மக்கள் சேவையே இறைத்தன்மை


மக்கள் சேவையே இறைத்தன்மை
x
தினத்தந்தி 22 May 2017 11:00 PM GMT (Updated: 22 May 2017 1:49 PM GMT)

அந்த புத்தத் துறவியை, தூற்றாதவர்களே இல்லை. ‘அவர் ஒரு பேராசை பிடித்தவர். காவி உடை அணிந்து கொண்டு, இறை சிந்தனையே இல்லாமல், எந்நேரமும் பணத்தின் மீதும், பொருளின் மீதுமே பற்றுகொண்டு அலைபவர்.

ந்த புத்தத் துறவியை, தூற்றாதவர்களே இல்லை. ‘அவர் ஒரு பேராசை பிடித்தவர். காவி உடை அணிந்து கொண்டு, இறை சிந்தனையே இல்லாமல், எந்நேரமும் பணத்தின் மீதும், பொருளின் மீதுமே பற்றுகொண்டு அலைபவர். இப்படிப்பட்டவர் எப்படி துறவியாக இருக்க முடியும்?’ இப்படி பலரும் பலவிதமாக அந்தத் துறவியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

மேலும் சிலரோ, ‘இல்லை அவர் சிறந்த துறவிதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு பொருள் மீது மட்டும் கொஞ்சம் ஆசை உண்டு. அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர். அவரிடம் ஓவியம் வரைந்துத் தரச் சொன்னால், நிறைய பணம் கறந்துவிடுவார். அதுவும் அதற்கு முன்பணமாக நிறைய பணம் கேட்பார். அதன்பிறகுதான் தூரிகையையே கையில் எடுப்பார்’ என்றனர்.

இப்படி தன்னைப் பற்றி பலரும் பல விதமாக பேசினாலும், அதைப் பற்றியெல்லாம் அந்தத் துறவி காதில் வாங்கிக்கொள்வதே இல்லை.

அந்த ஊரில் நாட்டியப் பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவள் பலரும்
அந்தத் துறவியைப் பற்றி பேசுவதை கேட்டு, தானும் துறவியை சோதித்துப் பார்க்க எண்ணினாள்.

நேராக துறவியிடம் சென்று, ஓர் அழகிய ஓவியம் வரைந்து தர வேண்டும் என்று கேட்டாள்.

அதற்கு ஒத்துக் கொண்ட துறவி, எல்லா ஓவியர்களும் கேட்கும் தொகையை விட பலமடங்கு அதிகத் தொகையைக் கேட்டார்.

அதைக் கேட்டு எரிச்சல் அடைந்த நாட்டியப் பெண்மணி, ‘நீங்கள் கேட்பதை விட அதிகத் தொகை தருகிறேன். ஆனால் இப்போதே, என் எதிரிலேயே நீங்கள் ஓவியத்தை வரைய வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தாள்.

துறவியும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு ஓவியம் வரையத் தயார் ஆனார். எந்த ஓவியனையும் எரிச்சல் அடையச் செய்யக் கூடியது, சந்தேகத்தின் அடிப் படையில் ‘தன் எதிரிலேயே ஓவியத்தை வரைய வேண்டும்’ என்று வற்புறுத்துவது. ஆனால் அதைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொண்ட அந்தத் துறவியின் செய்கை, நாட்டிய பெண்களுக்கு மேலும் எரிச்சலை அளித்தது.

தன்னுடன் வந்திருந்தவரிடம், ‘இவரெல்லாம் ஒரு துறவியா? அவ்வளவு ஏன், இவர் ஒரு ஓவியக் கலைஞர் என்பதற்குக் கூட அருகதை இல்லாதவர். பேராசை கொண்ட இவர், காவி உடையணிந்து கொண்டு துறவிகளையே அவமானப்படுத்தி வரு கிறார். இவரால் புத்த மதத்திற்கே களங்கம்’ என்று பொருமினாள்.

