வீடு-மனைகளுக்கான பத்திரப்பதிவு நடைமுறை


வீடு-மனைகளுக்கான பத்திரப்பதிவு நடைமுறை
x
தினத்தந்தி 9 Dec 2017 4:59 AM GMT (Updated: 9 Dec 2017 4:59 AM GMT)

வீடு மற்றும் மனை ஆகியவற்றை விற்பது அல்லது வாங்குவது போன்ற வர்த்தக பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம்.

வீடு மற்றும் மனை ஆகியவற்றை விற்பது அல்லது வாங்குவது போன்ற வர்த்தக பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள் அமைந்துள்ள இடங்களுக்கு, அவற்றின் சந்தை மதிப்புகளை பொறுத்து அரசின் வழிகாட்டி மதிப்பு (Guide line value) வெவ்வேறு விதங்களில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கலாம். அந்த மதிப்பிற்கேற்ப ஆவணங்களை தயார் செய்யும்போது, முழு மதிப்பிற்கும் முத்திரைத்தாள் வாங்க முடியாத நிலையில், குறிப்பிட்ட மதிப்புக்கு வாங்கிவிட்டு மீதி உள்ள மதிப்பை சார்பதிவாளர் அலுவலகத்திலும் செலுத்தலாம்.

பதிவு கட்டணம்

மேற்கண்ட கட்டணத்தை செலுத்த 41 என்ற படிவத்தில் வாங்கப்பட்ட முத்திரைத்தாள் மதிப்பு, வாங்க வேண்டிய முத்திரைத்தாள் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய கட்டணம் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து பத்திரத்துடன் இணைத்து தாக்கல் செய்யவேண்டும். மீதி கட்டணம் ரூ. ஒரு ஆயிரத்துக்கும் மேற்பட்டிருந்தால் ‘கேட்பு வரைவோலையாக’ (DEMEND DRAFT) மீதி தொகையை செலுத்த வேண்டும். அரசு வழிகாட்டி மதிப்பிலிருந்து பதிவுக் கட்டணம் ஒரு சதவிகிதம் மற்றும் கணினி கட்டணம் ரூ. 100 ஆகியவற்றையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையில் ரூ. ஒரு ஆயிரம் வரை பணமாகவும், அதற்கு மேற்பட்ட கட்டணத்தை ‘கேட்பு வரைவோலையாகவும்’ செலுத்தவேண்டும்.

பத்திர பதிவு

முத்திரை தாள்கள் அடங்கிய ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்புறம் சொத்து வாங்குபவர் மற்றும் சொத்து விற்பவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் புகைப்படம், அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரி பார்த்தபின்னர், சார்பதிவாளர் பத்திரத்திற்கான பதிவு எண்ணை குறிப்பிடுவார். பின்னர் விற்பவர் மற்றும் வாங்குபவர் புகைப்படங்கள் முதலாவது முத்திரைத்தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு, கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவதோடு, ஆவணத்திற்கான சாட்சிகள் இருவரது கையொப்பமும் பெறப்பட்டு, பதிவு நிறைவு பெறும்.

பத்திரம் பெறுதல்

பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் ஆகியோர் கையொப்பமிட்டு, குறிப்பிட்ட நாள்கள் கழித்து, இரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து தமது பத்திரத்தை சொத்து வாங்கியவர் பெறலாம். வேறொருவர் வாங்க வேண்டியதிருந்தால், ரசீதில் அவர் கையொப்பமிட வேண்டும்.

‘பெண்டிங் டாக்குமெண்ட்’

பத்திரப்பதிவின் போது அரசு வழிகாட்டி மதிப்பிற்கேற்ப முத்திரைத்தாள் வாங்குவது அவசியம் என்றாலும், அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு அதிகம் என்று கருதுபவர்கள் அவர்களே சொத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்து அதன் மதிப்பிற்கேற்ப குறிப்பிட்ட சதவிகிதத்தை கணக்கிட்டு முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த ஆவணத்தை சார்பதிவாளர் பதிவு செய்த பின்னர் ‘pending document' என்று முத்திரை இடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பிரிவின் அலுவலர் மூலம் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தையும், சுற்றிலும் அமைந்துள்ள மற்ற சர்வே எண்களின் மதிப்பையும் கணக்கிட்டு, முன்னர் குறிப்பிட்டிருந்த அரசு வழிகாட்டி மதிப்பில் வித்தியாசம் உள்ளதா..? என்பதை முடிவு செய்வார் அல்லது அவரே மதிப்பை நிர்ணயம் செய்வார்.

வித்தியாச கட்டணம்

ஒரு வேளை அரசு வழிகாட்டி மதிப்பு சரியாக இருப்பதாக தெரியும் பட்சத்தில் அந்த தொகைக்கும், நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகித தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டணமாக செலுத்தவேண்டும். அதன் பிறகு பத்திரம் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47-கி பிரிவு என்று சொல்லப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரம் அனுப்பப்பட்டு, அங்கு சென்று வித்தியாச கட்டணத்தை செலுத்தி பத்திரத்தை பெற்று கொள்ளலாம்.

Next Story