பாலாற்றில் கிடைத்த சுந்தரராஜ பெருமாள்


பாலாற்றில் கிடைத்த சுந்தரராஜ பெருமாள்
x
தினத்தந்தி 14 Feb 2017 2:30 AM GMT (Updated: 13 Feb 2017 11:09 AM GMT)

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் சுந்தரராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இவ்வூர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்யபுரி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் சுந்தரராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இவ்வூர் பல நூற்றாண்டுகளுக்கு முன் சத்யபுரி  ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

கோவில் வரலாறு

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மெய்யூரில் ஏராளமான வைணவக் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்கள் தினமும் காலையில்  புறப்பட்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றங்கரைக்கு வந்து நீராடுவார்கள். பின்னர் பெருமாளை நினைத்து பாடல்களை பாடியபடி மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் பாலாற்றில் இறை சிந்தனையுடன் குளித்துக் கொண்டிருக்கையில், நீருக்குள் ஏதோ ஒரு பொருள் இடறியது. ஒரு பக்தர், தண்ணீரில் மூழ்கி ‘அது என்ன?’ என்று அரிய முற்பட்டார்.

பொருளின் எடை அதிகமாக இருந்ததால், மேலும் சிலரை உதவிக்கு அழைத்து, அந்தப் பொருளை வெளியே கொண்டு வந்தனர். அப்போது தான் அது பெருமாளின் பஞ்சலோக சிலை என்பது தெரியவந்தது. பக்தர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். மேலும் அவர்களை மகிழ்வடையச் செய்யும் வகையில், நீருக்கடியில் தாயார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோரது பஞ்சலோக விக்கிரகங்களும் கிடைக்கப்பெற்றன.

அனைத்து விக்கிரகங்களையும், தங்கள் ஊரில் உள்ள சிறிய கோவிலில் பிரதிஷ்டை செய்தனர். இந்த விக்கிரகங்கள் பற்றிய விவரங்களை அறிய முயன்றபோது, அவை அனைத்தும் நாகை சவுந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதும், படையெடுப்பு மற்றும் விக்கிரக கடத்தல் செயல்களின் காரணமாக பாலாற்றில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மெய்யூரில் உள்ள பெருமாளுக்கு சுந்தரராஜப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது.

நாகை பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் தன்னை ஒரு பெண்ணாக பாவித்துக் கொண்டு, நாகப்பட்டினத்தில் கோலோச்சும் சவுந்திரராஜப் பெருமாளின்        அழகினில் தன்னை மறந்து, பாசுரங்கள் பாடி யிருக்கிறார். நாகைப்பெருமாளே இத்தலத்தில் சுந்தரராஜப் பெருமாளாக எழுந்தருளியுள்ளதால், மெய்யூரில் வாழ்ந்து வந்த வைணவப் பண்டிதர்கள், நாகைத் தலப் பெருமாள் பாசுரங் களையே இத்தல பெருமாளுக்கும் பாடி வழிபாடு செய்கிறார்கள். திருமங்கையாழ்வார் பாடிய நாகைத் தலப் பாசுரங்களே இன்றும் மெய்யூர் பெருமாளுக்கு உகந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நித்ய கைங்கர்யங்களும், சேவா காலமும் நடைபெறுகிறது.

ஆலய அமைப்பு

இக்கோவில் பல்லவர் காலத்தைச் சார்ந்தது என சிலர் கூறுகின்றனர். இந்தக் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. கோவில் நுழைவு வாசல் மட்டுமே உள்ளது. இதைக் கடந்து சென்றால், தீப ஸ்தம்பம், அதையடுத்து பலிபீடம் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள பிரகாரப்பகுதி சற்று விசாலமாக உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் நுழைந்தால், சுந்தரராஜப் பெருமாளை நோக்கிய வண்ணம் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் கை கூப்பிய வண்ணம் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார்.

கருடாழ்வார் சன்னிதிக்கு நேரெதிரே, கிழக்கு நோக்கிய திசையில் தனிச்சன்னிதியில் சவுந்தர்யமான, புன்னகை கோலத்துடன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலது கையில் அபயம் அளிக்கும் வண்ணமும், இடது கையை மடக்கிய வண்ணமும் காணப்படுகிறார். இவருக்கு வலது மற்றும் இடதுபுறம் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அருள்பாலிக் கிறார்கள்.

