உலக நாடுகளின் வித்தியாசமான கட்டிடங்கள்


உலக  நாடுகளின்  வித்தியாசமான  கட்டிடங்கள்
x
தினத்தந்தி 10 Feb 2017 9:30 PM GMT (Updated: 10 Feb 2017 10:36 AM GMT)

குடியிருப்பதற்கான வீடுகளை அமைக்க கட்டுமான பொருட்கள், அமைப்பு, அளவுகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய வி‌ஷயங்களை கையாள்வது சற்று சிக்கலான முயற்சியாகும்.

குடியிருப்பதற்கான வீடுகளை அமைக்க கட்டுமான பொருட்கள், அமைப்பு, அளவுகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புதிய வி‌ஷயங்களை கையாள்வது சற்று சிக்கலான முயற்சியாகும். அதற்கு கட்டுமான நுட்பங்களில் நீண்ட அனுபவமும், தெளிவான திட்டமிடுதலும் அவசியமானவையாகும். கடந்த 50 வருடங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில், அனைவரது கவனத்தையும் கவரும் வகையில், புதிய தொழில்நுட்பம், வித்தியாசமான வடிவங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் வரலாற்று பின்னணிகளை மையமாக கொண்ட சுவாரசியமான கட்டிட அமைப்புகள் பற்றி இங்கே காணலாம்.

போலந்து நாட்டின் கோணல் கட்டிடம்


கிட்டத்தட்ட 10,000 சதுர அடிகளுக்கும் மேலான பரப்பளவை கொண்ட இந்த ‘கோணல்’ கட்டிடமானது பல்வேறு வகையான கடைகள் கொண்ட ‘ஷாப்பிங் மால்’ ஆக இருக்கிறது. ‘ஜான் மார்ஸின்’ என்ற மேலை நாட்டு ஓவியர் வரைந்ததுபோல இக்கட்டிடம் அமைக்கப்பட்டதாக அதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். போலந்து நாட்டில் அதிகப்படியாக புகைப்படம் எடுக்கப்பட்ட கட்டிடம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களோடு கட்டிடமாக இருந்தாலும் அதன் கோணலான வடிவமைப்புதான் கட்டுமான நுட்பத்துக்கு சான்றாக இருக்கிறது. 2004–ன் ஆண்டு இது கட்டி முடிக்கப்பட்டது.

போர்ச்சுகல் நாட்டின் பாறை வீடு


அமெரிக்க நாட்டின் பிரபலமாக ‘பிளின்ட்ஸ்டோன் கார்ட்டூனில்’ வரக்கூடிய காட்டு மனிதனின் வீடு போன்ற வடிவத்தில் இந்த பாறை வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மிகப்பெரிய வட்ட வடிவ பாறைகளை இணைத்து, இரண்டு மாடிகள் கொண்டதாகவும், நவீனமான கதவுகள், ஜன்னல்கள் கொண்டதாகவும் சிமெண்டு மூலம் கட்டப்பட்டிருக்கிறது. அதன் அறைகள் முற்றிலும் கற்கால அனுபவத்தை தருவதாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளின் கவனத்தை கவர்ந்து இழுக்கிறது. போர்ச்சுகல் செல்பவர்கள் இக்கட்டிடத்தையும் பார்க்க விரும்புவது வழக்கம்.

செக் குடியரசின் நடனமாடும் கட்டிடம்


கட்டிட வடிவமைப்பின் அதிசய வடிவமாக கருதப்படும் இந்த கட்டிடமானது செக் குடியரசின் பராகுவேயில் உள்ளது. ஒரு கட்டமைப்பு இன்னொரு கட்டமைப்பின் மேலாக சாய்ந்து நடனமாடுவது போன்ற வித்தியாசமான வடிவம் கொண்டது. ‘பிராங் ஜெரி’ மற்றும் ‘விளாடோ மிலும்னிக்’ என்ற இரண்டு கட்டிடவியல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ‘படு ஸ்டைலாக’ உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு 1996–ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அப்பகுதியின் நாகரிக அடையாளமாகவும் இக்கட்டிடம் கருதப்படுகிறது.

நெதர்லாந்தின் சதுர குடியிருப்புகள்

பொதுவாக வீடுகள் சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் கட்டமைக்கப்படுகின்றன. வெவ்வேறு வகையான வடிவங்களில் பல்வேறு கட்டிடங்கள் அமைக்கப்பட்டாலும், சதுர வடிவத்தில் இருக்கும் கட்டுமான எளிமை மற்றும் உள்கட்டமைப்பு வசதி போன்ற காரணிகள் உலக அளவில் உணரப்பட்ட வி‌ஷயங்களாகும். தற்போதுள்ள பல்வேறு நவீன கட்டிட வடிவங்களின் ஆதார அமைப்பும் சதுரமாக இருப்பதை காணலாம். அவ்வகையில் நெதர்லாந்து நாட்டின் ‘ரோட்டர்டாம்’ பகுதியில் அமைக்கப்பட்ட கனசதுர குடியிருப்புகள் அவற்றின் அமைப்பியல் சார்ந்து புகழ்பெற்றவையாக உள்ளன. ‘பல மரங்கள் ஒன்றாக உள்ள இடம் வனப்பகுதியாக இருப்பதுபோல, அனைத்து வீடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து பெரிய காடாக தோற்றமளிப்பது போலவும், கிராமப்புற உணர்வை ஏற்படுத்துவதுபோலவும் இவ்வவகை குடியிருப்பை அமைத்தோம்..’ என்கிறார் அதன் வடிவமைப்பாளர் ‘பியட் ப்ளோம்’. தரைத்தளத்தில் பிரதான வாயிலும், முதல் தளத்தில் ஹால் மற்றும் சமையலறையும், இரண்டாவது தளத்தில் படுக்கையறை மற்றும் பாத்ரூம் வசதியும், மூன்றாவது தளத்தில் சிறிய மாடித்தோட்டமும் கொண்டதாக இக்குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கனடா, மான்ட்ரியல் பகுதியின் ‘ஹேபிடேட்–67’ கட்டமைப்புகள்

இஸ்ரேலை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ‘மோஸே சாப்டி’ என்பவரால் 1967–ம் ஆண்டில் நடந்த கட்டிட கண்காட்சிக்காக அமைக்கப்பட்ட இக்குடியிருப்பானது, 140–க்கும் மேற்பட்ட வீடுகளை ஒன்றாக இணைத்து கட்டப்பட்டதாகும். மொத்த கட்டுமானமும் ‘ப்ரீ–பேப்ரிகேட்டடு கான்கிரீட்’ கொண்டு அக்காலத்திலேயே அமைக்கப்பட்டதுதான் கட்டிடத்துறையின் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. ஒவ்வொரு கட்டிடமும் ‘இன்டர் லாக்கிங்’ அமைப்பில் ஒன்றோடு ஒன்றாக இணைத்து 12 மாடிகள் கொண்டதாக இருக்கிறது. பொதுவான நடைபாதையானது அனைத்து கட்டிடங்களையும் ஒன்றாக இணைக்கும்படியும், பக்கவாட்டில் பாதுகாப்பு சுவர் அமைப்புடனும் கட்டப்பட்டுள்ளது.

Next Story