மாற்றத்தைத் தரும் மாதானம் முத்து மாரியம்மன்


மாற்றத்தைத் தரும் மாதானம் முத்து  மாரியம்மன்
x
தினத்தந்தி 10 Aug 2017 11:30 PM GMT (Updated: 10 Aug 2017 7:17 AM GMT)

ஆறு வகையான இறை வழிபாட்டில் சக்தியை கடவுளாக வழிபடும் நெறி ‘சாக்தம்’ என்பதாகும். சக்தி வழிபாட்டில் உலகின் ஆதிசக்தியான அன்னை பராசக்தியே மூலக்கடவுளாக போற்றப்படுகிறாள்.

கிராம தேவதைகள் எனப்படும் காவல் தெய்வங்களை வழிபடுவது என்பது, கிராம மக்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் மரபுகளில் ஒன்று. வருடம் தவறாது வானம் மழை பொழிந்து நீரைத் தரவேண்டும், அந்த நீரை பயன்படுத்தி, பயிர் செய்யப்படும் தானியங்களின் விளைச்சல் பெருகவேண்டும், அந்த தானியத்தை உண்டு உயிர் வாழும் உயிரினங்கள் பசி, பட்டினிகளுக்கு ஆட்படாது வாழவேண்டும், மனிதர்களுக்குள் ஏற்படும் பேதங்கள் விலகி, அவர்கள் நல்லவர்களாகவும் ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என்பனவற்றை முன்வைத்தே கிராம தேவதைகளை ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வழிபடுவது வழக்கமாயிற்று. 

இத்தகைய கிராம தேவதைகளில் பெரும்பாலான கிராமங்களில், அம்பாள் முதலிடத்தையும், அய்யனார் இரண்டாம் இடத்தையும் பிடித்திருப்பர். அம்பாள் ஆலயங்களைப் பொறுத்தவரை ஒரு சில ஊர்களைத் தவிர, பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் அல்லது காளியம்மன் என்ற பெயர்களைக் கொண்டதாகவே அமையப் பெற்றிருக்கும்.

மாரியம்மன் அவதாரம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. மாரா என்னும் அசுரனை அழித்ததால் அந்த ஆதிபராசக்திக்கு மாரியம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், மாரியை (மழையை) பொழிவிப்பதால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவதுண்டு.

சிவந்த முகத்துடனும், சற்றே கோபத்தை வெளிப்படுத்தும் பார்வையுடனும், செவ்வாடை அணிந்து, வலது இரு கரங்களில் முறையே உடுக்கை மற்றும் கத்தியுடனும், இடது இருகரங்களில் சூலாயுதம் மற்றும் அபய ஹஸ்தத்துடனும், தலையில் அக்னி கிரீடத்துடனும், காதுகளில் பாம்படம் தரித்து காட்சியளிப்பவளே மாரியம்மன். 

இவளே அனைத்து கடவுளுக்கும் ஆதிசக்தியாய் இருந்துள்ளாள் என்பதற்கு ஆதாரமாக, தேவிமகாத்மியத்தில் இடம்பெற்றுள்ள ‘சைவகாலே மஹாகாளி மஹாமாரி ஸவரூபையா’ என்ற வரிகளை கூறலாம். மேலும் இந்தியாவைத் தாண்டி  கடல்கடந்து இலங்கை, மொரிஷியஸ், சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, ஹாங்ஹாங், வியட்நாம், பாகிஸ்தான் (5 கோவில்கள்) போன்ற  பல நாடுகளில்  அவளுக்கான ஆலயம் எழுப்பப் பெற்றிருப்பதை பார்க்கும் போது அனைத்துத் தெய்வங்களுக்கும் மேலானவளாக அவள் இருந்திருக்கிறாள் என்பதை உணர முடிகிறது. தென்னிந்தியாவில் மாரி என்ற பெயரில் வழிபடப்படுபவள், வட இந்தியாவில் சீதளாதேவி என்ற பெயரிலும், கிழக்கு இந்தியாவில் மானஸாதேவி என்ற பெயரிலும் வழிபடப்படுகிறாள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாரியம்மன் கோவில் பிரசித்திப் பெற்றதாக விளங்கு கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன், ஈரோடு பெரியமாரியம்மன், திருச்சி சமயபுரம் மாரியம்மன், கோவை பண்ணாரியம்மன், மதுரை வண்டியூர் மாரியம்மன், திருமங்கலம் மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், திண்டுக்கல் நத்தம் மாரியம்மன், சிவகங்கை கொப்புடையம்மன், தருமபுரி கணவாய் மாரியம்மன், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் என்ற வரிசையில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமையும், புகழையும் தருபவளாக இருந்து அருள் பாலித்து வருகிறாள் மாதானம் முத்துமாரியம்மன். 

