வாழ்வில் தடைகளை அகற்றும் மந்திரப்பாவை அம்மன்


வாழ்வில் தடைகளை அகற்றும் மந்திரப்பாவை அம்மன்
x
தினத்தந்தி 31 Oct 2017 10:13 AM GMT (Updated: 31 Oct 2017 10:12 AM GMT)

இந்த ஆலயத்தில் வழங்கப்படும் தீர்த்தமான மந்திரப்பாவை தீர்த்தம், சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது.

சித்தர்கள் வழிபடும் ஆலயம், மணியோசைக்கு பதிலாக, மந்திர ஓசைகள் மட்டுமே ஒலிக்கும் ஆலயம், சித்தர்கள் உருவாக்கிய மந்திரப்பாவை அம்மன் சன்னிதி கொண்ட ஒரே ஆலயம். அணையாத தீபம் கொண்ட ஆலயம். அடியார்களையே அர்ச்சகர்களாகவும், பெண் அர்ச்சகர்களையும் கொண்ட ஆலயம், சமயப் பணியோடு, கல்வி, மருத்துவம் போன்ற சமுதாயப் பணிகளையும் மேற்கொள்ளும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சென்னை பள்ளிக்கரணை அன்னை ஆதிபராசக்தி ஆலயம்.

சித்தர்கள் உருவாக்கிய மந்திரப்பாவை


அதர்மங்கள் தலை தூக்கி, ஆன்மிகத்திற்கு குறைவு ஏற்படும் போது, அதனைச் சரி செய்ய சித்தர் பெருமக்கள், தங்களின் பேராற்றல் வாயிலாக, நற்செயல் புரிவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் மக்களின் தீமைகளை ஒழித்து, நன்மைகள் ஓங்கிட, சித்தர் களின் எண்ணத்தில் தோன்றிய ஆலயமாகத் திகழ்வது, அன்னை ஆதிபராசக்தி கோவில்.

எதிரிகளின் தொல்லைகள் என்பது இன்று நேற்றல்ல, காலங் காலமாய் தொடர்ந்து வரும் ஒரு செயலாகும். இதனை புராணங்கள் மற்றும் காவியங்கள் மூலமாக நம்மால் அறிய முடிகிறது. இதே தொல்லைகள் சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் ஏற்பட்டது. உன்னத நோக்கத்திற்காக தவம் இருந்து வந்த சித்தர் பெருமக்களுக்கும், கெடுதல் செய்து, தவத்தை தடை செய்யும் தீய சக்திகள் இவர்கள் மீதும் ஏவப்பட்டன.

இந்தத் தொல்லைகளைக் களைந்து, நல்வழி காண, ஒரு உத்தம சக்தியைப் பெற, அகத்திய மகரிஷியிடம் சித்தர்கள் வேண்டுதல் வைத்தனர். அதற்கு அவர், இதற்கு ஏற்றவராகத் திகழும் தேரையரை நாடுமாறு அறிவுறுத்தினார்.

சித்தர்கள் தேரையரை நாடிய பின்பு, தம் குழுவோடு தியானத்தில் அமர்ந்து, ஆத்ம சக்தியான பராசக்தியையும், சிவபெருமானையும் வணங்கினர். அதன்பின் மனோ சக்தியினால் நுண்ணிய அதிர்வுகளை மந்திரங்களாக்கினர். அந்த மந்திரங்களுக்கு உரிய துடி சக்திகள், காப்பு சக்திகள், இவர்களுக்குரிய கோணங்களாக்கி உரிய பீஜ மந்திரம் அளித்து, ஒரு யந்திரத்தை உருவாக்கினர்.

அந்த பீஜ சக்தி பேராற்றல் பெற்று, இணையில்லாத அழகிய சக்தியாக செயல்படத் தொடங்கியது. அந்த சக்திக்கு, அந்த யந்திர சக்தியை வெளிப்படுத்தும் வடிவம் தந்து, அந்த பேராற்றலை வெளிப்படுத்தும் சக்தியாக, உருவ வடிவில் பாவை சிற்பத்தை வடிவமைத்தனர். அந்த பாவை சிற்பத்தை தாங்கள் தியானம் செய்கின்ற இடங்களில் அமைத்து, வழிபட்டு யோகம் செய்தனர். அந்த பாவை சிற்பமே மந்திரப் பாவையாகும். அந்த மந்திரப்பாவையின் துணையால் எந்தவித இடையூறுகளும் இல்லாமல், தங்கள் யோகத்தை நிறைவு செய்தனர்.

மந்திரப்பாவையே சித்தர்களின் கலைகளான மணி, மந்திர, ஔஷத, யோகம் எனப்படும் வாத வித்தைகள், மந்திர வித்தைகள், மருத்துவக்கலை, ஞானயோகம் அனைத்தையும் தங்கு தடையின்றி தம்மை வழிபடுபவர்களுக்கு சித்தர்களின் மூலம் ஞானமாக வழங்கி வருகின்றார்.

மந்திரப் பாவை அம்மன்

இவ்வளவு காலம் இப்படி ஒரு அபூர்வ சக்தியின் அம்சம் தெரியாமல் இருந்தது. தற்போது உலகில் அல்லல்படும் மக்களுக்கு உதவும் நோக்கில், சித்தர் பெருமக்களின் நற்கருணையால், இப்பூவுலகில் பள்ளிக்கரணை ஆதிபராசக்தி ஆலயத்தில் தனிச் சன்னிதியில் தமிழகத்தில் வேறெந்த ஆலயத்திலும் காணப்படாத அபூர்வ சக்தி கொண்ட மந்திரப்பாவை அம்மன் எழுந்தருளியுள்ளார்.

