வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்


வீடுகளில்  கடைப்பிடிக்க  வேண்டிய  பாதுகாப்பு  நடவடிக்கைகள்
x
தினத்தந்தி 10 Feb 2017 10:15 PM GMT (Updated: 10 Feb 2017 10:28 AM GMT)

பெருநகரங்களில் இருக்கும் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சொந்த வீட்டில் அல்லது வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான வி‌ஷயங்கள் இருக்கின்றன.

பெருநகரங்களில் இருக்கும் தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சொந்த வீட்டில் அல்லது வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான வி‌ஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமாக இருப்பது வீடுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகும். கதவுகள், காம்பவுண்டு கேட்டுகள், பல்வேறு லாக்கர்கள் மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் போன்றவை நேரடியாக வீடுகளின் பாதுகாப்பில் பங்காற்றுகின்றன.

இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில், வீடுகள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி நுழையும் வெளியாட்கள் அல்லது அடையாளம் தெரியாத நபர்களால் வீடுகளில் இருக்கும் பொருட்கள் களவாடப்படும் நிகழ்வுகள் பல இடங்களில் எதிர்பாராமல் நடந்து விடுகிறது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது பொருட்கள் காணாமல் போய்விடுகின்றன. வீடுகள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தனிப்பட்ட முறையில் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி நிபுணர்கள் தெரிவிக்கும் குறிப்புகளை இங்கே காணலாம்.

1. ஒரு இடத்திலிருந்து வேறொரு ஏரியாவுக்கு குடியேறுபவர்கள் முதலில் செய்யவேண்டியது புதிய வகையிலான நவீன பூட்டுக்கள் மற்றும் ஜன்னல்களுக்கான நவீன பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பழைய ‘லாக் சிஸ்டம்’ கொண்ட கதவுகள், பழைய பூட்டுக்கள் ஆகியவற்றால் முழுமையான பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு இருக்காது.

2. வெளியில் அல்லது வெளியூர்களுக்கு செல்லும் தருணங்களில் எல்லா கதவுகளும், ஜன்னல்களும் கச்சிதமாக ‘லாக்’ செய்யப்பட்டுள்ளன என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்து கொள்வது நல்லது. பக்கத்து வீட்டுக்காரர்களோடு சுமுகமான உறவுமுறைகள் இருப்பதும் இன்னொரு வகையில் பாதுகாப்பாக இருக்கும்.

3. புது வீடு கட்டும்போதும் அல்லது பழைய வீடுகளுக்கு குடியேறும்போதும் அவற்றிலுள்ள கதவு மற்றும் ஜன்னல்கள் உறுதி எவ்வாறு இருக்கிறது..? என்பதை கண்டிப்பாக கவனிக்கவேண்டும். கதவுகளின் கூடுதல் பாதுகாப்புக்காக இரும்பினால் செய்யப்பட்ட ‘ஸ்லைடிங் டோர்கள்’ எனப்படும் பக்கவாட்டு கதவுகள், ஜன்னல்களுக்கான ‘கிரில்’ தடுப்புகள் அமைப்பது பற்றி தக்க ஆலோசனைகள் பெற்று அமைத்துக்கொள்லலாம்.

4. ஒரு சில அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘மெயின் டோர்’ பூட்டுக்கான ‘ஸ்பேர் சாவியை’ கதவுக்கு மேலாகவோ, அருகிலோ மறைவாக வைத்திருப்பது பலரது வழக்கமாக உள்ளது. கையில் இருக்கும் சாவி தொலைந்துவிடும் பட்சத்தில் அதை பயன்படுத்தலாம் என்பது அவர்களது முடிவு. மேலும் கதவுக்கு அருகில் உள்ள ‘ஸ்விட்ச் பாக்ஸ்’, கதவு நிலைக்கு பக்கத்தில், ‘கதவுக்கு அருகில் உள்ள ‘பிளவர் வாஸ்’ ஆகியவற்றிலும் மாற்று சாவி அல்லது வீட்டு சாவியை வைத்து விட்டு செல்வது கூடாது.

5. நிபுணர்கள் கருத்துப்படி பின் கதவுகள், ஆள் நுழையும் அளவு பெரிதாக உள்ள வீட்டு ஜன்னல் அல்லது பாத்ரூம் ஜன்னல்கள் ஆகியவற்றின் மூலமாக வெளியாட்கள் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை எடுத்து சென்று விடுகிறார்கள். அதனால் அவற்றில்தான் முதலில் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

6. பொதுவாக வீடுகளுக்கு மிக அருகில் ஆட்கள் மறைந்து கொள்ளும் அளவுக்கு உள்ள இடங்கள் இருந்தால் அவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும். இருட்டாக அல்லது இடிந்த கட்டிட அமைப்புகள் இருந்தால் அவற்றை அடிக்கடி கவனிப்பது அவசியம். வீடுகளின் நுழைவாயிலுக்கு அருகில் வெளியே ஒரு ஆள் மறைந்து கொள்ளும் வகையிலான பூந்தொட்டிகள் அல்லது கட்டிட வடிவமைப்புகள் இருப்பதும் தவறான அமைப்புகள் ஆகும். வீட்டுக்கு பின் பக்கத்தில் உபயோகமற்ற நிலையில் ஏணிகளை போட்டு வைத்திருப்பதும் கூடாது.

7. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தமது விடுமுறையில் செல்லக்கூடிய இடங்கள் அல்லது சுற்றுலா பற்றி சமூக வலைதளங்களில் முன்னதாகவே பலரும் தெரிவிக்கிறார்கள். முற்றிலும் தவறு என்று நிபுணர்கள் எச்சரிக்கும் வி‌ஷயங்களில் இதுதான் முதலில் உள்ளது. மேலும் வெளியூர் செல்லும் சமயங்களில் நமது தபால் அல்லது பேப்பர்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் பெற்று வைத்திருக்கும்படி செய்ய முடிந்தால் நல்லது.

Next Story