கல்யாண வரம் தரும் குரு கோவில்


கல்யாண வரம் தரும் குரு கோவில்
x
தினத்தந்தி 23 Jan 2018 7:40 AM GMT (Updated: 23 Jan 2018 7:40 AM GMT)

தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அபிமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது ‘குரு கோவில்’ என அழைக்கப்படும் கோவிந்தவாடி கயிலாசநாதர் ஆலயம்.

பிரம்மாவின் மானசீகப் புதல்வர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்கிற நான்கு முனிவர்களும் வேதம், ஆகமம், சாத்திரம், புராணம் முதலான ஞானநூல்கள் பலவற்றையும் முறைப்படிக் கற்றவர்கள். இம்முனிவர்கள் கல்வி வேள்விகளில் வல்லவர்களாகத் திகழ்ந்தும் உண்மைத் தத்துவத்தை உணரவில்லை. உண்மையை அவர்களுக்கு உணர வைக்க ஈசன் திருவுளம் கொண்டார். அதற்கான காலம் கைகூடியது.

அம்பிகை பார்வதியாகப் பிறந்து தவமியற்றிய பொழுது, இறைவனும் கயிலை மலைச்சாரலில் கல்லால மரத்தின் கீழ் தென்முகமாக வீற்றிருந்து, சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் உபதேசம் செய்தார். இடக்காலை மடித்து உட்கார்ந்து, வலக்காலைத் தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து, வலக்கரத்தினால் சின்முத்திரை காட்டி, உண்மைநிலை எது என்பதை உணர்த்தினார். பாதத்தின்கீழ் உள்ள முயலகன் என்னும் அசுரன் அஞ்ஞானம் என்னும் அறியாமையின் சின்னம். சின்முத்திரை தத்துவத்தை அனைவரும் அறிந்து அதன்வழி நிற்கவே, ஆலயங்களில் தெற்குப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார்.

நவக்கிரகங்களுள் இடம்பெறும் குருபகவான் என்கிற வியாழன் கிரகம் இவரன்று. அவ்வியாழனே இவரைப் பூஜித்ததால்தான் பிரகஸ்பதி என்கிற தேவகுரு தகுதிக்கு உயர்ந்தார். எனவேதான் மவுன குருவாகிய தட்சிணாமூர்த்தியே ஆதிகுருவாக விளங்குகிறார்.

தட்சிணாமூர்த்தி பகவான் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அபிமான பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது ‘குரு கோவில்’ என அழைக்கப்படும் கோவிந்தவாடி கயிலாசநாதர் ஆலயம்.

இங்கு மூலவராக வீற்றிருந்து அருள்மழை பொழியும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி, குரு பலம் கூடுகிறது. தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் ஒரே கோவில் இதுதான். ஒரே விமானத்தின் கீழ் தனித்தனி சன்னிதிகளில் தெற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் கயிலாசநாதரும் வீற்றிருந்து அருள்பாலிப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச் சிறப்பு.

இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார். கோவிந்தனாகிய திருமால் சிவனைத்துதித்து பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் ‘கோவிந்தபாடி’ என்றழைக்கப்பட்ட இத்தலம், தற்போது ‘கோவிந்தவாடி அகரம்’ என அழைக்கப்படுகிறது. சிறந்த சைவ-வைஷ்ணவ- குரு ஸ்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தின் தல புராணம் பற்றிக் காண்போம்.

முன்பொரு முறை குபன் என்ற அரசனுக்கும், ததீசி என்ற முனிவருக்குமிடையே கடும் பகை ஏற்பட்டது. இதுபற்றி திருமாலிடம் முறையிட்டு தன்னைக் காக்க வேண்டினான் குபன். உடனே ததீசி முனிவர் மீது சக்ராயுதத்தை ஏவினார் திருமால். முனிவரின் வஜ்ர உடலைத் தாக்க முடியாமல் சக்ராயுதம் கூர் மழுங்கியது. இதனால் செய்வதறியாது திகைத்த திருமால், தேவர்களுடன் ஆலோசனை செய்தார். அவர்கள் சிவனிடம் சக்ராயுதம் இருப்பதையும் அதனைப் பெறும் விவரத்தையும் கூறினர்.

ஒருசமயம் சலந்தாசுரன் என்பவன் தேவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். இதுபற்றி தேவர்கள் சிவனிடம் முறையிட, சிவபெருமான் விரலால் பூமியில் வட்டமிட்டார். அவ்வட்டம் ஒரு சக்கரமாக உருப்பெற்று சலந்தாசுரனை அழித்துவிட்டு, சிவனிடம் வந்து சேர்ந்தது. சிவனாரிடம் உள்ள அந்த சக்கரத்தை கேட்டுப் பெறலாம் என்றும், காஞ்சி மாநகரில் சிவ வழிபாடு மேற்கொண்டால் சக்கரம் கிடைக்கும் என்றும் தேவர்கள், திருமாலிடம் யோசனை கூறினர்.

உடனே திருமால் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் காஞ்சி மாநகர் வந்தார். சிவனருள்பெற, தீட்சை பெற வேண்டும் என்ற நியதியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார் திருமால். அங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதில் நீராடி, தேகம் முழுவதும் விபூதி இட்டு, ருத்ராட்சம் அணிந்து, பாசுபத விரதமிருந்து ஈசனாரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். திருமாலின் தவத்துக்கு மகிழ்ந்து, காட்சி கொடுத்த சிவபெருமான் குருவாக வீற்றிருந்து உபதேசம் செய்தார் என்கிறது தல புராணம்.

இங்கு தனி கருவறையில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியுள்ளார். ஆறடி உயரமுள்ள இந்த தட்சிணாமூர்த்தியின் விழிகள் எவரையும் பார்க்காதது போலவும், இருக்கும் எல்லாரையும் பார்ப்பது போலவும் இரு கோணங்களில் காணப்படுகிறது. வியாக்யான வடிவ தட்சிணாமூர்த்தி இவர். பெருமாளுக்கு தனித்துக் காட்சி தந்தவர் என்பதால் இவருக்குமேல் கல்லால மரம் இல்லாமல் ‘கயிலாயம்’ போன்ற அமைப்பில் மண்டபம் உள்ளது. சிவனே தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து உபதேசம் செய்தார் என்பதால், இவர் நெற்றியில் மூன்று கண், தலையில் பிறைச்சந்திரன், கங்கா தேவியுடன் காட்சி தருகிறார். வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் சுவடி ஏந்தியும் எழுந்தருளியிருக்கிறார்.

இந்த ஆலயத்தில் பக்தர்கள் தங்கள் கரங்களாலயே தேங்காயை இரண்டாக உடைத்து அர்ச்சகரிடம் தர, தட்சிணாமூர்த்தி சன்னிதியில் அர்ச்சனை செய்து தருவது இவ்வாலய சிறப்பு. இங்கு வழிபடுவோருக்கு தடைகள் நீங்கி உடனே திருமணம் கூடி இனிய இல்லறம் அமைகிறது. தோஷங்கள் அகன்று குருபலம் கூடுவதால் பதவி உயர்வு, தொழில் சிறப்பு கிட்டுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தொடர்ச்சியாக இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காஞ்சீபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ெரயில் நிலையத்திலிருந்து (தற்போது பள்ளுர் ெரயில் நிலையம்) 1 கி.மீ. தூரத்தில் கோவிந்தவாடி உள்ளது. சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்திலிருந்து தினமும் திருமால்பூருக்கு ெரயில் சேவை உள்ளது. 

Next Story