கட்டுமான பணியில் ஏற்படும் செலவுகள்


கட்டுமான  பணியில்    ஏற்படும்  செலவுகள்
x
தினத்தந்தி 15 Dec 2017 10:30 PM GMT (Updated: 15 Dec 2017 2:09 PM GMT)

கட்டுமான பணிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதன் செலவினங்களை கட்டுப்படுத்துவது முக்கியம்.

ட்டுமான பணிகள் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதன் செலவினங்களை கட்டுப்படுத்துவது முக்கியம். கச்சிதமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளிலும்கூட பலருக்கு பட்ஜெட்டில் துண்டு விழுவது பொதுவான சிக்கலாக இருக்கிறது. திடீரென ஏற்பட்ட கட்டிட பொருட்கள் விலையேற்றம், பட்டியலில் இல்லாத புதிய செலவினங்கள், கட்டிட பிளானில் எதிர்பாராது செய்யப்பட்ட கூடுதல் மாற்றங்கள் ஆகியவை கட்டுமான பட்ஜெட்டை எகிற வைக்கின்றன. அத்தகைய செலவுகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிட்டு அவற்றை சரியாக பராமரித்து வருவதற்கும், ஒட்டுமொத்த கட்டுமான செலவுகளை கீழ்க்கண்ட நான்கு வகைக்குள் பிரித்தும் அவர்கள் ஆலோசனைகளை அளித்துள்ளனர். அவற்றை கீழே காணலாம்.

1. அடிப்படைச் செலவுகள்

மனை வாங்குதல், மூலப்பொருட்களை சேமித்து வைப்பதற்கு கொட்டகை அமைத்தல், தேவையான பொருட்கள் கொள்முதல் செய்தல், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பதிவு, அரசின் வரி இனங்கள், ஆவணங்களில் பெயர் மாற்றம் போன்ற சட்டரீதியான செயல்பாடுகளுக்கான செலவுகள், திட்ட அனுமதி பெறுதல் போன்றவை அடிப்படை செலவுகள் ஆகும். இந்த செலவுகளை செய்யும் முன்னர் கட்டுமான வல்லுனர்களிடம் ஆலோசித்துக்கொள்வது நல்லது.

2. அத்தியாவசிய செலவுகள்

பணியாளர்களின் சம்பளம், அவர்களுக்கான தேனீர் அல்லது உணவு, மின்சார செலவு, தண்ணீருக்கான ஏற்பாடு மற்றும் ஒரு சில மூலப்பொருட்களை எடுத்து வருவதற்கான வண்டி வாடகை மற்றும் இதர வகையிலான போக்குவரத்து செலவு போன்றவை அத்தியாவசிய செலவின் கீழ் வருகின்றன. மேற்கண்ட செலவினங்களில் முடிந்த வரையில் சிக்கனமாக இருக்கவேண்டும் என்று அனுபவம் பெற்ற கட்டுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

3. அனாவசிய செலவுகள்

கட்டுமான செலவுகள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் அடங்காமல் போவதற்கு அனாவசிய செலவுகளும் ஒரு காரணம் என்று கட்டுனர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். சொந்தவீடு கட்டியவர்களும், ‘இப்போது செய்யாவிட்டால் எப்போது செய்வது..’ என்ற கருத்தை முன்வைத்து, உறவினர்களில் ஒருசிலர் நமது பட்ஜெட்டை எகிற வைத்து விடுவதாக தெரிவித்துள்ளார்கள். தலைவாசல் அமைப்பில் பயன்படுத்தும் மரங்கள் அனைத்தும் விலை உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்று உறவினர் அல்லது நண்பர்களது கருத்தை ஏற்று செயல்படுவது, அவசியமான மின்விளக்கு அமைப்புகளை விடவும் கூடுதலான இணைப்புகள் மற்றும் விலை உயர்ந்த அலங்கார விளக்குகள், வீட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு விலை உயர்ந்த மார்பிள் கற்கள் பதிப்பது, விலை உயர்ந்த ‘பாத்ரூம் பிட்டிங்ஸ்’ என்ற திடீர் மாற்றங்களும் இவ்வகை செலவினங்களுக்குள் வருகின்றன.

4. எதிர்பாராத செலவுகள்


எதிர்பாராத சூழ்நிலைகளில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, வேலையாட்கள் விடுப்பு காரணமாக அவசர பணிகளுக்கு கூடுதல் செலவில் வேறு ஆட்களை வைத்து பணிகளை முடிப்பது, சரியான சமயத்தில் கட்டுமான பொருட்கள் கிடைக்காமல் அதிக விலைக்கு வாங்குவது, சட்ட ரீதியாக எழும் குறுக்கீடுகள் போன்றவை இந்த செலவுகளுக்குள் வருகின்றன. பொதுவாக, அனைத்து விதமான செலவுகளுக்கும் சிக்கனம் என்ற ஒரு வி‌ஷயம் தீர்வாக உள்ளது. அதை மனதில் வைத்து பணிகளை செய்வதுதான் பாதுகாப்பானது என்று கட்டுனர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Next Story