கந்தனுக்கு வேல் வழங்கிய அன்னை


கந்தனுக்கு வேல் வழங்கிய அன்னை
x
தினத்தந்தி 7 Feb 2017 10:15 AM GMT (Updated: 7 Feb 2017 10:15 AM GMT)

ஒரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போர் மூண்டது. இதில் தேவர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர்.

ரு முறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போர் மூண்டது. இதில் தேவர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர். அசுரர்களை அழிக்க முடியாமல், தேவர்கள் அனைவரும் ஓடி ஒளிந்து வாழ்ந்தனர். அசுரர்கள் கொடுத்த துன்பங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத தேவர்கள், அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டனர்.

தேவர்கள் அனைவரும், சிவபெருமானே அந்த அசுரர்களை அழிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். ஆனால் சிவபெருமான், ‘நான்தான் அவர்களுக்கு வரங்களை வழங்கினேன். நானே அவர்களை அழிப்பது என்பது முறையாகாது. எனவே என்னைப் போன்ற சக்தியையும், ஆற்றலையும் கொண்ட ஒரு தலைவனை உங்களுக்கு உருவாக்கித் தருகிறேன். அவன் உங்களின் சேனைகளுக்கு தலைமை தாங்கிச் சென்று, அசுரர்களை அழித்து, உங்களை துன்பங்களில் இருந்து காத்து அருள்வான்’ என்றார்.

இதையடுத்து கருணைக் கடலான சிவபெருமான், தனது தனிப்பட்ட சக்தியை பயன்படுத்தி, தனது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறியை வெளியிட்டார். அவை 6 தீப்பொறிகளாக பிரிந்து சரவணப் பொய்கையை சென்றடைந்தன. பின்னர் அந்த 6 தீப்பொறிகளும், 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் 6 பேரும் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு வந்தனர். ஒருநாள் பார்வதிதேவி, அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக மாற்றி ஞானப்பால் ஊட்டினார். இப்படி அசுரர்களை அழிப்பதற்காக அவதரித்தவரே முருகப்பெருமான் ஆவார்.

பழனி மலையில் ஆண்டி கோலத்தில் நின்ற முருகப்பெருமானுக்கு, அன்னை பார்வதி தேவி ஞான வேல் வழங்கினார். அதைக் கொண்டு அசுரர்களை அழிக்க ஆசி வழங்கினார். அவ்வாறு அன்னை பார்வதியானவள், முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிய நாள் தைப்பூசத் திருநாள் ஆகும். அதன் காரணமாகவே, முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் பழனி திருக்கோவிலில் மட்டும் தைப்பூச உற்சவம் 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Next Story