வரம் தரும் வனபத்திர காளி


வரம் தரும் வனபத்திர காளி
x
தினத்தந்தி 14 Feb 2017 2:30 AM GMT (Updated: 13 Feb 2017 10:48 AM GMT)

தமிழகம் மட்டுமின்றி பாரதம் முழுதும் சக்திக்கென பல புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.

மிழகம் மட்டுமின்றி பாரதம் முழுதும் சக்திக்கென பல புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. வடக்கே வைஷ்ணவ தேவி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 51 சக்தி பீடங்கள் மற்றும் எண்ணற்ற ஆலயங்களில் பராசக்தி, பல்வேறு பெயர்களில், தோற்றங்களில் கருணை மழை பொழிகிறாள். திருக்கடவூரில் அமிர்தகடேசுவரருடன் அபிராமியாகவும், திருவானைக்காவில் ஜம்புகேசுவரருடன் அகிலாண்டேசுவரியாகவும், மதுரையில் சோமசுந்தரருடன் மீனாட்சியாகவும், தில்லையில் நடராசருடன் சிவகாமியாகவும் இறைவி காட்சி தரு கிறார்.

அதே சமயம் காஞ்சியில் காமாட்சியாகவும், திருவேற்காட்டில் கருமாரியாகவும், சமயபுரத்தில் மாரியம்மனாகவும், புன்னைநல்லூரில் முத்துமாரியாகவும், உறையூரில் வெக்காளியாகவும், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தியாகவும், மைசூரில் சாமுண்டேசுவரியாகவும், கொல்லூரில் மூகாம்பிகையாகவும் தனிக் கோவில்களிலும் அம்பிகை அருளாட்சி செய்து வருகிறாள்.

தமிழ்நாட்டில் ஆதி தாயை, ‘கொற்றவை’ என்று வழிபட்ட தாக இலக்கியங்கள் விளக்குகின்றன. ‘மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அகத்தினைப் புறனே’ என்று தொல்காப்பியம் சொல்கிறது. பிற்காலத்தில் கொற்றவை வழிபாடு ‘காளி’ மற்றும் ‘துர்க்கை’ வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது.

காளிதேவி

ஓம், ஹ்ரீம், க்லீம் என்பன சாக்தப் பிரணவங்கள். இதில் க்லீம் என்பது காளி தேவியின் பீஜாட்சரமாகும்.

காளி அம்சத்தில் ஓம்காளி, மதுரகாளி, நித்திய காளி, ரஷா காளி, சியாமா காளி, ஸ்மசானகாளி, எல்லைக்காளி, தட்சிணகாளி, வெக்காளி, பத்திரகாளி என பல திரு உருவங்களில் ஆங்காங்கே தரிசனம் தருகின்றாள். காளி, துஷ்டர்களை நிக்ரஹம் செய்து பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்யும் தெய்வமாகவும், வெற்றி தேவதையாகவும் வர்ணிக் கப்படுகிறாள்.

இந்த பெண் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருந்தால், சக்தி அதிகம் என்று சொல்லப்படுகிறது. பட்டீசுரம் துர்க்கையம்மன், ஐவர்பாடி மகாபிரத்தியங்கிரா தேவி, துறையூர் வெக் காளியம்மன் போல, மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியும் வடக்கு நோக்கி காட்சி தருகிறாள்.

இத்திருக்கோவில் எங்கே இருக்கிறது?

வன பத்திரகாளி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. பசுமையான மலையடிவாரத்தில், குளுமையான பவானி ஆற்றின் கரையில், வனப்பகுதியிலே எழுந்துள்ள ஆலயம். இவ்விடத்துக்கு அருகே உள்ள மரங்கள் சூழ்ந்த பகுதியில் தான் ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அன்னையின் சன்னிதிக்குள் நுழையும் போது வலப்புறம் விநாயகரும் இடதுபுறம் முருகப் பெருமானும் வீற்றிருக்கின்றனர்.

