மறப்போம், மன்னிப்போம்


மறப்போம், மன்னிப்போம்
x
தினத்தந்தி 17 March 2017 12:00 AM GMT (Updated: 16 March 2017 12:31 PM GMT)

மனிதன் சில நேரங்களில் அவன் அறிந்தோ, அறியாமலோ பிறருக்கு தீங்கிழைத்து விடுவதுண்டு.

னிதன் சில நேரங்களில் அவன் அறிந்தோ, அறியாமலோ பிறருக்கு தீங்கிழைத்து விடுவதுண்டு. அல்லது அடுத்தவர்களின் இன்னல்களுக்கு சிலர் ஆளாகிவிடுவதும் உண்டு. இதுபோன்ற நேரங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு நல்வழி காட்டித் தருகிறது:

‘அந்த (பயபக்தியாளர்கள்) எத்தகையவர்களென்றால் மனிதர்க(ளின்தவறுக)ளை மன்னிப்பவர்கள். அல்லாஹ் (இவ்வாறு) நன்மை செய்கிறவர்களையே நேசிக்கிறான்’ (3:134).

‘நீங்கள் மன்னித்து விடுவது இறை பக்திக்கு மிக நெருக்கமானதாகும்’ (2:237).

‘எனவே (தவறு செய்தவர்களை) அவர்கள் மன்னித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன்; மிகக்கிருபையுடையவன்’ (24:22).

இறைவனுக்கு பிடித்த குணம்

அல்லாஹ் தரும் அற்புதமான மன்னிப்பை நாம் அழுது, தொழுது பெற்றுக்கொள்வது போல நாமும் நமக்கு தீங்கு செய்தவர்களின் குற்றங்குறைகளை மனதார மன்னிக்க முன்வரவேண்டும். ‘மன்னித்தல்’ என்பது அல்லாஹ்வுக்கு மிகமிக பிடித்தமான ஒருகுணம். அதுமட்டுமல்ல இதன்மூலம் நமது ‘தக்வா’ (பயபக்தியும்) பலம் பெறுகிறது.

திருக்குர்ஆனின் வழியாக நாம் தக்வாவைப் பெறுவது போல் நாம் அடுத்தவர்களுக்கு அளிக்கும் ‘அஃப்வு’ (மன்னிப்பு வழங்குதல்) என்ற அற்புத நற்குணத்தின் மூலமும் இறையச்சத்தை நாம் பெறமுடியும்.

புனித திருக்குர்ஆன், ‘மன்னியுங்கள், மன்னித்து விடுங்கள்’ என்று இதைத்தானே அடிக்கடி நமக்கு போதித்துக் கொண்டே இருக்கிறது.

மன்னிப்பதற்கு முதலில் மனம் வர வேண்டும். உதட்டளவில் ‘உன்னை நான் மன்னித்து விட்டேன்’ என்று சொல்லிவிட்டு, மனம் முழுவதும் விரோதங்களை அடுக்கி வைத்திருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இந்தநிலை நம்மிடம் இருந்து நீங்க அற்புதமான வழி, நமது பகைவர்களை மன்னித்து, அவர்களின் குற்றங்குறைகளை முற்றிலுமாக மறந்துவிடுவது தான்.

நமது கோபத்தை அடக்கினால் மட்டும் போதாது. கூடவே நமது மன்னிப்பையும் அதனுடன் சேர்த்தே வெளிப்படுத்தவேண்டும் என்பது திருக்குர்ஆன் கூறும் வழியாகும்.

‘அவர்கள் தமது கோபத்தை மென்று விழுங்கி விடுபவர்கள்; மனிதர்(களின் தவறு)களை மன்னிப்பவர்கள்’ (3:134).

திருக்குர்ஆனில் இவ்வாறு கோபத்தை மென்று விழுங்குவது பற்றிச் சொன்ன அல்லாஹ், தொடர்ந்து கூறுகிறான், ‘மக்களின் குற்றங்களை மன்னிக்க வேண்டும்’. இதன் மூலம் கோபத்தை கைவிடுவதுடன், மன்னிக்கவும் வேண்டும் என்று வற்புறுத்துகிறான் இறைவன்.

ஒருவருக்கொருவர் மன்னித்துக் கொள்கிறபோதுதான் நமக்குள் சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம் வளரும். பகை, வெறுப்பு, வஞ்சம், வைராக்கியம், சண்டை, சச்சரவு, விரோதம், குரோதம் என்பன போன்ற தீய எண்ணங்கள் ஒழியும்.