அவளது வார்த்தைகள் காதில் விழுந்தாலும் அதைப் பற்றி சட்டை செய்யாமல், ஓவியத்தை முழுமையாக வரைந்து முடித்தார் அந்த துறவி. பின்னர் ஓவியத்திற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஓவியத்தைக் கொடுத்தார்.

துறவி கேட்ட பணத்தைக் கொடுத்த பெண்மணி, ‘உமது ஓவியங்கள் அனைத்தும் மக்கள் பார்வைக்கு மாட்ட தகுதியற்றவை. அவற்றை உள்ளாடைகளாக வேண்டுமானால் பயன்படுத்தலாம்’ என்று வார்த்தைகளால் நோகடித்தவள், தனது உள்ளாடைகளில் ஒன்றை நீட்டி அதிலும் ஓவியம் வரையச் சொன்னாள்.

துறவி அதற்கும் கோபப்படவில்லை. அதற்கும் நிறையத் தொகையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டவர், உள்ளாடையிலும் அந்தப் பெண்மணி கேட்டபடியே ஓவியம் வரைந்து கொடுத்தார். அவரை கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து அகன்றாள் அந்தப் பெண்.

பல காலங்களுக்குப் பிறகுதான், அந்தத் துறவி எதற்காக இவ்வளவு கண்டிப்பாக பணம் வாங்கினார் என்பதும், அந்த பணத்தை எதற்காக சேர்த்தார் என்பதும் அனைவருக்கும் தெரியவந்தது.

அந்தப் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவிவந்த பஞ்சத்தால் ஏழைகள் அனைவரும் பட்டினியால் வாடினர். அவர்களுக்காக ஏராளமான களஞ்சியங்களைக் கட்டி, தானியம் சேகரித்து வைத்திருந்தார் துறவி. அவர்தான் அனுப்புகிறார் என்று தெரியாமலேயே, ஏழை மக்கள் அனைவரும் அதைப் பெற்று பயனடைந்து வந்தனர். அதே போல் அந்த கிராமத்தில் இருந்து நகரத்திற்குச் செல்ல சரியான சாலை வசதி இல்லாமல், வண்டி மாடுகள் பெரிதும் துன்பமடைந்தன. வயோதிகர்களும், நோயாளிகளும் சிரமப்பட்டனர். அழகிய சாலை அமைக்கவும், அவர் வாங்கிய பணம் செலவாயிற்று. மேலும் அந்தத் துறவியின் குரு, ஒரு தியானக் கூடம் கட்ட நினைத்தார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துவிட்டார். தன்னுடைய குருவின் ஆசையை நிறைவேற்றவும், கோவிலுடன் இணைந்த தியானக்கூடத்தை கட்டினார். இந்த மூன்று வி‌ஷயங்களுக்காகத்தான் துறவி, அதிக பணம் பெற்று ஓவியம் வரைந்து கொடுத்தார் என்பது தெரியவந்ததும், அவரை திட்டித் தீர்த்தவர்கள் அனைவரும் வெட்கத்தால் தலைகுனிந்து போனார்கள்.

அவரது அந்த மூன்று ஆசைகளும் நிறைவேறியதும் அவர் தூரிகைகளை தூக்கி எறிந்துவிட்டு, ஒரு மலைப் பகுதிக்குச் சென்று தியானத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். அதன் பிறகு அவர் ஓவியம் வரையவே இல்லை.

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் சாதாரணமானதுதான். ஆனால் அவர்களின் செய்கையால், அவர்கள் புனிதம் அடைகிறார்கள். மக்களுக்காகச் செய்யப்படும் அனைத்து வி‌ஷயங்களுமே இறைத்தன்மை வாய்ந்ததுதான். பசிபோக்கும் செயல், சமுதாய நலன் கருதி செய்யும் தொண்டு போன்றவை தவத்தைக் காட்டிலும் உயர்ந்தவை.

Next Story