திருமணத்தடை அகற்றும் திருவைராணிக்குளம் மகாதேவர்


திருமணத்தடை அகற்றும்  திருவைராணிக்குளம் மகாதேவர்
x
தினத்தந்தி 14 April 2017 1:00 AM GMT (Updated: 13 April 2017 1:21 PM GMT)

வெடியூர், அகவூர், வெண்மணி எனும் மூன்று உயர்வகுப்பினரின் குடும்பங்கள் கேரளப் பகுதியில் வசித்து வந்தனர். அகவூர் குடும்பத்தின் மூத்த நபருக்குத் ‘தம்பிரான்’ எனும் சிற்றரசர் பட்டமிருந்தது.

திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கவும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழவும் வழிகாட்டும் தலமாக விளங்குகிறது, கேரள மாநிலம், திருவைராணிக்குளம் மகாதேவர் கோவில்.

தல வரலாறு

வெடியூர், அகவூர், வெண்மணி எனும் மூன்று உயர்வகுப்பினரின் குடும்பங்கள் கேரளப் பகுதியில் வசித்து வந்தனர். அகவூர் குடும்பத்தின் மூத்த நபருக்குத் ‘தம்பிரான்’ எனும் சிற்றரசர் பட்டமிருந்தது. அதனால், அந்தக் குடும்பத்தினருக்கு உதவியாளராக அகவூர் சாத்தன் என்பவர் நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வந்தார்.

அகவூர் தம்பிரான், அங்கிருந்த ஆற்றின் மறுகரையிலிருந்த மகாதேவர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அகவூர் தம்பிரானுக்கு வயதாகி விட்ட நிலையில், ஆற்றைக் கடந்து சென்று, மகாதேவரை வழிபட்டு வருவது கடினமாக இருந்தது. அதைக் கண்ட அகவூர் சாத்தன், படகு ஒன்று செய்து, அதன் மூலம் எளிமையாக ஆற்றைக் கடந்து சென்று மகாதேவரை வழிபட்டுத் திரும்ப உதவி செய்தார்.

அகவூர் தம்பிரானுக்கு மேலும் வயதாகிய நிலையில், படகின் மூலம் ஆற்றைக் கடந்து சென்று வழிபாடு செய்து திரும்புவதும் கடினமாகிப் போனது. இதனால் வரும் காலத்தில் மகாதேவரை வழிபட முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. இருப்பினும், அவர் தன் வழிபாட்டை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் அவர், மகாதேவரை வழிபட்டுத் திரும்பி வந்த போது, தன் கையில் வைத்திருந்த ஓலைக்குடை மிகவும் கனமாக இருப்பது போல் உணர்ந்தார். அவர் தனது உதவியாளரிடம், தனது வயது மூப்பால், இந்த ஓலைக்குடையைக் கூடத் தன்னால் சுமக்க முடியாமல் போய்விட்டதே என்று சொல்லி வருந்தினார்.

ஆற்றைக் கடந்து, படகை விட்டு இறங்கிய அவர், கரைப்பகுதியில் அந்த ஓலைக்குடையை வைத்துக் கொண்டு நடக்க முடியாமல் துன்பப்பட்டார். எங்காவது சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்ல நினைத்த அவர், அருகில் ஓரிடத்தில் தன் கையில் வைத்திருந்த ஓலைக்குடையை வைத்து விட்டுச் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தார்.

பின்னர், அங்கிருந்து எழுந்த அவர், தனது ஓலைக்குடையுடன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு அந்த ஓலைக்குடை எப்போதும் போல் கனமில்லாமல் இருந்தது. ஓய்வுக்குப் பின்பு ஓலைக்குடை தற்போது இலகுவாக இருக்கிறது என்று உதவியாளர் சாத்தனிடம் தெரிவித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கையில் வைத்திருந்த கதிர் அரிவாளைக் கூர்மைப்படுத்துவதற்காக அங்கிருந்த கல் ஒன்றில் தீட்டினார். அப்போது, அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மயக்கமடைந்தார்.

