குடும்ப ஒற்றுமை தரும் அர்த்தநாரீஸ்வரர் - ஆன்மிக துளிகள்


குடும்ப ஒற்றுமை தரும் அர்த்தநாரீஸ்வரர் - ஆன்மிக துளிகள்
x
தினத்தந்தி 14 Aug 2017 10:00 AM GMT (Updated: 14 Aug 2017 9:16 AM GMT)

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றும், ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’ என்றும் தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு ஜாதகத்திலும் களத்திர ஸ்தானாதிபதி பகை வீட்டில் இருந்தாலோ, நீச்சம் பெற்றுச் சூரியனோடு கூடியிருந்தாலோ, பாவ கிரகங்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலோ குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.

ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாம் இடமும் பலமிழந்து இருந்தாலும், அஷ்டம ஸ்தானத்தில் சப்தமாதிபதி பாவ கிரகங்களோடு இணைந்திருந்தாலும், இல்லத்தில் ஒற்றுமை குறையும். எப்போதும் சண்டை சச்சரவு உருவாகிக் கொண்டே இருக்கும். வழிபாட்டின் மூலம் அமைதி காணலாம். குடும்ப உறவை சீராக்கிக் கொள்ளலாம். பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டால் கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

அரச மரம் சுற்றினால் கிடைக்கும் பலன்

மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது, அரச மரமாகும். இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை வர்ணிப்பார்கள். இம்மரத்தைச் சுற்றி வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அருளும் நமக்குக் கிடைக்கும். அக்னிபகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி, அரசமரத்தில் புகுந்து கொண்டதால் இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன் படுத்துகிறோம்.

பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரசமரக்காற்றை நாம் சுவாசித்தால் ஆயுளும் வளரும். ஆரோக்கியம் சீராகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். அரசமர இலைகளின் சலசலப்பு ஆலய மணிபோல இருக்கும். அரசமரத்தடியில் விநாயகப் பெருமானையும், நாகராஜனையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத்தடைகள் அகலும். கனிவான வாழ்க்கை அமையும்.

பொதுவாக வரம் தரும் மரங்களில் முதல் மரம் அரசமரமாகும். எனவே வரம் தரும் மரத்தை வணங்குவோம். அது தரும் பலன்களால் மகிழ்ச்சியைப் பெறுவோம்.

மறதியில் இருந்து விடுபட..

வீட்டில் படிக்கும் பொழுதெல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் மாணவர்கள், சிலர் வினாத்தாளை வாங்கியவுடன் மறந்து விடுவதுண்டு. சிலர் இதனால் குறைந்த மதிப்பெண் களைப் பெறும் சூழ்நிலை அமைகின்றது. மாணவ- மாணவிகள் தினமும் மூன்று முறை கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டுப் படித்தால் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறலாம்.

‘சரஸ்வதி நமோஸ்துப்யம்,
வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரியாமி,
ஸித்தர் பவது மே ஸதா!’


இந்த ஸ்லோகம் தவிர கலைவாணி துதிப்பாடல், சகலகலாவல்லி மாலை போன்றவற்றையும் படிக்கலாம்.

Next Story