வீட்டு கடனுக்கு காப்பீடு அவசியம்


வீட்டு கடனுக்கு காப்பீடு அவசியம்
x
தினத்தந்தி 14 April 2017 11:45 PM GMT (Updated: 14 April 2017 12:49 PM GMT)

சுய முயற்சியின் அடிப்படையில் வீடு வாங்குவது ஒருவரது வாழ்க்கையின் முக்கியமான விஷயமாகும்.

சொந்த வீடு என்பது ஒருவகை முதலீடு என்ற பொருளாதார நோக்கில் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மத்திய தர மக்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலமாக பெறப்பட்ட கடன்கள் வாயிலாகத்தான் தங்களது சொந்த வீட்டு கனவை நிஜமாக்குகிறார்கள்.

தவணை காலம்

வீட்டு கடன்கள் பெரும்பாலும் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட தவணைக்காலம் கொண்டவையாக இருக்கின்றன. ஒரு தனி மனித வாழ்வில் 10 வருடங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலகட்டம் என்பது பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். வங்கி கடனை திருப்பி செலுத்தும் விஷயத்தில் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட காலத்தை செலவழிக்க வேண்டியதாக உள்ளது என்று பலரும் தெரிவிப்பது கவனிக்கத்தக்கது.

பாதுகாப்பு

வாழ்க்கையில் மாற்றங்கள் என்பதுதான் மாறாதது என்ற நிலையில் பல ஆண்டுகள் தவணைகள் கொண்ட வங்கி கடன்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது வீட்டு கடனுக்காக காப்பீடு செய்துகொள்வது என்பது பாதுகாப்பானதாகவும், பல்வேறு பொருளாதார நன்மைகளையும் கொண்ட முடிவாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். வீட்டிற்கான காப்பீடு பற்றி நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கும் தகவல்கள் பற்றி இங்கே காணலாம்.   

காப்பீட்டு முறைகள்

பொதுவாக, வாங்கப்பட்ட மொத்த கடன் தொகைக்கும் காப்பீடு செய்வதுதான் சிறந்த வழியாகும். இருந்தாலும், நாளடைவில் குறைந்துகொண்டே வரும் கடனின் தன்மைக்கு ஏற்ப, காப்பீட்டுக்கான தொகையும் குறிந்துகொண்டே வரக்கூடிய காப்பீட்டு முறையும் நடைமுறையில் இருக்கிறது. அதாவது, பெறும்போதே காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை வீட்டு கடனோடு சேர்த்து, கடனாக வாங்கிக்கொள்ளலாம். வீட்டு கடன் குறைய குறைய காப்பீட்டுக்கான 'கவரேஜ்' தொகையும் குறைந்துகொண்டே வருவதுபோன்று கணக்கிடப்படும்.

பிணையம்

நிதி நிறுவனங்கள் அல்லது வீட்டு கடன் அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை தரக்கூடிய கடன்களுக்கான பாதுகாப்பை பல நிலைகளில் உறுதி செய்துகொள்கின்றன. வழக்கமாக சம்பந்தப்பட்ட வீடானது பிணையமாக காட்டப்படுகிறது. இன்னும் பாதுகாப்பான முறையாக கடன் தொகைக்கு சமமான காப்பீட்டின் பலன்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனத்திற்கு கிடைக்குமாறும் கடனுக்கான பிணையமாக தரலாம்.

தவணை முறைகள்

பொதுவாக வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் காப்பீட்டு நிறுவனங்களோடு இணைந்து காப்பீட்டு தவனையை கணக்கிட்டு, வீட்டு கடனோடு சேர்த்து கணக்கிட்டு பெற்றுக்கொள்கின்றன. மேலும், வீட்டு கடனை திருப்பி செலுத்தும்போது, காப்பீட்டு தவணையை மாதாமாதம் செலுத்தும் வசதியும் உள்ளது.

வீட்டு கடனாக ரூ.20 லட்சம் பெறும்பட்சத்தில், அதே அளவுக்கு காப்பீடு (டேர்ம் பிளான்) எடுக்க நிதி ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கடன் தொகைக்கான தவணை காலம் 20 ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில், காப்பீட்டுக்கான தவனையை ஒரே தவணையாக செலுத்துவதாக இருந்தால் ரூ. 70 ஆயிரத்திலிருந்து ரூ. 80 ஆயிரம் வரை இருக்கலாம். அந்த தொகையை ஆண்டு தவணையாக செலுத்துவதென்றால் ஒரு ஆண்டுக்கு ரூ. 3000 முதல் ரூ. 5,000 வரை தவனை தொகை இருக்கலாம். மேற்கண்ட தொகையை வீட்டு கடனோடு சேர்த்தும் செலுத்தலாம் அல்லது தனிப்பட்ட முறையிலும் செலுத்தலாம்.

பல பயன்கள்

பல்வேறு இயற்கை காரணங்களால் வீடு பாதிப்படையும் பட்சத்தில் அதற்கும் தக்க காப்பீட்டு திட்டங்கள் இருக்கின்றன. இந்த காப்பீட்டை பெறுவதன் மூலம் பாதிப்புகளுக்கான தொகையை பெற்று வீட்டை சீரமைத்துக்கொள்ள இயலும். வழக்கமாக, இதுபோன்ற காப்பீடுகளை வீட்டு கடன் வழங்கும் நிறுவனம் அல்லது வங்கிகள் சம்பந்தப்பட்ட வீட்டின் பெயரில் எடுத்துவிடும். காப்பீட்டுக்கான மொத்த தொகை மற்றும் தவணைகள் வழக்கமான விதத்தில் இருக்கும்.


Next Story