அந்தப் பெண்ணுடன் வந்த சிலர், கல்லிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த தகவலையும், அந்தப் பெண் மயக்கமடைந்து விட்டதையும் தம்பிரானிடம் சென்று தெரிவித்தனர். தம்பிரான் தனது உதவியாளரான அகவூர் சாத்தனை அழைத்துக் கொண்டு அங்கு சென்றார்.

அந்த இடத்தைக் கண்ட அகவூர் சாத்தன், ‘தம்பிரானே, சில நாட்களுக்கு முன்பு, தாங்கள் மகாதேவரை வழிபட்டுத் திரும்பிய நிலையில், தங்கள் ஓலைக்குடையைச் சுமக்க முடியாமல், இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துச் சென்றீர்களல்லவா? அந்த இடத்தில்தான் இப்போது கல்லிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருக்கிறது’ என்றார்.

அதைக் கேட்ட தம்பிரானுக்கு அன்று நடந்த நிகழ்வுகளெல்லாம் நினைவுக்கு வந்து சென்றன. அன்று, மறுகரையிலிருக்கும் மகாதேவர், தனது ஓலைக்குடையில் அமர்ந்து, தன்னுடன் வந்து இந்த இடத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சுயம்புவாக இங்கே தோன்றியிருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரிந்தது.

உடனே அவர் தனது உதவியாளரான சாத்தனிடம், “என்னுடைய வயது மூப்பால் எனக்கு ஏற்பட்ட இயலாமையை அறிந்து, என்னுடனே வந்து இங்கு சுயம்புவாகத் தோன்றியிருக்கும் மகாதேவருக்கு நான் கோவில் அமைத்துச் சிறப்பு செய்வேன்” என்றார். அதனைத் தொடர்ந்து, இங்கு மகாதேவருக்குப் புதியதாகக் கோவில் அமைக்கப்பட்டது.

சன்னிதிகள்

இக்கோவிலில் வட்டவடிவமான கருவறைப் பகுதியில் முன்புறம் மகாதேவரும், பின்புறம் பார்வதி தேவியும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் சதிதேவி, தர்மசாஸ்தா, பெருமாள், யட்சி ஆகியோர்களுக்குத் தனிச் சன்னிதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு அருகில் பெரிய தெப்பக்குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பார்வதி சன்னிதி

இக்கோவிலில் இருக்கும் பார்வதி சன்னிதி ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே திறந்து வைக்கப்படுகிறது. இதற்குக் காரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

தொடக்கக் காலத்தில், இங்கு பார்வதி தேவியே மகாதேவருக்கு உணவு தயாரித்து வழிபாடுகளைச் செய்து வந்தாராம். இதனால், கோவிலில் உணவு தயாரிக்கும் இடத்திற்கு (மடப்பள்ளி) யாரும் செல்ல மாட்டார்களாம். ஒரு நாள் கோவிலின் நிர்வாகப் பணியைக் கவனித்து வந்த ஒருவர், பார்வதி தேவி எப்படி உணவு தயாரிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலுடன் உணவு தயாரிக்குமிடத்திற்குச் சென்றாராம்.

அங்கு பார்வதி தேவி உணவு தயாரித்துக் கொண்டிருந்ததைக் கண்டு வியந்து, ‘பார்வதித் தாயே’ என்று பக்தியுடன் சத்தமாக அழைத்து விட்டார். அதைக் கேட்டுக் கோபமடைந்த பார்வதி தேவி, ‘நான் உணவு தயாரிக்குமிடத்திற்கு வரக்கூடாது என்று தெரிந்திருந்தும், இங்கு வந்து என்னைப் பார்த்து விட்டதால், இனி, நான் இங்கிருக்க மாட்டேன்’ என்று சொன்னபடி கிளம்பினார்.

