நினைத்ததை நிறைவேற்றும் கொட்டாரக்கரா மகா கணபதி


நினைத்ததை நிறைவேற்றும் கொட்டாரக்கரா மகா கணபதி
x
தினத்தந்தி 10 Feb 2017 10:17 AM GMT (Updated: 10 Feb 2017 10:17 AM GMT)

விநாயகர் என்றாலே ‘கொழுக்கட்டைப் பிரியர்’ என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

விநாயகர் என்றாலே ‘கொழுக்கட்டைப் பிரியர்’ என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கேரள மாநிலம், கொட்டாரக்கராவிலிருக்கும் விநாயகருக்கு ‘நெய்யப்பம்’ தான் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்.

தல வரலாறு

அரச குலத்தவர்கள் பலரையும் அழித்ததால் ஏற்பட்டப் பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவபெருமான் கோவில்களை நிறுவினார். அந்தக் கோவில்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவன் கோவிலும் ஒன்று.

கேரளாவின் புகழ்பெற்ற சிற்பியான பெருந்தச்சன் கொட்டாரக்கரா சிவனை வழிபட்ட பின்பு, அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு பலா மரத்தை பார்த்தார். அந்தப் பலா மரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, அதில் கணபதி திருமேனி ஒன்றைச் செய்தார்.

கொட்டாரக்கராவில் இருக்கும் சிவன் கோவிலில், அந்தத் திருமேனியை நிறுவ நினைத்த அவர், அதற்காகக் கோவில் நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், சிவன் கோவில் வளாகத்தில் கணபதியின் திருமேனி நிறுவப்பட்டுத் தனிக்கோவிலும் கட்டுமானம் செய்யப்பட்டது என்று இந்தக் கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் மகாகணபதியின் சன்னிதி அமைந்ததற்கான வரலாறு சொல்லப்படுகிறது.

இதுபோல், சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, கொட்டாரக்கராவில் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய நாராயணன் எனும் வேதியர் ஒருவர், தினமும் கொட்டாரக்கராவிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் அந்தக் கோவிலுக்குள் சென்று திரும்பிய போது, ஓரிடத்திலிருந்து ‘வேதியரே! இங்கிருக்கும் என்னையும் வணங்கிச் செல்லுங்கள்’ என்று குரல் கேட்டது.

அந்தக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த அவர், அங்கு ஒரு பலா மரம் சாய்ந்து கிடந்ததைக் கண்டார். அந்தப் பலாமரத்தின் வேர்ப்பகுதி இருந்த இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில், பலா மரத்தினாலான விநாயகர் உருவத் திருமேனி ஒன்று இருந்தது.

அந்தத் திருமேனியின் அழகைக் கண்டு வியந்த அவர், தன்னிடம் பேசியது அந்தப் பலா மரத்திலான விநாயகர்தான் என்பதைத் தெரிந்து கொண்டார். அவர், விநாயகரை அந்த இடத்திலேயே கோவில் கொண்டு, அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட விநாய கரும் அந்த இடத்திலேயே கோவில் கொண்டார். அதன் பிறகு, அங்கு விநாயகருக்குப் புதிதாகக் கோவில் கட்டப்பட்டது என்று மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது.

மகாகணபதி

கொட்டாரக்கரா சிவன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய விநாயகரை வழிபட்ட அனைவருக்கும், அவர்கள் வேண்டியது அனைத்தும் கிடைத்தது. அந்தப் பகுதி முழுவதும் புதிதாகத் தோன்றிய விநாயகரின் சிறப்பு பற்றிய செய்தி பரவத் தொடங்கியது.

அதனால், அந்தப் பகுதி மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்ற புதிய விநாயகர் கோவில், பரசுராமரால் நிறுவப்பட்ட முதன்மைக் கோவிலான சிவன் கோவிலை விடப் பெருமையுடையதாக மாற்றம் பெற்றது. அங்கிருந்த விநாயகரும் ‘மகாகணபதி’ என்று புதிய பெயரை பெற்றார்.

இங்குள்ள சிவன் கோவிலின் கருவறையில் பரசுராமரால் நிறுவப்பட்ட சிவலிங்கம் இருக்கிறது, கருவறையின் பின்புறம் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. இங்கிருக்கும் அம்மன் மேற்குப் பார்த்த நிலையில் இருப்பதால், மேற்கு என்பதைக் குறிக்கும் மலையாளச் சொல்லான படிஞ்ஞாயிறு என்பதைச் சேர்த்து ‘படிஞ்ஞாயிறு பகவதி’ என்று அழைக்கப்படுகிறார்.

