வியாபாரம் செழிக்கச் செய்யும் அம்மைநாதர்


வியாபாரம் செழிக்கச் செய்யும் அம்மைநாதர்
x
தினத்தந்தி 14 March 2017 2:15 AM GMT (Updated: 13 March 2017 1:42 PM GMT)

திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மகாதேவி.

திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மகாதேவி. இங்கு தாமிர பரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது அம்மநாதர் சுவாமி திருக்கோவில். சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் இக்கோவில் நவ கயிலாயத்தில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. இங்குள்ள இறைவன், அம்மைநாதர் சுவாமி என்ற கயிலாயநாத சுவாமியாகவும், இறைவி ஆவுடையம்மனாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த ஆலயத்திற்கு தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் இரண்டு வாசல்கள் உள்ளன. கிழக்கு முக வாசலோடு அழகிய சிறிய ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோவிலின் வடக்குப் பகுதியில் அம்மைநாதர் சுவாமியும், தெற்கு பகுதியில் ஆவுடையம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜர், சிவகாமி அம்மையுடனும், காரைக்கால் அம்மையுடனும் உள்ளார். சூரியன், சந்திரன் ஆகியோர் மேற்கு நோக்கி உள்ளனர்.

கோவிலின் மேற்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும், வடமேற்கில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையும், கஜலட்சுமியும், சனீஸ்வரரும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். தலவிருட்சம் ஆலமரம்.

தல வரலாறு


ஆலயத்தின் உள் பகுதியில் அமைந்த தூண் ஒன்றில், இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட உரோமச முனிவரின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை உரோமச முனிவர், கயிலாய மலையை அடைந்து, நித்தியத்துவம் வேண்டுமென்று கேட்டு ஆலமரத்தின் அடியில் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்து வந்தார். இதையடுத்து உரோமச முனிவரின் முன்பு எழுந்தருளிய சிவபெருமான், முனிவர் கேட்ட வரத்தை வழங்கினார்.

இத்தலத்தின் மூலஸ்தானத்தை இரண்டு பெண்கள் சேர்ந்து கட்டியதாக வரலாறு உள்ளது. அந்த பெண்கள் இருவரும் சகோதரிகள். ஈசனின் மீது மாறாத பக்தி கொண்டவர்கள். அவர்கள் நெல் குத்தும் தொழில் செய்து பணம் ஈட்டி வந்தனர். அவ்வாறு சம்பாதித்து சேமித்த பணத்தைக் கொண்டு, இறைவனின் கோவிலுக்கு மூலஸ்தானம் கட்டும் பணியைத் தொடங்கினர். அவர்களிடம் இருந்த பணம் விரைவிலேயே கரைந்து போனது. இருப்பினும் எப்பாடுபட்டாவது மூலஸ்தானத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று எண்ணினர். ஆனால் வழிதான் தெரியவில்லை.

இந்த நிலையில் அந்த சகோதரிகளின் பக்தியை நினைத்து மகிழ்ந்த ஈசன், ஒரு முதியவர் வேடத்தில் அவர்கள் இருப்பிடம் வந்தார். அவருக்கு சகோதரிகள் இருவரும் உணவளித்து மரியாதை செலுத்தினர். ஈசன் அவர்களை ஆசீர்வதித்து மறைந்தார். அவர்கள் இல்லமெல்லாம் செல்வம் கொழித்தது. அதைக் கொண்டு சகோதரிகள் இருவரும், கோவிலின் மூலஸ்தானத்தை கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது. இதற்கு சான்றாகவே ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள தூணில் இரண்டு பெண்கள் நெல் குத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆலயத்தின் அருகில் பக்தவச்சலார் கோவில் உள்ளது. யாசமா முனிவருக்கு முக்தி கொடுத்தவர் பக்தவச்சலார். இந்தக் கோவில் அருகில்  யாக தீர்த்தம் இருக்கிறது. அம்மநாதர் கோவிலுக்கும், யாக தீர்த்தத்திற்கும் இடையே ரணவிமோசன பாறை ஒன்று உள்ளது. இங்கு தொடர்ந்து 41 நாட்கள் விடாமல் ஸ்நானம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் மார்கழி மாதத்தில் மகாவிதிபாகம் என்ற திருவிழா நடக்கும். இந்த திருவிழா அன்று அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இந்தப் பகுதியில் சங்கமிக்கும் என்பது புராணம் கூறும் வரலாறு. இந்த ஆலயமானது தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும். ஐப்பசி திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய முக்கிய திருவிழாக்கள் இங்கு சிறப்பாக நடை பெறுகிறது. இத்தலத்து இறைவனை வழிபடுதல், தஞ்சை அருகே உள்ள திங்களூர் சிவபெருமானை வழிபடுதலுக்கு சமமானதாகும்.

திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதியும், ரெயில் வசதியும் உள்ளன. சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு நாமும் செல்வோம். சிவனருள் பெறுவோம்!.

–நெல்லை வேலவன்.

அரிசி தானம்

இந்தக் கோவிலில் சிவபெருமான், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். அரிசி வியாபாரிகள், தங்களது வியாபாரம் செழிக்க இந்தக் கோவிலுக்கு வந்து அரிசி தானம், அன்னதானம் செய்து வருகின்றனர். திருமண தோ‌ஷம் உள்ளவர்கள் மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்கிறார்கள். மேலும் அம்பாள் சன்னிதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுவதும் பிரார்த்தனையாக உள்ளது.

Next Story