பழங்காலத்தில் பிரம்பு எனப்படும் ஒருவகை தாவரக் காடாக இருந்த இப்பகுதியில், ஒரு புளியமரம் செழித்து வளர்ந்திருந்தது. அதை பார்த்த வணிகர் ஒருவர், விலைக்கு வாங்கி வெட்டி வண்டியில் ஏற்றிச் செல்ல முற்பட்டார். வெட்டுண்ட புளிய மரத் துண்டுகளை ஏற்றிவந்த பார வண்டி தற்போது கோவிலுள்ள பகுதிக்கு வந்தபோது பொழுதுசாய்ந்து விட்டது. எனவே மறுநாள் புறப்பட முடிவு செய்த வணிகர், இரவு அங்கேயே தங்கினார். மறுநாள் சூரியன் உதித்த பின்னர் வண்டியில் மாடுகளை பூட்டி ஓட்ட முற்பட்டபோது பலவித முயற்சிகளை மேற்கொண்டும் பாரவண்டி கிளம்பவில்லை. தொடர்ந்து பல தடைகள் வந்துகொண்டே இருந்தது. 

இது விவரமறிந்து வடகால் ஜமீன்தார் இவ்விடத்திற்கு வந்தனர். அவர்கள் புளிய மரத்தை, மேலும் சிறு துண்டுகளாக்கி ஏற்றிச் செல்லுமாறு கூறினர். மரத்தை சிறு துண்டுகளாக்க வெட்டியபோது, எல்லோரது கண்களையும் கூசச் செய்யமாறு ஒரு பேரொளி கிளம்பியது. அதில் இருந்து வெளிப்பட்டு அனைவரையும் பக்தி பரவசம் கொள்ளச் செய்து ஆட்கொண்டாள் ஸ்ரீமுத்துமாரியம்மன். 

இதைப் பார்த்து ஆனந்தம் கொண்ட ஜமீன்தார், இருகரம் கூப்பி நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து வணங்கினார். அதே சமயம் அம்பாளின் திருவுருவம் ஒரு கரமும் ஒருபக்க தனமும் இல்லாது குறையுருவாக வந்துள்ளதே என கவலையும் கொண்டார்,  இது புரிந்த தேவி தான் பிரம்புகாட்டில் ஒருபுற்றின் கீழ் இருப்பதாக உணர்த்த அவ்விடம் சென்று முழுமையாக இருந்த அம்பாளை வெளிக் கொணர்ந்து ஆலயம் எழுப்பும் பணியை மேற்கொண்டார் ஜமீன்தார். 

பாரவண்டியை கனக்கவைத்து  தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்ட அம்பாள், தான் குடியிருந்த புளியமரத் துண்டுகளை காலப்போக்கில் துளிர்க்கச் செய்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினாள். 

மண்ணியாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்தக் திருக்கோவில். இந்தக் கோவிலுக்கு தற்போது தான் ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சலவைக்கல்லால் ஆன மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில் விநாயகர் மற்றும் பின்னமான அம்பாள் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. அர்த்த மண்டபத்தில் விநாயகர், சுப்ரமணியர் உடனுறை அம்பாளின் உற்சவ திருமேனி இடம் பெற்றுள்ளது. கருவறையில் அனைவரையும் காத்து ரட்சிக்கும் அம்பாள், தன்னை நாடி வந்து வேண்டுவோருக்கு வேண்டியதை தருபவளாய் அருள்பாலிக்கிறார். 

பிரகாரத்தில் விநாயகரும், கோவிலின் எதிரில் வெட்டுண்டு துளிர்த்த முந்நூறு ஆண்டு பழமையான புளியமரமும் உள்ளன. அதனையொட்டி கருப்பழகி, ஆரியமாலா உடனுறை காத்தவராயன் சன்னிதியும், 2006–ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பேச்சியம்மன் சன்னிதி களும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அடுத்ததாக தெற்கு நோக்கிய வள்ளி –தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சன்னிதி இருக்கிறது.  

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று தீமிதி மகோற்சவம் நடக்கிறது. இதில் சுமார் 3000 பக்தர்கள் தீமித்து அம்பாளுக்கு நேரத்திக்கடன் செலுத்துவார்கள். இவ்வாண்டு தீமிதி உற்சவம் இன்று (11–8–2017) நடைபெறவுள்ளது.

வடகால் ஜமீன் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்ட இக்கோவில், அவர் வழி வந்தவர்களால் 1890–ல் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1908 நீண்ட கால இடைவெளிக்குப்பின் 2006–ம் ஆண்டுகளில் மறு கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 5 நிலை ராஜகோபுரமும் பின்னப்பட்ட அம்பாளுக்கு தனி சன்னிதியும் கட்டப்பட்டு 2017 செப்டம்பர் 15 அன்று திருக்குடமுழுக்கு செய்யப்படவுள்ளது. தொடர்ந்து கோவிலை வடகால் ஜமீன் குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் தீமிதி மகோற்சவத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கும்பகோணம் கோட்டம் சார்பாக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களிலுள்ள முக்கிய ஊர்களிலிருந்தும், இந்த ஆலயத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் இவ்வாலயத்தை தரிசிக்க விரும்புவோர், சிதம்பரம் மற்றும் சீர்காழியிலிருந்து புத்தூர்– திருமயிலாடி ஆகிய ஊர்கள் வழியாக பழையாறு துறைமுகம் செல்லும் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

–நெய்வாசல் நெடுஞ்செழியன்.

Next Story