காளி என்றதும் நாக்கை தொங்க விட்டு கோரைப் பற்கள் தெரிய அரக்கனை அழிக்கும் குரூர தோற்றம் இங்கே இல்லை. நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் திரிசூலம் தாங்கி சாந்த சொரூபியாய் அருளாட்சி செய் கிறாள். இதைத் தவிர இங்கே மூலத்திருமேனி, சுயம்பு வடிவில் எழுந்த லிங்கம் போன்ற வடிவில் இருப்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்கிறார்கள். இவ்விரு திருமேனிகளும் கருவறையிலேயேஇருப்பது சக்தியைஅதிகப்படுத்து கிறது.

பிரார்த்தனை


அருகில் உள்ள பவானி ஆற்றில் மூழ்கி எழுந்து இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளும் பகையும் விலகும், அதுவும் அமாவாசை என்றால் விசே‌ஷம் என்று நம்பிக்கையுடன் பல ஊர்களிலிருந்து  வரும் பக்தர்கள் சொல்கிறார்கள். ஆடி அமாவாசை சிறப்பென்றாலும் ஒவ்வொரு அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்ய ஏற்ற நாள்.

எதிரிகள் தாக்கத்திலிருந்து விடுபடவும், திருமணத்தடை விலகவும், பிள்ளைப் பேறு கிட்டவும் பவானி ஆற்றில் இருக்கும் உருண்டைக் கற்களை எடுத்து வந்து மஞ்சள் துணியில் முடிந்து இத்திருக்கோவிலின் மேற்கு சுற்றில் நிற்கும் தொரத்தா மரத்தில் கட்டிவிட்டு வேண்டிய வரம் தர பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சிவப்பு நிற காய்களுடன் நிற்கும் தொரத்தா மரம் என்னும் காட்டு மரம் தல விருட்சமாக இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு மருத்துவகுணமுடைய இம்மரத்தின் இலைகள் தோல் நோய் தீர்க்கும் திறனுடையது. இத்திருக்கோவிலின் எதிரே பூக்குண்டம் அமைக்கப்பட்டு ஆடிமாதத்தில் விழா நடைபெறுகிறது.

பஞ்சபாண்டவர்களுடன் இத்தலத்துக்குத் தொடர்புள்ள தாக ஒரு புராணக்கதை உள்ளது.

நீலமலைத் தொடரில் கோட்டை அமைத்துக் கொண்டு பாகாசுரன் என்ற அரக்கன் வலிமையுடன் ஆட்சி செய்து வந்தான். பெருந்தீனி தின்னும் அவனுக்கு, ஊர்மக்கள் உணவை வண்டியில் ஏற்றிச் சென்று கொடுக்க வேண்டும். சில சமயம் உணவு போதவில்லை என்று வண்டி மாடு களையும், மனிதர்களையும் விழுங்கி விடுவானாம்.

இந்தக் கொடுஞ்செயலைக் கேள்விப்பட்ட பஞ்சபாண்டவரில் ஒருவனான பீமன், பாகாசுரனை அழிக்க காளி தேவியை வழிபட்டான். பின்னர் அசுரனுடன் போரிட்டு அவனை அழித்தான்.  இறக்கும் தருவாயில் அவன் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப, காளியின் காவல் பூதமாக பாகாசுரன் அமர்த்தப்பட்டான். இத்திருக்கோவிலின் முன்புறம் பாகாசுரனுக்கும், பீமனுக்கும் உருச்சிலைகள் இருப்பதும், இத்தலத்துக்கு மேற்கே உள்ள ஊட்டி மலை ஏறும் போது 52 வது வளைவில் அருகில் இருக்கும் பாகாசுரன் கோட்டையும் இந்த புராண வரலாற்றுக்குச் சான்றுகள் என்கிறார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும்.

‘பத்திர’ என்றால் மங்கலம் என்று பொருள்படும். இத்தலத்தில் வனத்திடையே நின்றருளும் வனபத்திரகாளி மங்கலத்தையும், வேண்டும் வரத்தையும் தருவாள் என்பது வழிபடுவோரின் நம்பிக்கை.

–டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர்.

Next Story