சூரியனுக்கு அருள் செய்த சக்கரபாணி சுவாமி


சூரியனுக்கு அருள் செய்த சக்கரபாணி சுவாமி
x
தினத்தந்தி 17 Jan 2017 2:30 AM GMT (Updated: 16 Jan 2017 1:25 PM GMT)

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில் தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும்.

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில் தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் நீராட வந்த பிரம்மதேவன், திருமாலின் அம்சமான ஸ்ரீசக்கரத்தை, காவிரிக்கரையில் பிரதிஷ்டை செய்து, சக்கரபாணி சுவாமியாக நினைத்து வழிபட்டு வந்தார்.

சக்கரபாணி சுவாமியின் பேரொளியைக் கண்ட சூரியன், பிரம்மதேவர் எச்சரித்தும் கேட்காமல், தன் ஒளியைக் கூட்டி வெப்பத்தால் உலகைச் சுட்டெரிக்க முற்பட்டார். ஆனால் சக்கரபாணி சுவாமி, சூரியனின் ஒளி முழுவதையும் கிரகித்து சூரியனை வலுவிழக்கச் செய்து விட்டார். தன் தவறை உணர்ந்த சூரியன், சக்கரபாணி சுவாமியைப் பணிந்து வழிபட்டு தன் சக்தியை மீண்டும் பெற்றார். இதனால் கும்பகோணத்திற்கு ‘பாஸ்கர ஷேத்திரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.

இந்தத் திருத்தலத்தில் சக்கரபாணி சுவாமியின் சன்னிதி கட்டுமலை மேல் அமைந்துள்ளது. மேலே படி ஏறிச் செல்ல வடக்கிலும், தெற்கிலும் உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரையான உத்தராயண காலத்தில் உத்தராயண வாசலும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையான தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன வாசலும் பயன்படுத்தப்படுகின்றன.

படி ஏறி மேலே சென்றதும் முன் மண்டபத்தில் கருவறைக்கு எதிரில், கைகூப்பி சுவாமியை தொழுதவாறு நிற்கும், செப்பினால் செய்யப்பட்ட சரபோஜி மன்னர் மற்றும் அவருடைய மகள் உருவச் சிலைகளைப் பார்க்கலாம். தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.

கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.

ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் பெருகும் என்பது நம்பிக்கை.

கோள்களின் நாயகனான சூரியன், இத்தல மூர்த்தியிடம் சரணடைந்து, பலன்பெற்றதால் நவகோள்களால் ஏற்படும் இன்னல்கள், தோ‌ஷங்கள் இத்தல சக்கரபாணி சுவாமியை வழிபட விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, ராகு திசை, கேது புத்தி, சர்ப்ப தோ‌ஷங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சக்கரபாணி சுவாமியை வழிபட இன்னல்கள் மறையும்.

–மாயூரன்.

Next Story