உழவனிடம் உணவு கேட்ட சிவபெருமான்


உழவனிடம் உணவு கேட்ட சிவபெருமான்
x
தினத்தந்தி 28 March 2017 1:15 AM GMT (Updated: 27 March 2017 12:30 PM GMT)

இறைவன் பூத கணங்களுக்கு நடுவே கயிலாசத்தில் மட்டும் இருப்பதில்லை. பூவுலகிலும் அவ்வப்போது மக்களோடு மக்களாகக் கலந்து தனது அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய செய்திகள் ஓராயிரம்.

றைவன் பூத கணங்களுக்கு நடுவே கயிலாசத்தில் மட்டும் இருப்பதில்லை. பூவுலகிலும் அவ்வப்போது மக்களோடு மக்களாகக் கலந்து தனது அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய செய்திகள் ஓராயிரம்.

மதுரையம்பதியில் வைகை நதியில் நீர் பெருக்கெடுத்தது. அந்த ஆற்றின் கரையை அடைப்பதற்காக பாண்டிய மன்னன் ஊர் மக்கள் அனைவரையும் வீட்டிற்கு ஒருவராக நியமித்தான். வந்தி என்ற கிழவி தந்தை பிட்டை சாப்பிட்டு விட்டு, அவருக்கு பதிலாக ஈசனே பணிக்கு சென்றார் என்பது திருவிளையாடல் புராணக் கதைகளுள் ஒன்று.

ஒரு முறை சுந்தரர் பசியால் வாடியபோது, இறைவன் முதியவர் வேடமிட்டு திருவோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்று வந்து சுந்தரரின் பசியை ஆற்றினார். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கச்சூரில் நடந்த திருவிளையாடல்.

தினை விளைந்த கதை

அதே போல இறைவன் ஒரு சிற்றூருக்குள் நுழைகிறார். வயல் நிறைந்த பகுதிக்குள் சென்றவுடன், அங்கு உழுது கொண்டிருக்கும் பெரியார் என்ற ஒரு விவசாயியிடம், ‘எனக்கு பசிக்கிறது.. உணவு இருந்தால் கொடு!’ என்கிறார். வயோதிகனாக வந்தது இறைவன் என்று அறியாத உழவன், ‘இங்கேயே காத்திரு!’ என்று சொல்லி விட்டு தன் குடிசைக்குச் சென்று பழைய சோறு எடுத்து வந்தார்.

உணவுடன் வயல் பகுதிக்கு வந்தபோது, உழுது கொண்டிருந்த நிலத்தில் முழுவதும் தினை விளைந்திருந்தது. கதிர்கள் முற்றி தொங்கிக்கொண்டிருந்த அற்புதக் காட்சியைக் கண்டு அந்த முதியவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார். அந்த முதியவருக்கு, இறைவன் அருட்காட்சி காட்டி மறைந்து போனார்.

தேவருக்கும், ஞானிகளுக்கும் கூட அவ்வளவு எளிதில் கிட்டாத சிவபெருமானின் தரி சனம், மண்ணுலகில் ஏழை, பணக்காரன், உயர்சாதி, கீழ்சாதி என்ற பேதம் இல்லாமல் கிடைத்த இறைவனின் திரு விளையாடலை எண்ணினால் வியப்பு மேலிடாமல் இல்லை. அதை நினைக்கும் போதெல்லாம் நம் உடலும், உள்ளமும் உருகுகிறது.

சரி இறைவனால் ஒரு சில நிமிடங்களில் தினை விளைந்த ஊர் எங்கே இருக்கிறது...

திருத்தினை நகர்

அந்த ஊருக்குப் பெயரே ‘திருத் தினை நகர்’ என்பதாகும். நாளடைவில் பேச்சு வழக்கில் தீர்த்தனகிரி என்று பெயர்மாறி அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் கடலூரில் இருந்து புவனகிரி செல்லும் சாலையில் மேட்டுப்பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து உள்ளே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் வயல் பகுதிகளின் நடுவே உள்ள சாலையில் பெண்ணையாற்றின் வடகரைப் பகுதியில் இருக்கிறது திருத்தினை நகர் என்ற தீர்த்தனகிரி கிராமம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவராப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

நீறுதாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறுதாங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக் கற்றை அம்சடை மேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு
அரிய சோதியை  வரிவராய் உக்ளும்
சேறுதாங்கிய திருத்தினை நகருள்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனளே!


என்பது அவரது முதற்பாடல்.

ஆலய அமைப்பு

மூன்று நிலை ராஜகோபுரம், பழமையான ஆலயம் என்பதை பறைசாற்றுகிறது. கருவறையில் சதுரமான பாணத்தின் மீது உயர்ந்த சுயம்பு லிங்கமாக இறைவன் காட்சி தருகிறார். மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர் தினை விளைவித்தவர் என்பதால், இவருக்கு தினையமுது படைக்கப் படுகிறது.

மற்ற சிவாலயங்களைப் போலவே, திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், நால்வர், பைரவர், சூரியன், நடராசர், பிரம்மா , திருமால், துர்க்கை சண்டேசுவரர் எழுந்தருளியுள்ளனர்.

இத்திருத்தலத்தில் உள்ள தென்முகக் கடவுள் யோக தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார். வழக் கம் போல ஒரு காலை மடித்து மறுகாலை தொங்க விட்டுக் கொண்டிருக்கும் கோலம் இங்கே இல்லை. மாறாக இருகால்களையும் மடக்கிக் கொண்டு சுகாசனத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந் திருப்பது எங்குமில்லாச் சிறப்பாகச் சொல்லப்படு கிறது. இந்த ஆலயத்தில் சண்டேசுவரர் மனைவியுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பாகும். நவக் கிரகங்கள் வெளியே வடகிழக்கு மூலையில் இருக்கின்றன.

வெளியே கொடிமரம் அருகே தெற்கு நோக்கிய சன்னிதியில் அகன்ற கடுமையான பெரிய விழிகளுடன், கருந்தடக் கண்ணி என்ற பெயரில் நின்ற நிலையில் அம்பாள் அருளாட்சி செய்கிறார். அம்பிகைக்கு, ஈஸ்வரனைப் போலவே மூன்று கண்கள் இருப்பது பெரும் சிறப்பாகும்.

முருகப்பெருமான் சன்னிதி அருகே வடமேற்கு பகுதியில் தல விருட்சமான சரக்கொன்றை மரம் மஞ்சள் பூக்களுடன் மலர்ந்து நிற்கிறது. ஷாம்பவ தீர்த்தம் என்னும் குளத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நோய்கள் தீரும். குறிப்பாக சருமநோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர்.

Next Story