மேலும் இதுபோன்ற கெட்ட எண்ணங்களை நெஞ்சம் நிறைய நிரப்பிவைத்திருக்கிற போது அந்நெஞ்சத்தில் இருந்து மன்னிப்பை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறரை நாம் மன்னிப்பதால் நமது தரம் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. சொல்லப்போனால், நமது உயர்வின் தரப்பட்டியல் ‘பயபக்தியாளர்’ என பதவி உயர்வு பெற்று விடுகிறது. இதைவிட வேறு என்ன உயர் பதவி வேண்டும் நமக்கு.

அருளாளன் அல்லாஹ் ‘மன்னிப்பவன்’ என புனித குர்ஆனில் சுமார் எழுபது இடங்களுக்கும் மேல் இடம்பெற்றுள்ளது. ‘எழுபது தாய்மார்களை விட கிருபையுள்ளவன் அவன்’ என்கிறது இன்னொரு நபிமொழி.

ஒரு தாயின் கிருபையே, தவறு செய்து விட்ட தன் பிள்ளைகளை முற்றிலும் மறந்து மனப்பூர்வமாக மன்னிப்பது தானே. அப்படியானால் நாம் ஏன் நம்மைச் சுற்றியிருப்பவர்களை மன்னிக்க முயற்சிக்கக் கூடாது?.

நமது உறவினர்கள், அல்லது நண்பர்களில் சிலரது உறவை ஏதோவொரு சிறு பிரச்சினையினால் நீண்டகாலமாக புறக்கணித்திருக்கலாம். அன்றைக்கே அவற்றை மறந்து மன்னித்திருந்தால் இன்றைக்கு நமது நட்புறவும், நல்லுறவும் இன்னும் சற்று மேம்பட்டிருக்கும் அல்லவா?.

இப்போதும் கூட காலம் ஒன்றும் கடந்து விடவில்லை, ஏதோ ஒரு நன்னாள், பண்டிகை நாள், சுபநாள், பிறப்பு, இறப்பு தினங்கள், வீட்டு விச‌ஷங்கள் போன்றவற்றை முன் வைத்து ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பேசி உறவைப்பேணலாம். வாழ்கிற நாட்களை அற்பமாக வாழாமல் மிக அற்புதமாக வாழலாமே.

யாராவது செய்துவிட்ட தமது தவறுகளை நினைத்து வருந்தி நம்மிடம் மன்னிப்புக்கேட்டால், நிச்சயம் நாமும் அவற்றை மறந்து, மனப்பூர்வமாக நமது மன்னிப்பை வழங்க வேண்டும். இதுதான் ஒரு இறையடியாரின் இன்னழகு.

மனம் முழுவதும் அவரவர்களின் குற்றங்களை பட்டியல் போட்டு வைத்திருப்பதில் நமக்கு என்ன பலன்?. நல்ல முறையில் அவர்களை மன்னித்தால் அல்லவா நமக்கு நல்லதொரு பலன் கிடைக்கும்.

நீங்கள் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பின் பலன் புரியவரும் உங்களுக்கு. அதுபோல, நீங்கள் செய்து விட்ட தவறுக்காக நீங்கள் யாரிடமாவது மன்னிப்பை பெற்றுப் பாருங்கள். அப்போதுதான் உங்களுக்கு மன்னிப்பின் அருமை புரியும்.

இன்றைக்கு தேசமெங்கும் பல குடும்பங்களில் விவாகரத்துப் பிரச்சினைகள் தலைதூக்கி நிற்பதற்கு மூலகாரணம் கணவன்–மனைவி இருவரும் தங்களுக்குள் விட்டுக்கொடுப்பதில்லை; மன்னிப்பதில்லை என்பதுதான். இந்த குற்றச்சாட்டுகள் தான் முதன்மை பெற்றிருப்பதை பல புள்ளிவிவரங்கள் புலப்படுத்துகின்றன.

எனவே முதலில் திருமணத் தம்பதியர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது, மன்னிப்பு என்ற மகத்தான பண்புதான். இந்த குணம் மட்டும் நம்மிடம் வந்துவிட்டால் நிச்சயம் நாம் தான் மேம்பட்டவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நபிகள் நாயகம் தங்களது இறுதிப் பத்தாண்டுகளில் பெரும் பேரும் புகழும் பெற்றதற்கு காரணம் அவர்களது மன்னிக்கும் மனப்பான்மை தான் என்றால் அது மிகையல்ல. அவ்வாறு தான் அவர்களது தோழர்களும் வாழ்ந்தார்கள். அவர்களை அடியொற்றி வாழையடி வாழையாக வந்தவர்களும் வாழ்ந்தார்கள். எனவே நாமும் அவ்வாறே மாற்றார் யாராயினும் அவரவரின்  குற்றங்குறைகளை மனதார மன்னித்து வாழ்வோமாக.

வாருங்கள், நமது தவறுகளை தவிர்ப்போம், பிறர் தவறுகளை மன்னிப்போம்.

மவுலவி எஸ்.என்.ஆர்.‌ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.

Next Story