக்கிறார்?’ என்றான். அதற்கு பண்ஹாஜி, ‘பச்சை நிற ஆடை’ என்று பதிலளித்தார்.

அதன்பிறகு மன்னன் எதுவும் கேட்கவில்லை. பஜனை முடிந்தது. அனைவரும் அவரவர் இல்லம் திரும்பினர்.

அரண்மனை திரும்பிய மன்னன், உடனடியாக பண்ஹாஜியின் குட்டை உடைக்க நினைத்து, துவாரகாபுரியை ஆட்சி செய்து வந்த அரசனுக்கு ஒரு ஓலை எழுதினான். அதில் ‘தீபாவளி எப்படிக் கழிந்தது? துவாரகை கோவிலில் ஏதேனும் விசே‌ஷம் உண்டா?’ என்று கேட்டு எழுதியிருந்தார்.

அந்த ஓலைக்கு, துவாரகாபுரி அரசனிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது. ‘தீபாவளி அன்று கோவிலில் லட்ச தீப விழா சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாண்டுரங்கனுக்கு நிவேதனம் முடிந்து, தீபாராதனை காட்டும்போது, அர்ச்சகரின் கவனக்குறைவால் சுவாமியின் அழகிய பச்சை வண்ண பீதாம்பரத்தில் நெருப்பு பற்றிக்கொண்டது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், நாங்கள் அந்த நெருப்பை அணைப்பதற்குள், அது தானாகவே அணைந்துவிட்டது’ என்று எழுதியிருந்தார்.

மன்னன் பிரமித்துப் போனான். ‘இப்படியும் ஒரு பக்தியா? நான் பண்ஹாஜியை தவறாக மதிப்பிட்டு விட்டேனே..’ என்று மனம் நொந்து போனான். உடனடியாக பண்ஹாஜியின் இருப்பிடம் சென்று, அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

‘அங்கே நடப்பதை இங்கே அறியும் ஆற்றல் உள்ள உமது பக்தி முன்பு, நான் மிகவும் சிறியவனானேன். உமக்கு என்ன ஒரு விசாலமான அறிவு. என்ன ஒரு பக்தி ஐக்கியம்’ என்று பாராட்டியவன், பண்ஹாஜிக்கு இரண்டு கிராமங்களை மானியமாக அளித்தான்.

அவரும் அந்த கிராமங் களைப் பெற்றுக்கொண்டு, அதில் கிடைத்த வருவாயில் பக்தர்களுக்கு விருந்தோம்பலும், பாகவதத் தொண்டு செய்து வாழ்நாளைக் கழித்தார். மன்னனும் தினந்தோறும் பண்ஹாஜியை சந்தித்து வேதாந்த விளக்கங்களைக் கேட்டுக் கொண்டான்.


Next Story