மந்திரப்பாவை அன்னை வடக்கு முகமாக கட்சி தர, கருவறையின் வெளிப்புறம் அகத்தியர், கருவூரார், தேரையர், இடைக்காடர், அழுகண்ணர், சட்டைமுனி, புலத்தியர், போகர், காளங்கிநாதர், சிவவாக்கியர், மச்சமுனி, புலிப்பாணி, திருமூலர், கொங்கணவர், ராமத்தேவர், பாம்பாட்டிச்சித்தர், பிண்ணாக்கீசர், கமலமுனி ஆகிய பதினெண் சித்தர்கள் சுதை வடிவங்களாக நேர்த்தியாக காட்சி தருகின்றனர்.

மாபெரும் சக்தி கொண்ட மந்திரப்பாவையை, அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் நேரில் வந்து மனமுருகி, தங்களின் பிரார்த்தனைகளை வைத்து வேண்டுதல்களை செய்து கொண்டால், அன்னையின் பீடத்தில் அமைந்துள்ள யந்திர சக்தியாலும், அன்னையின் பேரருளாலும், அவரவர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு மூன்று முதல் ஒன்பது பவுர்ணமிக்குள் வேண்டுதல்கள் கை கூடும் என்கின்றனர் பக்தர்கள்.

ஆலய அமைப்பு

இவ்வாலயத்தின் வாசல் வடக்கு முகமாக அமைந்துள்ளது. எளிய நுழைவு வாசலில் நுழைந்ததும், மேற்கு நோக்கிய வினை தீர்த்த விநாயகர் தனிச் சன்னிதியில் அமர்ந்துள்ளார். அதனை அடுத்து கிழக்கு நோக்கிய அன்னை ஆதிபராசக்தி சன்னிதி நம்மை வரவேற்கிறது. அன்னை ஆதிபராசக்தியே இந்த ஆலயத்தின் ஆதி தெய்வம். கருவறையில் அமர்ந்த நிலையில் இரண்டு அம்மன்கள் உள்ளனர். சிறிய அம்மனுக்கே அபிஷேகம் நடைபெறும். பின்புறம் உள்ள அம்மனுக்கு அலங்காரங்களும் ஆராதனைகளும் உண்டு. சிறிய அம்மன் அருள் நிலைக்கும், பெரிய அம்மன் பொருள் நிலைக்கும் ஆதரவானவர்களாக எழுந்தருளியுள்ளனர்.

அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தின் கருவறையைச் சுற்றி, நாற்புறமும் முறையே தாயுமானவர், ராமலிங்க அடிகளார், பட்டினத்தார், பாம்பாட்டி சித்தர் என சித்தர் பெருமக்கள் சிற்ப வடிவங்களாக அருள்பாலிக்கின்றனர்.

அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தை கடந்ததும், மந்திரப்பாவை அம்மன் தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கியவாறு அமர்ந்துள்ளார். மந்திரப்பாவை அம்மன் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து, நான்கு கரங்களுடன் அபய, வரத முத்திரையுடனும், மற்ற இரு கரங்கள் ஞான வாள், கேடயம் தாங்கியும் காட்சி தருகின்றார்.

பூர்வ ஜன்ம வினைகள், எதிரிகளின் மந்திரத் தொல்லைகள், நீண்டகாலமாக நலிவுபடுத்தி வரும் நோய்கள், வாழ்வில் தடைகள் நீங்கவும், யோகம் கை கூடவும், வரப்பிரசாதியாக மந்திரப்பாவை அம்மன் அருள்கின்றார்.

வலம் வரும் போது, சிவன் தனிச் சன்னிதியிலும், அரசு வேம்பு மரங்கள் இணைந்தும், அதனடியில் நாகமும் அருள்பாலிக்கின்றனர். தென் மேற்கு மூலையின் மாடியில் தியான மண்டபம் அமைந்துள்ளது. தியான மண்டபத்திற்குள், வேண்டுபவர்களுக்கு சகல கலைகளையும் அருளும் ஞானதேவி, கிழக்கு முகமாய் எழுந்தருளியுள்ளார்.

- பனையபுரம் அதியமான்.

அமைவிடம்

வேளச்சேரியில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் பள்ளிக்கரணை அமைந்துள்ளது. பேருந்து மூலம் வருவோர், பள்ளிக்கரணை தாமரைக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கிழக்கு நோக்கி சுமார் 1 கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம்.

ஆலய விழாக்கள்

தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, சித்திரைப் பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம், நவராத்திரி ஆகிய விழாக்களும், அமாவாசை பவுர்ணமியில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் படுகின்றன. சக்திமாலை விரதம், மந்திரப்பாவை மங்கல வேள்வி, நவக்கிரக சாப நிவர்த்தி வேள்வி, ஔஷத வேள்வி, ஐஸ்வர்ய வேள்வி, மற்றும் 60, 80 வயது பூர்த்தி வேள்விகள் உள்ளிட்ட பல்வேறு வேள்விகளும் சித்தாகம முறைப்படி, தமிழில், மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.

Next Story