உள் அலங்காரத்தின் அடிப்படை விதிகள்


உள் அலங்காரத்தின் அடிப்படை  விதிகள்
x
தினத்தந்தி 10 Feb 2017 8:30 PM GMT (Updated: 10 Feb 2017 10:42 AM GMT)

வீடுகளில் உள் அலங்காரம் செய்வதற்காக லட்சக்கணக்கில் செலவிடப்படுகிறது. அலங்காரம் செய்யப் பயன்படும் பொருட்களும் எண்ணிக்கையில் அடங்காமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

வீடுகளில் உள் அலங்காரம் செய்வதற்காக லட்சக்கணக்கில் செலவிடப்படுகிறது. அலங்காரம் செய்யப் பயன்படும் பொருட்களும் எண்ணிக்கையில் அடங்காமல் அதிகரித்துக்கொண்டே  இருக்கிறது. உள் அலங்காரம் என்றால் அதிக செலவாகும் என்ற எண்ணம் எழுந்திருக்கிறது. ஆனால் வீடுகளில் உள் அலங்காரம் செய்வதற்கும் செலவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அழகியல் உணர்வே அலங்காரத்தின் ஆதாரம்.

வீட்டின் அளவு முக்கியம் அல்ல

வீட்டின் அளவுக்கும் உள் அலங்காரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிக இடப்பரப்பில் கட்டப்பட்ட பெரிய வீடுகளுக்கு மட்டும்தான் உள் அலங்காரம் செய்யவேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. மனிதர்கள் வாழும் இடம் எது என்றாலும் அங்கு அலங்காரம் செய்யலாம். சிறிய அளவிலான வீடுகளிலும் உள் அலங்காரம் செய்யலாம்.

செலவு செய்யவேண்டிய அவசியமில்லை


உள் அலங்காரம் என்பது வாழும் சூழலை அழகாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்யப்படுகிறது. அதிக செலவு செய்து உள் அலங்காரம் செய்யவேண்டும் என்று நிபந்தனை இல்லை. கலையுணர்வு உள்ளவர்கள் தங்களுக்கு எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே உள் அலங்காரம் செய்யலாம். ஆடம்பரத்தைக் காட்டிலும் எளிமையே அழகு.

நாமே அலங்காரம் செய்யலாம்

உள் அலங்காரம் செய்வதற்கு நிபுணர்களின் ஆலோசனை, ஒப்பந்ததாரர்களின் உதவி போன்றவை அவசியமில்லை. நமக்கு பிடித்தமான அலங்காரத்தை நாமே செய்துகொள்ளலாம். அது மனதிற்கு மிகவும் நெருக்கமாகவும் இருக்கும்.

குறைவான பொருட்களே அறையின் அழகு

வீட்டின் அறைகளில் இடம் இருக்கிறது என்பதற்காக தேவை இல்லாத பொருட்களை நிரப்பி வைக்கக்கூடாது. கண்டிப்பாக ஒவ்வொரு அறையிலும் நடந்து செல்வதற்கு வாய்ப்பாக தாராளமாக இடம் இருக்கவேண்டும். மரச்சாமான்கள், அலமாரிகள் என்று வீடு முழுக்க குவித்துவைக்கக் கூடாது.

சுத்தமே பேரழகு

வீட்டில் விதவிதமான அலங்காரங்களை செய்தாலும் அதை சுத்தமாக பராமரிக்க வேண்டியது முக்கியமானதாகும். அழகான பொருட்களை அடுக்கிவைத்து அதை பராமரிக்காமல்விட்டால் அலங்கோலமாக காட்சியளிக்கும். எனவே வீட்டை இயன்றவரை சுத்தமாக பராமரிக்கவேண்டும். சுத்தம் அழகுக்கு மேலும் அழகூட்டும்.

Next Story