பால்கனியில் காய்கறி தோட்டம் அமைக்கலாம்..


பால்கனியில் காய்கறி தோட்டம்  அமைக்கலாம்..
x
தினத்தந்தி 6 Jan 2017 10:30 PM GMT (Updated: 6 Jan 2017 1:47 PM GMT)

நகர்ப்புற வாழ்க்கை முறைகளில் மாடி தோட்டம் அமைப்பது இப்போது ‘பே‌ஷனாக’ மாறியிருக்கிறது. அதை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் கருதாமல் பலரும் தங்களுக்கு வேண்டிய பல்வேறு வகை காய்கறிகளை விளைவிப்பதற்கான களமாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

கர்ப்புற வாழ்க்கை முறைகளில் மாடி தோட்டம் அமைப்பது இப்போது ‘பே‌ஷனாக’ மாறியிருக்கிறது. அதை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் கருதாமல் பலரும் தங்களுக்கு வேண்டிய பல்வேறு வகை காய்கறிகளை விளைவிப்பதற்கான களமாகவும் மாற்றியிருக்கிறார்கள். முற்றிலும் கான்கிரீட் காடுகளாக இருக்கும் நகர்ப்புறங்களில், பசுமையான செடிகொடிகளை பார்க்கும்போது மனதில் உண்டாகும் இனிமையான உணர்வு தினமும் வேண்டும் என்ற விருப்பமும், மாடி தோட்டம் அமைப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் அதற்காக ஆலோசனை தரக்கூடிய பல அமைப்புகளும், தனி மனிதர்களும் இருக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் தோட்டம் அமைக்க அவர்கள் தரும் குறிப்புகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

அடுக்குமாடியில் அமைக்கலாம்

மேல் மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தனி வீடாக இருக்கவேண்டும் என்பதில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளிலும் அவற்றை அமைத்துக் கொள்ளலாம். அதாவது பால்கனி பகுதியில் சரியான அளவில் தொட்டிகளில் செடிகளை வளர்த்து பயன் பெறலாம். முக்கியமாக அவற்றில் நீர்க்கசிவுகள் எதுவும் ஏற்படாமல் பராமரித்து வர வேண்டும். இடம் சிறியதாக இருந்தாலும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஆலோசனைகள் தருவதற்கு பலரும் இருக்கின்றனர். பொதுவாக பால்கனிகளில் அமைக்க சிறுவகை செடிகள், கீரைகள் போன்றவை சரியான தேர்வாக இருக்கும்.   

பால்கனி செடிகள்

‘தொங்கும் தோட்டம்’ போன்று அமைக்கப்படும் பால்கனி தோட்டத்தில் வளர்ப்பதற்கு கொத்தமல்லி, மிளகாய், எலுமிச்சை, தக்காளி, கீரை வகைகள் போன்ற செடி வகைகள் உகந்தவையாக இருக்கும். மேலும், பால்கனியில் அமைக்கப்படும் தோட்டங்களால் கான்கிரீட் அமைப்புகளுக்கு ஏதாவது பாதிப்பு உண்டாகும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. நீர் கசிவுகளை தடுக்கும் சரியான தடுப்பு முறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம். பால்கனியில் இடம் சிறிய அளவாக இருப்பதால் துளசி உள்ளிட்ட திறுநீற்று பத்திரி வகை செடிகளையும் வளர்ப்பதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

பால்கனி பாதுகாப்பு

பால்கனியின் மேல்தளம் தகுந்த அளவுக்கு உறுதியாக உள்ளதா..? தண்ணீர் கசிவுகள் எதுவும் ஏற்படுகிறதா..? என்று கவனித்து அதை தடுப்பதற்கு பால்கனி தளத்தில் ‘வாட்டர் புரூபிங்’ செய்து கொள்ளலாம். ‘பிளாஸ்டிக்’ விரிப்புகள் மற்றும் ‘தார்பாலின்’ வகை விரிப்புகளை கீழே அமைத்து அதன்மேலாக தொட்டிகளை வைத்தும் தோட்டம் அமைக்கலாம். அந்த விரிப்புகளின் ஒரு பக்கத்தில் இணைக்கப்பட்ட சிறு குழாய் மூலமாக தேங்கிய நீர் வெளியேறும்படி வடிவமைத்துக்கொள்ளலாம். விரிக்கப்பட்ட ‘ஷீட்களின்’ மேலாக சுத்தமான மணலை பரப்பி வைப்பது ஈரப்பதத்தை உறிஞ்ச வசதியாக இருக்கும். தொட்டிகளில் நீர் விடும்போது அதன் அடிமட்டம் வரையில் சென்று வழிந்து செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.          

செலவு குறைவு

பால்கனி தோட்டம் அமைக்க பெரியதாக செலவுகள் ஏதும் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் பழைய பானைகள், கூடைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் கடைகளில் பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் மண்ணால் செய்யப்பட்ட தொட்டிகள் விற்கப்படுகின்றன. விருப்பத்துக்கு தக்கபடி அவற்றை பயன்படுத்தலாம். அல்லது ஒயர், பிளாஸ்டிக், செராமிக் போன்ற வகை தொட்டிகளைக்கூட பயன்படுத்தலாம். அழகுக்காக என்று தோட்டம் அமைக்கும் பட்சத்தில் வண்ண பூக்கள், குரோட்டன்ஸ் வகை செடிகளை தேர்ந்தெடுக்கலாம்.

எவ்வாறு செய்யலாம்..?

பால்கனியில் 5 அல்லது 6 தொட்டிகளில் அவசியமான காய்கறிகள் அல்லது கீரைகள் பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்ற செடி வகைகளை வளர்க்கலாம். தண்ணீர் கீழே வழிந்து சென்று தரைத்தளம் பாதிப்படையாமல் இருக்க தொட்டிகளுக்கு அடியில் தட்டுக்கள் வைக்க வேண்டும். அதிகமான தண்ணீர் அதில் தேங்குவதை நாம் எளிதாக அகற்றிவிட முடியும். தொட்டிகளில் நீரை உறிஞ்சு வதற்காக தென்னை நார் அல்லது மட்டைகளை கீழ்புறம் போட்டு, அதன் மேல் தேவையான அளவுக்கு மண்ணை நிரப்பி அதில் செடிகளை வளர்க்கலாம். மொத்தமாக மண்ணால் தொட்டியை நிரப்பாமல் சிறு குச்சிகள், தென்னை நார் கழிவு, மண் புழு உரம் ஆகியவற்றை போட்ட பிறகு மண்ணை நிரப்பினால் தொட்டியின் எடை அதிகரிக்காமல் இருக்கும்.


Next Story