புதிதாக அமைந்த மகாகணபதி கோவில் கருவறையில், பலா மரத்திலான மகாகணபதி அப்பம் ஒன்றைக் கையில் வைத்தபடி இருக்கிறார். கொழுக்கட்டைப் பிரியரான கணபதி, இந்தக் கோவிலில் நெய்யப்பப் பிரியராக இருப்பது தனிச்சிறப்பாகும்.

இக்கோவில் வளாகத்தில், தர்மசாஸ்தா, சுப்பிரமணிய சுவாமி, நாகதேவதைகள் போன்றவர்களுக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வழிபாடு

இக்கோவில் வளாகத்திலிருக்கும் அனைத்துச் சன்னிதிகளிலும் தினசரி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, சிவராத்திரி, ஆயில்யம்  மகம், நவராத்திரி, பிரதிஷ்டாதினம், தைப்பூசம், விசு, மண்டலச்சிறப்பு எனும் சிறப்பு விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.

மகாகணபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள், மகாகணபதிக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நெய்யப்பத்தைப் படைத்துத் தங்களின் வேண்டுதல்களை அவர் முன்பாகச் சொல்லி வழிபடுகின்றனர். நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறிவிடும் என்பது இங்கு வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக் கிறது.

கேரள மாநிலத்தின் நடனங்களில் ஒன்றான கதகளியாட்டம் கொட்டாரக்காரா மகாகணபதி கோவிலில்தான் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. எனவே, கதகளியாட்டக் கலைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது, இக்கோவிலுக்கு வந்து மகாகணபதிக்கு ’நெய்யப்ப வழிபாடு’ செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அமைவிடம்

கேரள மாநிலம், கொல்லம் எனும் ஊரில் இருந்து வடகிழக்கில் 27 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொட்டாரக்கரா என்ற திருத்தலம்.

 –தேனி மு.சுப்பிரமணி.

நெய்யப்ப வழிபாடு

மகாகணபதி கோவிலில் நெய்யப்ப வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இங்கு வரும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் தங்கள் வழிபாட்டுக்குத் தேவையான நெய்யப்பங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, பணத்தைச் செலுத்தினால் அதற்கான ரசீது வழங்கப்படுகிறது. பக்தர்களிடம் ரசீதுகளைப் பெற்றுக் கொண்டு, பணியாளர்கள் அதற்கான நெய்யப்பங்களை வழங்குகின்றனர். கணபதி சன்னிதிக்கு எதிரில், கோவில் பணியாளர்கள் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நெய்யப்பத்தைச் செய்து கொண்டே இருக்கின்றனர்.

கதகளியாட்டம்

கொட்டாரக்கரா பகுதியை ஆண்டு வந்த மன்னர் ஒருவர், மகாகணபதியை வழிபடும் பக்தராக இருந்தார். அவரது மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தனது மகளின் திருமண நாளில் பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடத்த விரும்பிய அவர், வடக்கு மலபார் பகுதியில் புகழ் பெற்றிருந்த ஒரு களியாட்டக் குழுவினரை அழைத்து வந்து ‘கிருஷ்ணன் களியாட்டம்’ என்ற கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார்.

மன்னர் அந்தக் குழுவினரை அழைத்து வருவதற்கான ஏற் பாடுகளைச் செய்தார். அந்தக் குழுவினர், ‘கொட்டாரக்கராப்   பகுதியில் இருக்கும் மக்களுக்குச் சிறிது கூட கலையுணர்வோ, அதை விரும்பும் தன்மையோ இருக்காது. எனவே, அங்கு  நிகழ்ச்சி நடத்த எங்களால், வர இயலாது’ என்று சொல்லி மறுத்து விட்டனர்.  

இதனால் வருத்தமுற்ற மன்னர், கொட்டாரக்கரா மகாகணபதியிடம் இது குறித்து முறையிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய விநாயகர், அவரை ‘ராமாயண காவியம்’ ஒன்றை எழுதச் சொன்னார். மன்னரும் ராமாயணத்தை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து எழுதி முடித்தார். அதற்கு ‘ராமனாட்டம்’ என்று பெயரிட்டு, அதை மகாகணபதி கோவிலில் வைத்து வழிபட்டார்.

அன்றிரவு மன்னருக்கு மீண்டும் ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவில், மகுடம், பச்சை, தாடி, மினுக்கு, கத்தி, கதை முதலிய பல உருவங்கள் தோன்றின. மன்னர் அந்த உருவங்கள் அனைத்தையும் கொண்டு, புதியதாக ஒரு களியாட்டத்தைத் தொடங்கினார். அந்தக் களியாட்டத்திற்குக் ‘கதகளியாட்டம்’ என்று பெயர் ஏற்பட்டது. மகாகணபதியின் அருளால்தான் இந்தக் ‘கதகளியாட்டம்’ என்ற அரியதொரு நடனக்கலை தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story