பெருமாள் சன்னிதிக்கு வலப்பக்கத்தில் தனிச்சன்னிதியில் தாயார் எழுந்தருளியுள்ளார். தாயாரின் திருநாமம் சுந்தரவல்லி என்பதாகும். பத்மாசன கோலத்தில், வலது கையில் அபய முத்திரையுடனும், இடது கை கீழ் நோக்கிய வண்ணமாய் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். சிரித்த முகத்துடன், பக்தர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறாள் இந்த தாயார். பக்தர்கள் தரிசனம் முடித்து செல்கையில், அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்படியான திருமுகம் இந்த தாயாருக்கு. இத்திருத்தல அபிமானிகள் தங்களுக்கு சங்கடம் ஏற்பட்டால் முதலில் இத்தலத் தாயாரிடம் கோரிக்கை வைத்து பலனடைந்து வருகின்றனர்.

மற்ற சன்னிதிகள்


பெருமாள் சன்னிதிக்கு இடப்பக்கத்தில் ஆண்டாள் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியை கடந்து வந்தால் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள் உருவங்கள் கல்லினால் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அவர் களுக்கு முன் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள் உற்சவர் விக்கிரகங்களை காணலாம்.   

இத்தலத்தில் திருக்கல்யாண உற்சவ வைபவம் விசே‌ஷமானதாகும். சுந்தரராஜப் பெருமாளுக்கும், சுந்தரவல்லி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடத்தி வழிபட்டால், ஒரு மண்டல காலத்திற்குள் பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள். திருமணம் கைகூடியவர்கள், தம்பதி சமேதராய் வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கி விட்டுச் செல்கின்றனர். இதே போல் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தையோடு வந்து பெருமாளையும், தாயாரையும் வணங்கிச் செல்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம், நவராத்திரி உற்சவம், பவித்ரோத்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, மாசியில் லட்சார்ச்சனை, பங்குனி உத்திரம், ஆழ்வார், ஆச்சாரியர்கள் திருநட்சத்திரங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்துள்ள பாலாற்று பாலத்தைத் தாண்டியதும் வலது பக்கம் ஒரு சாலை பிரியும். அந்த சாலையில் 2½ கிலோமீட்டர் தூரம் சென்றால் மெய்யூர் திருத்தலத்தை அடையலாம். செங்கல்பட்டிலிருந்து பினாயூர், பிலாப்பூர், ஒரங்காட்டுப்பேட்டை, சித்தனகாவூர் செல்லும் பேருந்துகளின் மூலமும் மெய்யூர் வந்து சேரலாம். சென்னை கோயம்பேட்டில் இருந்தும் மெய்யூர் செல்ல பஸ் வசதி உள்ளது.

–மு.வெ.சம்பத், சென்னை.

தனிச்  சன்னிதியில்  ஆஞ்சநேயர்

இந்த ஆலயத்தில் நீண்டகாலமாக ஆஞ்சநேயர் சன்னிதி தனியாக கிடையாது. கருடாழ்வார் சன்னிதியில், அவரது பாதத்தின் கீழ்தான் ஆஞ்சநேயர் காட்சியளித்து வந்தார். சில வருடங்களாக கோவிலில் நித்ய கைங்கர்யங்கள் கூட நடைபெறாத நிலை ஏற்பட்டது. ஊர் மக்களும், கோவில் கைங்கர்ய சபாவினரும் மிகுந்த வேதனையில் இருந்த போது, அந்த ஊருக்கு வந்த ஒரு பெரியவர், கோவிலைச் சுற்றிப்பார்த்தார். பின்னர் அவர், ‘கருடாழ்வாருக்கு கீழே ஆஞ்சநேயர் இருக்கக் கூடாது’ என்று எடுத்துரைத்தார். மேலும் ‘இந்த அமைப்பு ஊர் சுபிட்சம் அடைய தடையாகவே இருக்கும். எனவே ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி கட்டுங்கள்’ என்றார். இதையடுத்து ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டது. அதன் பிறகே கோவிலில் எந்தப் பிரச்சினையும் இன்றி, தினசரி பூஜைகள் நடைபெறத் தொடங்கின. ஆலயமும் பிரசித்திப்பெறத் தொடங்கியது.


Next Story