அறிவோம் இஸ்லாம் : இஸ்லாமும் ஜீவகாருண்யமும்


அறிவோம் இஸ்லாம் : இஸ்லாமும் ஜீவகாருண்யமும்
x
தினத்தந்தி 13 Jun 2017 10:11 AM GMT (Updated: 13 Jun 2017 10:11 AM GMT)

ஜீவகாருண்யம் என்பது வேறு; புலால் உண்ணல் என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்துப் பார்க்க வேண்டியவை.

பிற உயிர்கள் மீதும் கருணை காட்டுமாறு கூறும் சன்மார்க்கமே இஸ்லாம். இருந்தபோதிலும் மனித இனத்தின் தேவை கருதி, படைப்பினப் பெருக்கத்தின் சமநிலை கருதி, சில உயிரினங்களை உரிய முறையில் அறுத்து உண்பதை அனுமதித்துள்ளது. 

ஹஜ்ஜுப் பெருநாளன்று ஆடு, மாடு, ஒட்டகங்கள் போன்ற உயிர் பிராணிகளை அறுத்து ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் உண்பதற்காக வழங்குவதை வணக்கமாகக்கூட இஸ்லாம் கருதுகிறது. ‘‘உம் இறைவனுக்கு நீர் தொழுது (குர்பானியும்) பலியும் கொடுப்பீராக’’ (108:2) என்று தொழுகை என்ற வணக்க வழிபாட்டுடன் இணைத்து திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

இதைக் கருத்தில் கொண்டு இஸ்லாத்தில் ஜீவகாருண்யத்திற்கு இடம் இல்லை என்ற கருத்து முன் வைக்கப்படு கிறது. ஜீவ காருண்யம் என்பது உயிர்களிடத்தில் பரிவு கொள்ளல், இரக்கம் காட்டுதல் என்று பொருள். 

ஜீவகாருண்யம் என்பது விலங்குகளையோ, பறவை களையோ தேவையற்ற வகையில் வதைப்பதையும், துன்புறுத்தித் தொல்லை கொடுப்பதையும், அவற்றின் சக்திக்கு மீறி வேலை வாங்குவதையும், அவை பசியோடும் தாகத்தோடும் இருக்கும்போது உணவும் நீரும்  கொடுத்து பாதுகாக்காமல் இருப்பதையும் குறிக்குமேயல்லாமல் வேறு பொருள் தருவதாகக் கொள்ளலாகாது. 

ஜீவகாருண்யம் என்பது வேறு; புலால் உண்ணல் என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்துப் பார்க்க வேண்டியவை.

‘‘கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்கு கதகதப்பு(ள்ள ஆடையணிகளு)ம், இன்னும் பல பலன்களும் இருக்கின்றன. அவற்றில் இருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். மேலும் மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன். இன்னும் குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும் (அவனே படைத்துள்ளான்)’’. (16:5) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான். 

இந்த வசனத்தின் அடிப்படையில் மிருகங்கள், பறவைகள் மனிதப் பயன்பாட்டுக்குரியவை என்பது தெளிவாகிறது. பயணம் செய்ய, சுமைகளைச் சுமக்க, வயல்களில் உழுவதற்காக, ஆடைக்காக, போர்வைக்காக, காலணிகளுக்காக, உணவுக்காக என்று அவற்றின் பயன்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

அனைத்து உயிர்களிடத்தும் இஸ்லாம் அன்பு காட்டச் சொல்கிறது. ‘‘பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்’’ என்பது நபிமொழி.

‘தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அருகில் இருந்த தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் வி‌ஷயத்திலும் எங்களுக்கு பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபிகளார், ‘ஆம். உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் வி‌ஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதி பலன் கிடைக்கும்’ என்றார்கள். 

உயிரினங்களிடம் அன்பும் பரிவும் காட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தும் ஏராளமான நபிமொழிகளை நாம் பார்க்கலாம்.

அன்றைய அரேபியர்களிடம் காணப்பட்ட ஜீவகாருண்யத்திற்கு எதிரான அனைத்து செயல்களையும் நபிகளார் தடுத்தார்கள்.

‘அன்று அரேபியர்கள் அம்பெறிந்து பழகுவதற்கு உயிரினங்களையே இலக்காகக் கொண்டனர். இந்தச் செயலை நபிகளார் தடுத்ததுடன், இவ்வாறு செய்பவர்களைச் சபிக்கவும் செய்தார்கள்’ (புகாரி–5515)

விருந்தினர்கள் வந்தால் முழு ஒட்டகத்தையும் அறுக்க முடியாது; குறைந்த அளவு மாமிசம் வாங்க முடியாது என்ற நிலையில் அன்றைய அரேபியர்கள் உயிருடன் உள்ள ஒட்டகத்தில் ஒரு துண்டு இறைச்சியை வெட்டி எடுத்துச் சமைப்பார்கள். வெட்டப்பட்ட இடத்தில் மருந்து தடவி கட்டுப் போட்டு விடுவார்கள். அந்த ஒட்டகம் வலியையும் வேதனையையும் தாங்கிக் கொண்டு கண்ணீர் சிந்தும். இந்தச் செயலை நபிகளார் வன்மையாகக் கண்டித்ததோடு, இவ்வாறு பெறப்பட்ட மாமிசத்தைப் புசிப்பதும் ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) என்றார்கள்.

எந்த ஓர் உயிரையும்– அது மூட்டைப் பூச்சியாக இருந்தாலும் நெருப்பிலிட்டுப் பொசுக்கக் கூடாது என்றும், எந்த உயிரையும் தண்ணீரில் மூழ்கச் செய்து, மூச்சு முட்ட வைத்து சாகடிக்கக் கூடாது என்றும் இஸ்லாம் வழிமுறைகளை வகுத்துள்ளது. 

‘உண்ண அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களில்கூட வேறு வழியில்லை என்றால் அன்றி இன விருத்தி செய்கின்ற பெண் இனத்தை அறுத்து புசிக்கலாகாது’ என்பது நபிமொழி. வேறு வழி இல்லாத நிலையில் மட்டுமே பெண்ணின விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்பதை இதன் மூலம் அறியலாம். 

இன்று கூட இஸ்லாமிய திருமணங்களிலோ, விருந்து நிகழ்ச்சிகளிலோ கிடாய்களே அறுக்கப்படுகின்றன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஊர்களில், பெண் ஆட்டை அறுக்கத் தடை உள்ளது. 

ஆடு, மாடுகளை அறுப்பதில்கூட இஸ்லாம் பல கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. பிராணிகளை அறுக்கும்போது நன்கு  கூர்மையான கத்தியைக் கொண்டு, அல்லாஹ்வின் பெயர் கூறி விரைவாக அறுத்தல் வேண்டும். கத்தியை அந்தப் பிராணி காணும்படி வைத்துக் கொள்ளவோ அல்லது அது பார்க்கும்படி கத்தியைத் தீட்டுவதோ கூடாது. வேறு மிருகங்கள் பார்த்திருக்கும் நிலையில் அதை அறுக்கக் கூடாது.

Next Story