மகிழ்ச்சியை வரவழைக்கும் வரவேற்பறைகள்


மகிழ்ச்சியை  வரவழைக்கும்  வரவேற்பறைகள்
x
தினத்தந்தி 15 April 2017 12:15 AM GMT (Updated: 14 April 2017 12:51 PM GMT)

நம்முடைய தாத்தா, பாட்டி காலங்களில் வீடுகளின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட திண்ணைகள் வரவேற்பறையாக பயன் படுத்தப்பட்டன.

திண்ணை என்ற அமைப்பு வழக்கில் இல்லாத இன்றைய நாகரிக உலகில், வீடுகளின் வரவேற்பறைகளை திண்ணையின் மாற்று வடிவங்களாக சொல்லலாம். பொதுவாக குடும்ப அங்கத்தினர்கள் உள்ளிட்ட மற்றவர்களும் பயன்படுத்தும் அறையாக இருப்பதால், வரவேற்பறையை அழகாகவும், எளிமையாகவும் இருக்கவேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அழகு 'டிப்ஸ்'

ஒரு வீட்டுக்கு முகம் போல வரவேற்பறை விளங்குவதால் அதன் அலங்கார அமைப்பு பற்றி பலரும் கவனம் செலுத்துவார்கள். பொதுவாக பொருட்களை விடவும், அவற்றை தேர்ந்தெடுத்து, 'கிரியேட்டிவாக' நாம் பயன்படுத்துவதுதான் வீட்டின் அழகை தீர்மானிக்கும் என்று உள்கட்டமைப்பு நிபுணர்கள் சொல்வது கவனிக்கத்தக்கது. எளியமுறையில் வரவேற்பறையை அழகாக மாற்றுவது குறித்து அவர்கள் தரும் முக்கியமான 'டிப்ஸ்களை' இங்கே காணலாம்.

'ரக்ஸ்'

வரவேற்பறையில் நுழைவதற்கு முன்னர் கால்கள் பதிக்கும் இடம் 'ரக்ஸ்' எனப்படும் சின்ன மிதியடிகள் ஆகும். அவை பல்வேறு பொருட்களால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் நார் பொருட்களால் செய்யப்பட்ட மிதியடிகள் புழங்குவதற்கும், சுத்தம் செய்வதற்கும் எளிதாக இருப்பதால், வரவேற்பறைக்கு அவை பொருத்தமாக இருக்கும். பல்வேறு டிசைன்களில் இருப்பதைவிடவும், நல்வரவு, வணக்கம் என்ற வார்த்தைகள் கொண்ட மிதியடிகள் வித்தியாசமாக இருக்கும்.  
          
'புளோர் டிசைன்'

வரவேற்பறைக்கு பெரும்பாலும் வெளிர் வண்ணங்கள்தான் கச்சிதமாக பொருந்தும். வீட்டுக்கு உட்புறம் உள்ள நிறம் அல்லது அதற்கு எதிர்மாறான 'கான்ட்ராஸ்ட்' கலர்களில் வரவேற்பறையின் தரைத்தளம் இருக்கலாம். பொதுவாக, வெளிர் நிறத்திலான தரை அமைப்பு இடத்தை சற்று பெரிதாக காட்டும்.

'வால் பெயிண்டு'

அழுத்தமான நிறங்கள் பூசப்பட்ட அறையில் வெளிச்சம் குறைவாக இருப்பது போல் தெரியும். வெளிர் நிறங்களை பயன்படுத்தும்போது வரவேற்பறையானது குளிர்ச்சியாகவும், பெரிதாகவும் தெரிவதோடு, வெளிச்சமாகவும் இருக்கும். வாடகை வீடாக இருந்தால், அங்கு போடப்பட்டுள்ள 'பர்னிச்சர்' வகைகளுக்கு ஏற்ப 'வால் பேப்பர்களை' ஒட்டி அழகு செய்யலாம்.

'சோபா செட்'

சற்று பெரிய அளவு வரவேற்பறையாக இருந்தால், அறையின் மூலை சுவர்களை ஒட்டியபடி ஆங்கில 'எல்' வடிவ சோபாவை போடுவது பொருத்தமாக இருக்கும். 'டிவி கேபினட்' அமைப்பை அதற்கு எதிர்ப்புறமாக வைக்கலாம். சிறிய அறையாக இருக்கும்பட்சத்தில் சோபாவை நடுப்பகுதியில் போடுவதே நல்லது. அகலம் குறைவாகவும், சாய்ந்து கொள்ளும் பகுதியில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சோபாக்கள் சிறிய அறைக்கு அழகு செய்யும்.

சென்டர் டேபிள்

பொதுவாக, வரவேற்பறை நடுவில் போடப்படும் 'டீபாய்' எனப்படும் 'சென்டர் டேபிள்' சோபாவை விடவும் குறைந்த உயரத்தில் இருக்கவேண்டும். சோபாவின் வண்ணத்துக்கு பொருந்துவதுபோலவும் இருக்க வேண்டும். அவற்றின் மேல்புறத்தில் அழகான 'நாப்கின்' அல்லது 'எம்ப்ராய்டரி டிசைன்' செய்யப்பட்ட துணியையும் விரித்து வைக்கலாம்.

செடிகள்

உயரம் குறைந்த, அடர்த்தி மற்றும் பசுமையான செடி வகைகள்தான் வரவேற்பறைக்கு பொருத்தமானது. அவ்வப்போது அவற்றை 'ட்ரிம்' செய்து வைப்பதும் அவசியம். அவற்றின் பசுமை காரணமாக, கண்களுக்கு குளிர்ச்சி உண்டாவதோடு அங்கு உள்ள மற்ற பொருட்களுக்கும் எடுப்பான தோற்றத்தை தரும். செடிகளை சுவரை ஒட்டியவாறு வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைக்கவேண்டும். சோபாவை ஒட்டியபடியும் அவற்றை வைக்கக்கூடாது. 

'கார்ப்பெட்'

பொதுவாக, வீடுகளில் 'பிரவுன்' கலர் அல்லது சிவப்பு 'கார்ப்பெட்' போடுவது வழக்கம். நடக்கும் வழியை விட்டு சற்று தள்ளி நடுப்புறத்தில் அவற்றை போடவேண்டும். பாதையில் போடப்படும் 'கார்ப்பெட்' மிதியடி போன்று மாறிவிடக்கூடும். அறையின் பர்னிச்சர் மற்றும் வண்ணங்களுக்கு ஏற்ப மெரூன், ப்ரவுன், பீஜ் என்று பல்வேறு வண்ண 'கார்ப்பெட்கள்' இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

'சாண்டலியர்கள்'

வரவேற்பறை 'சீலிங்' உயரம் குறைவாக இருந்தால் 'லைட் செட்டிங்' மேல் நோக்கியவாறு இருக்கவேண்டும். உயரமான 'சீலிங்' அமைப்புகளுக்கு கீழ்நோக்கி பார்த்தபடி இருக்கும் 'டூம் லைட் செட்டிங்' முறையை பயன்படுத்தலாம். அறை சற்று பெரிதாக இருந்தால் 4 அல்லது 5 'டூம் லைட்டுகள்' அல்லது 'சாண்டலியர்' எனப்படும் சர விளக்குகள் பொருத்தியும் 'கலக்கலாக' வரவேற்பறையை மாற்றலாம். 

Next Story