சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு


சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 9 Aug 2017 11:45 PM GMT (Updated: 9 Aug 2017 9:40 PM GMT)

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 2–வது நாளாக விடிய, விடிய திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

சேலம்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 25–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடத்தப்படுகிறது. கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால் கம்பம் நடுதல், உருளுதண்டம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. தினமும் ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர்.

இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது நேற்று முன்தினம் இரவே தொடங்கியது. அன்றைய தினம் இரவு விடிய, விடிய கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

நேற்று 2–வது நாளாக கோவில் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று காலை முதல் இரவு வரையிலும் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோவிலில் திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் தடுக்கும் வகையில், சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடிப்பண்டிகையை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல், 15–ந் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள காந்தி மைதானத்தில் நேற்று காலை திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். மரவனேரி கோர்ட்டு ரோடு சர்வசக்தி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.

செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலிலும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி ஏராளமான பெண்கள் கோவில் அருகே பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு அம்மன் வீதியுலா காட்சி நடந்தது.

இதேபோல் சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், கடைவீதி சின்ன மாரியம்மன் கோவில், பொன்னம்மாபேட்டை புது மாரியம்மன் கோவில், சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.



Next Story