வளையும் தன்மை கொண்ட புதுமையான சுவர்கள்


வளையும்  தன்மை  கொண்ட  புதுமையான  சுவர்கள்
x
தினத்தந்தி 15 Dec 2017 10:00 PM GMT (Updated: 15 Dec 2017 2:07 PM GMT)

நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் கான்கிரீட் கட்டுமானங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் கான்கிரீட் கட்டுமானங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் EDCC (Eco Friendly Ductile Cementitious Composite)
  என்ற வளையும் தன்மை கொண்ட சுவர்களை வடிவமைத்து பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு சாதனை செய்துள்ளது.

மேற்பூச்சு பாதுகாப்பு

அதாவது, சுவர்களில் அமைக்கப்படும் மேற்பூச்சு காரணமாக சுவர்கள் எளிதில் உடைவது தடுக்கப்படுவதாக அவர்களது முதற்கட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறையில் ஒட்டுமொத்த சுவரும் வளையக்கூடிய தன்மை கொண்டதாக இருக்காது. அவற்றின்மீது அமைக்கப்பட்ட மேற்பூச்சானது, சுவர்கள் முன்பின்னாக அசையும் சமயங்களில் சுவர்கள் சுலபமாக நொறுங்கி விழாமல், வளைந்து கொடுத்து பாதுகாக்கிறது.

‘ஸ்பிரே’ இயந்திரம்

பாலிமர், செயற்கை ரசாயன இழைகளால் தயாரிக்கப்பட்ட பைபர், சிமெண்டு, பிளை ஆஷ் மற்றும் இதர ரசாயன பொருட்கள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து குறிப்பிட்ட விகிதாச்சார கலவையாக ஈ.டி.சி.சி உருவாக்கப்படுகிறது. வழக்கமான சுவர் கட்டுமான வேலைக்கு பிறகு மேற்பூச்சு செய்யும்போது, ஈ.டி.சி.சி கலவை மூலம் 10 மி.மி அளவில் கனமான மேற்பூச்சு அமைக்கப்படுகிறது. அதற்காக, கான்கிரீட் ஸ்பிரே செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

வளரும் தொழில்நுட்பம்

கான்கிரீட் சுவர்கள் பக்கவாட்டு அழுத்தம் ஏற்படும்போது எளிதில் உடைந்துவிடுகின்றன. ரப்பர் அல்லது எலாஸ்டிக் போன்று கான்கிரீட் இருக்கும்பட்சத்தில் அவை உடைவதில்லை என்ற அடிப்படையில் சுவர்களின் மேற்பூச்சு நெகிழும் தன்மையையுடன் அமைக்கப்படுகிறது. இந்த மேற்பூச்சு படலம் சுவர்களுக்கு பாதுகாப்பாக அமைகிறது. வரக்கூடிய ஆண்டுகளில் மேற்கண்ட தொழில்நுட்பம் மூலம் ஒட்டுமொத்த சுவர்களையும் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதோடு, ‘பிரிகேஸ்ட் பேனல்களும்’ தயாரிக்கப்பட உள்ளதாக ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நன்மைகள்

இந்த தொழில்நுட்பம் மூலம் சிமெண்டு உபயோகம் குறிப்பிட்ட அளவு குறைவதோடு, விரிசல்கள் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு பாதுகாப்பாக இருப்பதால் சிறிய மற்றும் பெரிய அளவிலான சுவர்கள் மற்றும் தரைப்பரப்புகளுக்கு பயன்படுத்த முடியும். குறிப்பாக, நெருப்பால் பாதிக்கப்படாத தன்மை கொண்டதாகவும் இருப்பதால் கூடுதல் பாதுகாப்பாகவும் உள்ளது. ஈ.டி.சி.சி– தொழில்நுட்பத்தில் நிறைய ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதால் விலை சற்று கூடுதலாக இருக்கும் வாய்ப்புள்ளது.

Next Story