உங்கள் தடைகளை கர்த்தர் நீக்குவார்


உங்கள் தடைகளை கர்த்தர் நீக்குவார்
x
தினத்தந்தி 20 July 2017 10:30 PM GMT (Updated: 20 July 2017 11:22 AM GMT)

‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள்’ (யாத்.14:14).

நானூற்று முப்பது வருடங்கள் அடிமைதனத்தில் இருந்த இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து, பாலும் தேனும் பாய்கிற கானான் தேசத்திற்கு போக தேவன் உத்தரவு கொடுத்தார்.

அதன்படி ஜனங்கள் ஈரோத் பள்ளத்தாக்கில் வந்தபோது செங்கடல் அவர்களுக்கு தடையாக இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் இறைவனை நோக்கி கூப்பிட்டார்கள். தேவன் மோசையை நோக்கி ‘நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தை பிளந்துவிடு’ என்றார்.

சர்வ வல்லமையுள்ள ஆண்டவரின் வலக்கரத்தால் செங்கடல் இரண்டாக பிளந்தது. சமுத்திரத்தின் நடுப்பகுதி ஆழமான தண்ணீர் நடுக்கடலில் உறைந்து போயிற்று. இரண்டு பக்கமும் தண்ணீர் குவியலாக மதில்போல் நிமிர்ந்து நின்றது. இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். செங்கடலின் தடையை உடைத்து மாற்றினார்.

‘மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர் வரைக்கும் ஒரு குவியலாக குவிந்தது’ (யோசு.3:16).

இஸ்ரவேல் புத்திரர் கானான் தேசத்திற்கு போகிற வழியிலே யோர்தான் நதி தடையாக இருந்தது. யோசுவா ஜனங்களை பார்த்து ‘ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார். நீங்கள் கலங்காமல் இருப்பீர்களாக’.

யோர்தான் நதி அறுப்புக்காலத்தில் இருபுறமும் கரை புரண்டு ஓடும். நதி மிகவும் அகலமாகவும் ஆழமாகவும் இருந்தது. கர்த்தரின் உடன்படிக்கை பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தான் நதியின் தண்ணீரிலே பட்ட மாத்திரத்தில் மேலேயிருந்து ஓடிவருகின்ற தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக மேல்நோக்கி நின்றது.

ஆசாரியர்களின் கால்கள் யோர்தான் நதியில் காலூன்றி நிற்கும்போது, சகல இஸ்ரவேல் ஜனங்களும் தண்ணீர் இல்லாத உலர்ந்த தரைவழியாய் நடந்து போனார்கள். யோர்தான் நதியின் தடைகளை ஆண்டவர் நீக்கினார்.

‘திர்சாவின் ராஜா ஒன்று, ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்’ (யோசு.12:24).

பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்திற்கு போக முப்பத்தொரு ராஜாக்கள் தடையாக இருந்தார்கள். யோசுவா என்ற தேவ மனிதன் தலைமையில் முப்பத்தொரு ராஜாக்களிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் யுத்தம் செய்தார்கள்.

எல்லா ராஜாக்களையும் சர்வ வல்லமையுள்ள தேவன் முறியடித்து கானான் தேசத்துக்குள் பிரவேசிக்கச் செய்தார். ஒவ்வொரு யுத்த களத்திலும் யோசுவாவுக்கு தேவ ஆலோசனை கொடுத்து கர்த்தர் யுத்தம் செய்தார்.

தேவ ஆலோசனையின்படி இஸ்ரவேல் ஜனத்திற்கு கானான் தேசத்தை யோசுவா பங்கிட்டு கொடுத்தான். எல்லா தடைகளையும் நீக்கி பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து எல்லா இஸ்ரவேல் ஜனங்களையும் காப்பாற்றினார்.

அவர்களுடைய சத்துருக்கள் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு சொல்லியிருந்த நல்வார்த்தைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் இருந்த கானான் தேசம் முழுவதும் யுத்தமில்லாமல் இளைப்பாறப் பண்ணினார்.

‘தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்’. (யோபு.42–2)

கிழக்கத்தி மனிதர்கள் எல்லாரிலும் யோபு செல்வ சீமானாக இருந்தான். அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர் மாடுகளும், ஐந்நூறு கழுதைகளும், திரளான பணிவிடைக்காரரும், ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் இருந்தார்கள். பிசாசினால் சோதிக்கப்பட்டு, குடும்பத்தில் உள்ள எல்லா ஆசீர்வாதங் களையும், பத்து பிள்ளைகளையும் இழந்து தடைகள் வந்தபோதும் யோபு சொல்லியது:

‘அவர் பிடித்தாலும் அவர் அடைத்தாலும் அவர் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்தினாலும் அவரைத் தடை பண்ணு கிறவன் யார்’ (யோபு 11:10).

ஆண்டவர் ஒரு மனிதனை ஆசீர்வதித்து அவனுடைய எல்லா தடைகளையும் மாற்ற நினைத்தால் அவன் பாக்கியவான். யோபுக்கு எல்லா ஆசீர்வாதங்கள் இழந்து தடைகள் வந்தபோதும் தடைகளை நீக்கி அவனை ஆசீர்வதித்தார்.

ராஜாதி ராஜாவாகிய தேவன், எல்லா தடைகளையும் நீக்கி யோபுவின் முன் நிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்நிலைமையை இரட்டத்தனையாக ஆசீர்வதித்தார். அவனுக்கு மீண்டும் பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங் களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் உண்டானது. மீண்டும் ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். அவன் மீண்டும் செல்வ சீமானாக மாறினான். யோபுவின் பிள்ளைகள் அழகிலும் ஞானத்திலும் ஐசுவரியத்திலும் சிறந்து விளங்கினார்கள்.

நமக்கு ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருக்கிற எல்லா காரியங்களையும் உடைத்து மாற்றுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரே, ஆமென்.

சி.பூமணி, ஆசீர்வாத சுவிசே‌ஷ ஊழியம், சென்னை–50.

Next Story