வீட்டுக்கடன் வட்டி மானிய திட்டத்தின் காலம் நீட்டிப்பு


வீட்டுக்கடன் வட்டி மானிய திட்டத்தின் காலம்  நீட்டிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2017 12:15 AM GMT (Updated: 13 Oct 2017 12:28 PM GMT)

கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1.20 சதவீதம் வரை வங்கி கடனுக்கான வட்டி குறைந்துள்ள நிலையில், வீட்டுக்கடன் பெற்றவர்களின் இ.எம்.ஐ குறிப்பிட்ட அளவு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

டந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1.20 சதவீதம் வரை வங்கி கடனுக்கான வட்டி குறைந்துள்ள நிலையில், வீட்டுக்கடன் பெற்றவர்களின் இ.எம்.ஐ குறிப்பிட்ட அளவு குறைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய அரசு வட்டி மானிய திட்டத்தில் (credit linked subsidy scheme) சில சலுகைகளையும் அறிவித்திருந்தது. கடந்த ஜனவரி முதல் அவை அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒரு நபர் அதிக பட்சமாக ரூ.2.30 லட்ச ரூபாய் வரை வட்டி மானியம் பெற இயலும்.

இரு பிரிவுகள்

மேற்கண்ட சலுகைகளில் கடன் தொகையை பொறுத்து இரு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவான 9 லட்ச ரூபாய்க்குள் வாங்கப்படும் கடனுக்கு 4 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இரண்டாம் பிரிவான 12 லட்ச ரூபாய்க்குள் வாங்கப்படும் வீட்டுக்கடனுக்கு 3 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் அடிப்படையில், அதிகபட்சமாக 2.35 லட்ச ரூபாய் வரையில் வட்டி மானியம் கிடைக்கும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

வீட்டின் சுற்றளவு

முதல் பிரிவில் சலுகை கிடைக்க வேண்டும் என்றால் வீடு 90 சதுர மீட்டர் சுற்றளவு கொண்டதாகவும், இரண்டாம் பிரிவில் சலுகை கிடைக்க வேண்டும் என்றால் வீடு 110 சதுர மீட்டர் சுற்றளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும். கடன் தொகையும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.

சலுகைக்கு ஒப்புதல்

விண்ணப்பித்தவர்களுக்கு வீட்டு கடன் கிடைத்தவுடன், சலுகைக்கு ஒப்புதல் வழங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹட்கோ மற்றும் தேசிய வீட்டு வங்கிக்கு (என்.ஹெச்.பி) விண்ணப்பம் செய்யவேண்டும். தகுதி வாய்ந்தவர்களுக்கு சி.எல்.எஸ்.எஸ் திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டு அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகை அசல் தொகையில் இருந்து கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும்.

மாதாந்திர தவணை

உதாரணமாக, 12 லட்ச ரூபாய் வீட்டுக்கடனுக்கு சி.எல்.எஸ்.எஸ் திட்டத்தின் கீழ் அசல் தொகையில் ரூ.2.30 லட்சம் தள்ளுபடி கிடைக்கும். அந்த நிலையில் மாத தவணை ரூ.10,528 என்று இருக்கும் பட்சத்தில், ரூ.2,000 குறைந்து ரூ.8,508 என்ற அளவுக்கு மாத தவணை குறையும். கடன் பெற்ற பிறகு வட்டி மானியம் கிடைக்க மூன்று மாத காலம் ஆகலாம்.

மார்ச் வரை நீட்டிப்பு


இந்த நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அதிகாரிகள் ‘நடுத்தர வருவாய் பிரிவினர் வீடுகள் கட்டிக்கொள்வதற்கு வட்டி மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம், 2019–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, மேலும் 15 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்..’ என்று தெரிவித்தனர்.

வட்டி மானியம்

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்கள், ரூ.9 லட்சம் கடன் வாங்கி, 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்த, அரசு 4 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்கிறது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை உள்ளவர்கள் 3 சதவீத வட்டி மானியம் பெறலாம்.

Next Story