இரும்பு கிரில் அமைப்புகளில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்


இரும்பு கிரில்  அமைப்புகளில்  கவனிக்க  வேண்டிய  அம்சங்கள்
x
தினத்தந்தி 14 Oct 2017 12:30 AM GMT (Updated: 13 Oct 2017 12:30 PM GMT)

கட்டுமான அமைப்புகளின் பல இடங்களில் இரும்பால் தயாரிக்கப்பட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டியதாக இருக்கும்.

ட்டுமான அமைப்புகளின் பல இடங்களில் இரும்பால் தயாரிக்கப்பட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டியதாக இருக்கும். உதாரணமாக, மேல் மாடியில் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் தடுப்பு கிரில்கள், ஜன்னலில் பொருத்தப்படும் கிரில், மாடிப்படி பக்கவாட்டில் உள்ள கைப்பிடிகள், பிரதான இரும்பு கேட் மற்றும் வாயில் பகுதிகளில் அமைக்கப்படும் கிரில் கேட் போன்றவை இரும்பை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

கவனிக்க வேண்டியவை

இரும்பால் தயாரிக்கப்பட்ட கட்டுமான பொருட்களை ஒட்டு மொத்தமாகவோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது இரும்பின் எடைக்கணக்கிலோ வாங்கும்பட்சத்தில் கவனிக்க வேண்டிய வி‌ஷயங்களை கட்டுமான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை பார்க்கலாம்.

1) இரும்பால் தயாரிக்கப்பட்ட கட்டுமான துணை பொருட்களை வாங்கும் சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் சம்பந்தப்பட்ட பொருள் அல்லது பொருட்களின் விலை பற்றி கேட்ட பின்னர் முடிவு செய்வது நல்லது.

2) ஒரு நிறுவனத்திடமிருந்து அல்லது தயாரிப்பு பட்டறை மூலம் இரும்பு பொருட்களை வாங்குவதற்கு முன்னர், அவர்களால் செய்து முடிக்கப்பட்ட வேறு பொருட்கள் அங்கே இருந்தால் அவற்றின் வடிவமைப்பு மற்றும் தரம் ஆகியவை பற்றி கவனிக்க வேண்டும்.

3) வீடுகளில் உள்ள ஜன்னல் அல்லது கதவுகளுக்கான அளவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரே நேரடியாக வந்து எடுத்துக்கொள்வது பல சிக்கல்களை தவிர்க்கும்.

4) நமது பொருட்களுக்கான இரும்பின் தரம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். வட்டம் அல்லது சதுர வடிவ இரும்பு குழாய்கள், எல்–ஆங்கிள் அல்லது ப–சேனல் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றில் துரு இல்லாமல் சுத்தமாகவும், சம்பந்தபட்ட இரும்பு நிறுவனத்தின் முத்திரை இருப்பதையும் கவனிக்கவேண்டும்.

5) குறிப்பாக, நீளமான இரும்பு குழாய்கள், சேனல்கள் அல்லது ஆங்கிள்கள் வெல்டிங் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுகளை ஒன்றாக இணைத்து பயன்படுத்தி இருக்கக்கூடாது.

6) கதவு, ஜன்னல் மற்றும் படிகளுக்கான கைப்பிடிகள் ஆகியவற்றின் முனைகள் கூராகவும், பினிஷிங் சரியில்லாமலும் இருப்பது கூடாது. அவற்றில் போடப்பட்டிருக்கும் துளைகள் கச்சிதமாக இருப்பதும் முக்கியம்.

7) கிரில் வகைகள் துரு ஏறாமல் சுத்தமாக இருப்பதோடு, நல்ல முறையில் பெயிண்டிங் செய்யப்பட்டிருப்பதும் அவசியம். கதவு, ஜன்னல் போன்ற அமைப்புகளுக்கு சுவரில் பொருத்துவதற்கேற்ப தக்க இணைப்புகளை கொண்டிருப்பது முக்கியம்.     

8) இயன்ற வரையில் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கிரில் வகைகள் அவற்றின் அளவுகளுக்கேற்ற சரியான எடை அளவில் உள்ளதா..? என்பதை பரிசோதித்துக் கொள்வது நல்லது. 

Next Story