கிறிஸ்தவ நடத்தையின் தொடக்கம்


கிறிஸ்தவ நடத்தையின் தொடக்கம்
x
தினத்தந்தி 10 Aug 2017 11:00 PM GMT (Updated: 10 Aug 2017 7:05 AM GMT)

இதுவரை செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்வது தொடர்பான உபதேசங்கள்தான் ஒருவரை ரட்சிப்பின் திசையை நோக்கிக் காட்டுவதாக அமையும்.

ல்லா மனிதரின் நடத்தையிலும் வித்தியாசங்கள் உண்டு. சிலர் கிடைக்கும் நேரத்தில் ஆதாயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதியை மறந்து செயல்படுவார்கள். சிலர் மனசாட்சியின்படி செயல்பட முயற்சிப்பார்கள். சிலர் உழைப்பைத் தாண்டி வரும் வருவாயை இறைநீதிப்படி தவிர்த்துவிடுவார்கள். 

ஆக ஒரு மனிதன், இயல்பு நிலை, மனசாட்சியின் நிலை, ஆன்மிக நிலை என்ற 3 நிலைப்பாடுகளில் ஒன்றை பின்பற்று கிறான்.

ஆனால் சிலர் ஆன்மிக நிலையை தாங்கள் அடைந்துவிட்டதாக கருதிக்கொண்டு இயல்பு நிலையில் நீடிக்கிறார்கள். அந்தந்த சந்தர்ப்பங்களில் சாதி மத சார்பு நிலைப்பாட்டை எடுப்பது, திட்டுபவரை பதிலுக்கு பழிப்பது, சமநிலைப்பாடு உடையவர்களை பொறாமையால் பகைப்பது என்று பல்வேறு இயல்பு குணாதிசயங்களோடு வாழ்ந்தாலும், ஆன்மிகத்தில் திளைத்துக் கொண்டிருப்பதாக நினைப்பவர்கள் கிறிஸ்தவத்தில் அநேகம். 

சரீர பாவங்கள், உள்ளத்தில் இருந்து செய்யப்படும் பாவங்கள், ஜென்ம சுபாவங்கள் (இயல்பு நிலை) மூலம் செய்யும் பாவங்கள் ஆகிய 3 விதமான பாவங் களுக்கு பிராயச்சித்தம் தேடிவிட்டு, அவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான இறைவனின் பலத்தைப் பெறுவதுதான் ரட்சிப்பின் முழு அம்சமாகும்.

இதுவரை செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்வது தொடர்பான உபதேசங்கள்தான் ஒருவரை ரட்சிப்பின் திசையை நோக்கிக் காட்டுவதாக அமையும். அதில்தான் கிறிஸ்தவ மார்க்கம் தனித்து நிற்கிறது. பாவங்களை, தீமைகளை செய்யாதே என்று எல்லா மார்க்கங்களுமே கூறுகின்றன. ஆனாலும் ஏற்கனவே செய்த பாவங்களில் இருந்து மீட்கப் படுவதோடு, அந்த பாவங்களை மீண்டும் செய்யாமலிருக்கும் வழிகளை கிறிஸ்தவம்தான் காட்டுகிறது.

பாவங்களைத் தீர்க்க பலியிடுதல், பரிகாரங்களைச் செய்தல் என மற்ற மார்க்கங்களில் பல்வேறு வழிகளும், உபதேசங்களும் காட்டப்பட்டாலும், அந்தப் பாவங்களை அந்த மார்க்கத்தார் மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான பலத்தை அந்த மார்க்கம் தருவதில்லை. 

ஆக பாவமுள்ள மனிதன், என்றுமே பாவமற்ற வாழ்க்கை நிலையை அதாவது உண்மையான ஆன்மிக நிலையை அடைவதற்கான வழிகாட்டியாக கிறிஸ்தவம் அமைந்துள்ளது.

கிறிஸ்தவத்தை பின்பற்ற முடியாத நிலையில் இருந்தால்கூட, ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் புகுத்தியுள்ள மனசாட்சியின் நிலையைக் கடைபிடிப்பதும் இறைவன் விருப்பத்துக்கு உட்பட்டதாகவே வேதத்தில் காட்டப்பட்டுள்ளது (ரோமர் 2:14,15). 

ஆனாலும் சுத்த மனசாட்சியின் இறுதி நிலை காட்டும் மார்க்கமும் கிறிஸ்தவமே. எனவே கிறிஸ்துவைப் பின்பற்ற முடிவு செய்தவர்கள், பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இடைநடுவில் வேறு மார்க்கத்தில் இருந்து மாறி வந்தவர்கள் எவரென்றாலும், இறைநீதி வாழ்க்கைக்கான தொடக்க நடத்தையைக் குறித்து வேதம் வலியுறுத்துகிறது (மத்.5:2326). 

அந்த வசனங்கள் கூறுவது என்னவென்றால், ‘ஆகையால், நீ பலி பீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும் படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லு கிறேன்’ என்பதே.

அதாவது, ஒருவன் கிறிஸ்தவத்துக்கு வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடிவு செய்தால், மற்றவருக்கு விரோதமாக செய்திருந்த பாவங்களை பட்டியலிட்டு, அவர்களிடம் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு, அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்துவிட்டு, அதன் பின்னர் இறைவனிடமும் மன்னிப்பைக் கேட்டுவிட்டு, கிறிஸ்துவை பின்பற்ற வாருங்கள். 

அநீதியாக பணம் கொடுத்து வாங்கிய கல்வியிடம், அரசுப் பணி, ஒப்பந்தங்கள் போன்றவற்றை திருப்பிச் செலுத்துங்கள். அநீதியாய்ப் பெற்ற சம்பாத்தியம், சொத்து, நபர்களை விட்டுவிட்டு கிறிஸ்தவத்துக்கு வர முயற்சி செய்து பாருங்கள், கிறிஸ்தவத்தின் தன்மை புரியும்.

கிறிஸ்தவ பாதையில் நுழைவது இடுக்கமானது என்பதை வேதமும் சொல்கிறது. கடைசி பைசாவை கொடுத்து சரிக்கட்டாதவரை பழைய இயல்பு நிலையில் இருந்து புறப்பட்டு கிறிஸ்தவத்துக்குள் வர முடியாது என்பதை மேற்கூறப்பட்டுள்ள வசனத்தில் இயேசு குறிப்பிட்டுள்ளார். 

கிறிஸ்தவத்தை பின்பற்றி நடப்பது மற்ற மார்க்கம்போல் எளிதானது அல்ல.

எனவே இனி தேவாலயத்துக்கு வருகிறவர்கள், இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு, மற்றவர்களின் பொருளை அபகரித்து இருக்கிறேனா? எனது காணிக்கையில் அநியாயப் பணம் கலந்துள்ளதா? நோகடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யாரையாவது அவதூறாக பேசியிருக்கிறேனா? எனது அநீதியான நடத்தையினால் யாருக்காவது வருத்தம் ஏற்பட்டுள்ளதா? வேறு எந்த வகையிலாவது உலக சட்டங்களையோ, இறைநீதியையோ மீறியிருக்கிறேனா? என்பதைப்பற்றி முதலில் யோசியுங்கள். 

தவறு இருப்பது தெரிந்தால் காணிக்கையை கொடுக்காதீர்கள். பாவங்களை சரிக்கட்டிவிட்டு வந்த பிறகு செலுத்தும் காணிக்கைதான் இறைவனால் ஏற்கப்படக் கூடியது.

Next Story