ஜென் கதை : துன்பத்தை மகிழ்ச்சியாக மாற்றுங்கள்


ஜென் கதை : துன்பத்தை  மகிழ்ச்சியாக மாற்றுங்கள்
x
தினத்தந்தி 17 Jan 2017 1:15 AM GMT (Updated: 16 Jan 2017 12:28 PM GMT)

புத்தரின் தலைமை மடாலயத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் துறவிக்கான மனப் பக்குவத்தை அடையும் வரையில், கல்வியும் பயிற்சியும் அளிக்கப்படும்.

புத்தரின் தலைமை மடாலயத்தில் ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் துறவிக்கான மனப் பக்குவத்தை அடையும் வரையில், கல்வியும் பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடிந்ததும் சீடர்கள் அனைவரும், மக்களுக்கு தியானம் கற்றுத் தந்து, மக்களின் முன்னேற்றத்திற்கான சேவைக்காக நாடு முழுவதும் பிரித்து அனுப்பப்படுவார்கள். அப்படியொரு தருணம் இப்போது வந்தது. துறவு பயிற்சி பெற்ற அனைவரும் நாடு முழுவதும் ஒவ்வொரு இடத்திற்கு அனுப்பும் பணி நடந்தது.

ஒரு துறவிக்கு மட்டும் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்படவில்லை. அவர் நேராக புத்தரையே போய் சந்தித்தார்.

‘குருவே! நான் எங்கே செல்லட்டும்?’.

புத்தர் புன்னகைத்தபடி, ‘நீ செல்ல வேண்டிய இடத்தை நீயே தேர்வு செய்’ என்றார்.

உடனே அந்த சீடன், ஒரு இடத்தை குறிப்பிட்டு, அங்கு செல்ல விரும்புவதாக கூறினான்.

அதைக் கேட்ட புத்தர், ‘அந்தப் பகுதிக்கா? அங்கே இருப்பவர்கள், பக்தியோ, தியான உணர்வோ கொஞ்சமும் இல்லாதவர்கள். மேலும் மிகவும் முரடர்களும் கூட. இவையெல்லாம் தெரிந்துதான் அங்கு செல்ல வேண்டும் என்கிறாயா?’ என்று கேட்டார்.

 சீடனிடம் இருந்து ‘ஆமாம்’ என்ற பதில் வந்தது.

சீடனின் மன உறுதியை இன்னும் பரிசோதிக்க நினைத்த புத்தர், ‘அப்படியானால் சரி.. நான் உன்னிடம் மூன்று கேள்விகள் கேட்பேன். அந்த மூன்று கேள்விகளுக்கும் நீ சரியான பதிலை அளித்து விட்டாய் என்றால், நீ அங்கு செல்ல நான் அனுமதிக்கிறேன். அப்படியில்லை எனில், நான் கூறும் இடத்திற்குத்தான் நீ செல்ல வேண்டும்’ என்றார்.

சீடனும் ஒப்புக்கொண்டான்.

‘நீ அந்த இடத்திற்கு போனதும், அங்குள்ளவர்கள் உன்னை வரவேற்பதற்கு பதிலாக அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?’ புத்தரின் முதல் கேள்வி இது.

சீடரிடம் மகிழ்ச்சி. ‘நான் மிகவும் ஆனந்தமடைவேன். ஏனெனில் அவர்கள் என்னை அடிக்கவில்லை; துன்புறுத்தவில்லை. வசைபாடுவதோடு நிறுத்திக்கொண்டார்களே என்று, அவர்களுக்கு நன்றி சொல்வேன்’ என்றான்.

இரண்டாவது கேள்வியை முன் வைத்தார் புத்தர். ‘ஒரு வேளை அவர்கள் உன்னை திட்டாமல், அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?’.

‘அப்போதும் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில் அவர்கள் என்னை அடிப்பதோடு நிறுத்துக் கொண்டார்கள். நல்லவர்களாக இருக்கப் போய்தான், என்னை அவர்கள் கொல்லவில்லை என்று ஆனந்தம் கொள்வேன்’ என்றான் சீடன்.

புத்தரிடம் இருந்து இறுதிக் கேள்வி வந்தது. ‘சரி.. ஒரு வேளை அவர்கள் உன்னை கொன்று விட்டால் என்ன செய்வாய்?’

‘ஆஹா இன்னும் ஆனந்தப்படுவேன். இந்த பூலோக வாழ்வில் இருந்து எனக்கு மொத்தமாக சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டியதில்லை’ என்று பதிலளித்தான் சீடன்.

புத்தருக்கு மகிழ்ச்சி. ‘தேறிவிட்டாய்.. நன்றாக தேறிவிட்டாய். நீ விரும்பும் இடம் மட்டுமல்ல.. இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் உன்னை யாராலும் வீழ்த்த முடியாது. எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க பக்குவப்பட்டு விட்டாய். போய் வா..’ என்று வாழ்த்தி விடை கொடுத்தார் புத்தர்.

எந்த சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க கற்றுக்கொண்டு விட்டால், துன்பங்களின் நிழல் கூட நம்மை அணுக முடியாது.

Next Story