தனது தவறை உணர்ந்த கோவிலின் நிர்வாகி, ‘தாயே, தங்களைக் காணும் ஆவலுடன் நான் இங்கு வந்து பெரும் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள், எனது தவறுக்காக, இக்கோவிலுக்கு வரும் பக்தர்களைத் தண்டிக்க வேண்டாம். எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார்.

அவரது வேண்டுதலுக்கு மனமிரங்கிய பார்வதி தேவி அவரை மன்னித்து, ‘சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாளான மார்கழி மாதம் திருவாதிரை நாளில், மாலை வேளைக்குப் பின்பு முழு அலங்காரத்தில் இங்கு வந்து அருள் தருவேன். அன்றிலிருந்து 12 நாட்களுக்கு மட்டும் என்னை இக்கோவிலில் காணமுடியும்’ என்றார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் மாலை வேளையில் பார்வதி தேவி சன்னிதி வழிபாட்டுக்காகத் திறக்கப்படுகிறது. 12 நாட்களுக்குப் பின்பு மீண்டும் சன்னிதி மூடி வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் இச்சன்னிதியிலிருக்கும் சாளரத்தின் வழியாகப் பக்தர்கள் பார்வதி தேவியை வேண்டிச் செல்கின்றனர்.

வழிபாடு

இக்கோவிலில் தினசரி காலை 4.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் மகாதேவருக்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு, சிவராத்திரி, பிரதோசம் போன்ற சிவபெருமானுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் மகாதேவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளில் தொடங்கி எட்டு நாட்கள் இங்கு சிறப்பு விழா ஒன்றும் நடைபெறுகிறது. இவ்விழாவில் நடைபெறும் ஆறாட்டு விழா மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. இவ்விழா நாட்களில் நடைபெறும் அன்னதானத்தில் கலந்து கொண்டு, உணவு உண்பவர்களுக்கு வயிறு தொடர்புடைய அனைத்து நோய்களும் நீங்கிவிடும் என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இக்கோவிலில் இருக்கும் பார்வதி தேவி சன்னிதி திறந்திருக்கும் பன்னிரண்டு நாட்களில் இங்குள்ள பார்வதி தேவியைத் திருமணத்தடை உடையவர்கள்  வழிபட்டுச் சென்றால், அவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தைப்பேறு இல்லாதவர் களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மறைந்து, அவர்களிருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வர் என்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.  

அமைவிடம்

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவிலிருந்து அங்கமாலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீமூலநகரம் சென்று, அங்கிருந்து வல்லோம் சாலையில் 1½ கிலோ மீட்டர் தூரமும், அங்கிருந்து அகவூர்  திருவைராணிக்குளம் செல்லும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரமும் என மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. ஆலுவா, காலடி ஆகிய ஊர்களிலிருந்து திருவைராணிக்குளத்திற்குக் கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 தேனி மு.சுப்பிரமணி.

கோவில் சிறப்புகள்

*    திருவைராணிக்குளம் கோவிலில் இருக்கும் சிவபெருமானின் சடை முடி பின்பகுதியில் விரிந்து கிடக்கிறது என்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள்  நம்புகின்றனர். இதனால், இக்கோவிலில் அடையாளமிட்ட பகுதியைக் கடக்காமல் திரும்பி வந்து விட வேண்டும். இதன் காரணமாக, இங்கு கோவிலை முழுமையாகச் சுற்றி வர முடியாது.

*    இக்கோவிலில் பார்வதி தேவி சன்னிதி 12 நாட்கள் மட்டும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்படும். மற்ற நாட்களில் சாளரம் வழியாக வழிபட்டுக் கொள்ள வேண்டும்.

*    கோவில் பிரகாரத்தில் பழமையான அரசமரம் ஒன்றும், நெல்லிமரம் ஒன்றும் மேடையமைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

*    இக்கோவிலில் திருமணம் வேண்டி மலர் வழிபாடு செய்பவர்களுக்கு பழக்கலவை சிறப்புப் பிரசாதமாக வழங்கப் படுகிறது.


Next Story