அறைகளில் குளிர்ச்சி நிலவ உதவும் ‘பால்ஸ்–சீலிங்’ அமைப்பு


அறைகளில் குளிர்ச்சி நிலவ உதவும்  ‘பால்ஸ்–சீலிங்’ அமைப்பு
x
தினத்தந்தி 14 Oct 2017 1:30 AM GMT (Updated: 13 Oct 2017 12:38 PM GMT)

வருடத்தின் பெரும்பாலான நாட்களில் நமது பகுதிகள் அதிகப்படியான வெப்பத்தால் பாதிக்கப்படும் நிலையில், அதை தடுக்க அறைகளுக்குள் ‘பால்ஸ் சீலிங்’ முறை கடைப்பிடிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.

ருடத்தின் பெரும்பாலான நாட்களில் நமது பகுதிகள் அதிகப்படியான வெப்பத்தால் பாதிக்கப்படும் நிலையில், அதை தடுக்க அறைகளுக்குள் ‘பால்ஸ் சீலிங்’ முறை கடைப்பிடிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. கிட்டத்தட்ட ஆறு வகைகளுக்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு அமைக்கப்படும் பால்ஸ் சீலிங் வகைகள் அழகிய தோற்றம் தரக்கூடியதாக விளங்குகின்றன. உயரமான மேற்கூரையில் பதிக்கப்பட்டுள்ள ‘ஒயரிங்’ அமைப்புகள் மற்றும் ‘கம்ப்யூட்டர்’ சம்பந்தமான ‘கேபிள்கள்’ ஆகியவற்றை மறைப்பதற்கேற்பவும் ‘பால்ஸ் சீலிங்’ வகைகள் அமைக்கப்படுகின்றன.

ஜிப்சம் சீலிங்’

‘கால்சியம் சல்பேட்’ என்ற வேதிப்பொருளால் இவை அமைக்கப்படுகின்றன. சுவரின் மேற்பூச்சாகவும் அதை பயன்படுத்தும் தொழில்நுட்பமும் பரவலாக இருந்து வருகிறது. ‘பாக்ஸ் சீலிங்’ அமைக்கும் பொருட்களில் முக்கியமான இடத்தில் ஜிப்சம் இருக்கிறது. அதிக கனம் இல்லாமலும், நெருப்பால் பாதிக்கப்படாத தன்மை கொண்டதாகவும் இருப்பதால் எளிதாக பயன்படுத்தலாம். அறையின் எதிரொலியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இவை ‘ஸ்கொயர் போர்டுகளாகவும்’ கிடைப்பதால் பொருத்துவது எளிது.  

‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’

சுருக்கமாக பி.ஓ.பி என்று சொல்லப்படும் இந்த வகை தொழில்நுட்பமும் பால்ஸ் சீலிங் அமைப்பதில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. குறைந்த பராமரிப்பில் நீண்ட காலத்துக்கு உழைப்பவையாகவும் இவை அறியப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட வெப்ப நிலையில் சூடாக்கப்பட்ட ஜிப்சம், பிளாஸ்டர் ஆப் பாரிஸ்–ஆக வடிவம் பெறுகிறது, அழகான கண் கவரும் தோற்றத்தை தரக்கூடிய இவை சிறப்பான இன்சுலே‌ஷன் தன்மை கொண்டதாக அறியப்பட்டுள்ளது.

இதர வகைகள்

• மேற்கண்டவை தவிரவும் பைபர் பால்ஸ் சீலிங், மரத்தாலான சீலிங், கண்ணாடி பால்ஸ் சீலிங், உலோக பால்ஸ் சீலிங் மற்றும் தோல் பொருட்களால் ஆன பால்ஸ் சீலிங் என்று அவை பல விதங்களாக இருக்கின்றன.

• ‘பிளாஸ்டர்ஆப் பாரிஸ்’ முறையில் உட்கூரையில் சட்டங்கள் மீது இரும்பு வலை அமைத்து, பி.ஓ.பி–யால் கொண்டு அலங்கரிக்கப்படும். அதன்மீது வால் பேப்பர் அல்லது பெயிண்ட் பூச்சு பயன்படுத்தப்பட்டு அழகாக மாற்றப்படும்.

• மரப்பலகைகளை கொண்டும் இவ்வகை உட்கூரைகள் அமைக்கப்படுகின்றன. விலை குறைந்த மரப்பலகைகள்மீது, தரமான மரப்பலகைகளை பதித்து, அலங்கார விளக்குகள் பொருத்தப்படும்.

உட்புற அமைப்புகள்

பால்ஸ் சீலிங் அமைப்பின் உட்புறத்தில் நெருப்பை தடுக்கும் ஸ்பிரிங்ளர் அமைப்பு, எல்.இ.டி விளக்குகள் போன்றவை மறைவாக அமைக்கப்படுவதால் தனி அழகாக தோற்றம் தரும். பொதுவாக பால்ஸ் சீலிங் வகைகள் வெப்ப தடுப்பாகவும் செயல்படுகின்றன. உட்கூரை மற்றும் பால்ஸ் சீலிங் ஆகியவற்றின் இடைவெளியில் உள்ள காற்று வெப்ப பரவலை தடுப்பதோடு, அதிகப்படியான ஏ.சி பயன்பாட்டை தவிர்க்கவும் உதவுகிறது. இவ்வகை கூரைகளால் மின்சார பயன்பாடு குறைவதோடு, ஒலியை உறிஞ்சிக் கொள்வதால் அறையில் அமைதி நிலவும் என்பதும் கவனிக்கத்தக்கது.

கண்கவர் சாண்டலியர்

இவ்வகைக் கூரை அமைத்த பின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கலாம். ஒளியை மட்டும் ஒளிரக்கூடிய மறைவான விளக்குகள் அல்லது நேரடியான அலங்கார விளக்குகள் கொண்டும் அலங்கரிக்கலாம். நடுவே கண் கவரும் சாண்டலியர் என்ற சர விளக்கை பொருத்தியும் அழகாக்கலாம். கிரிஸ்டல் சர விளக்குக:ள் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

நடைமுறை சிக்கல்கள்


பால்ஸ் சீலிங் முறையானது அழகியல் அம்சம் கொண்டதாக இருந்தாலும் அதன் அமைப்புக்கேற்ப, வீடுகளில் உள்ள சிறிய பூச்சிகள் அவற்றை தங்களது வசிப்பிடமாக அமைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதை மனதில் கொள்ளவேண்டும். குறிப்பாக, அவ்வப்போது வரக்கூடிய பண்டிகை காலங்களில் கூரைகளில் அலங்காரம் செய்வது சற்று சிரமமாக இருப்பதோடு, அறையின் மொத்த உயரம் சிறிது குறைந்ததுபோலவும் தோற்றமளிக்கலாம்.  

Next Story