சென்னையின் எல்லைகள் விரிவாக்கம்


சென்னையின் எல்லைகள் விரிவாக்கம்
x
தினத்தந்தி 12 Jan 2018 10:30 PM GMT (Updated: 12 Jan 2018 12:04 PM GMT)

தரமான உள்கட்டமைப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு சென்னை நகரத்தின் எல்லைகள் விரிவாக்கப்படும் என்று சென்ற வருடம் அரசு அறிவித்திருந்தது.

ரமான உள்கட்டமைப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு சென்னை நகரத்தின் எல்லைகள் விரிவாக்கப்படும் என்று சென்ற வருடம் அரசு அறிவித்திருந்தது. அதன்படி இந்த வருட தொடக்கத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) அதற்கான பணிகளை துவக்கியுள்ளது. 1974–ம் ஆண்டு சட்ட ரீதியான அமைப்பாக சி.எம்.டி.ஏ செயல்பட தொடங்கியபோது, சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. கடந்த 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.

மக்கள் தொகை

வரும் 2026–ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 1.30 கோடியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ள நிலையில், பெருநகர விரிவாக்கம் மூலம் அதை எதிர்கொள்ளும் விதமாக இந்த திட்டம் கவனிக்கப்படுகிறது. அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் ஆகியவை இணைக்கப்படுவதன் மூலம், சென்னை பெருநகரம் 8,878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக விரிவடையும். அதனால், தென்சென்னையின் எல்லைகள் விரிவடைவதோடு, மேற்கு சென்னை எல்லையும் அரக்கோணம் வரையில் விரிவடைவது ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமானதாக இருக்கும் என்றும் வீட்டு வசதிகள் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு சென்னை

சென்னை ரியல் எஸ்டேட்டை நிலவரப்படி தென்சென்னை பிரதான பகுதியாக கவனிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த பத்து வருடங்களில் அம்பத்தூர், ஆவடி, திருமழிசை போன்ற மேற்கு சென்னை பகுதிகளிள் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டன. தென்சென்னை பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஆவடி, திருநின்றவூர் போன்ற பகுதிகளில் தனி வீடுகள் எனப்படும் ‘வில்லா’ வாங்குவது கூடுதலாகி இருப்பதாக வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். வேலூர் மாவட்டம் அரக்கோணம் வரையில் சென்னை பெருநகரத்தின் விரிவாக்கம் செய்யப்படுவதால் அந்தப் பகுதியில் வீடுகள் வாங்குவது மேலும், அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக்கம்

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி மொத்தம் 122 வருவாய் கிராமங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கியதாக பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைகள் விரிவடைந்துள்ளன.  

வடசென்னை கோட்டம்

இதன்படி, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு, வடசென்னை கோட்டமானது, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களுடன் 32 வருவாய் கிராமங்களை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சென்னை கோட்டம்


இதேபோல் அம்பத்தூரை தலைமையிடமாக கொண்டு மத்திய சென்னை கோட்டமானது  அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களுடன் 47 வருவாய் கிராமங்களை கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை கோட்டம்

இதேபோல கிண்டியை தலைமையிடமாக கொண்ட தென் சென்னை கோட்டமானது கிண்டி, மைலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்களை கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலத்திட்டங்கள் பெறலாம்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக இருக்கும் என்ற நிலையில் மக்கள் நலத்திட்டங்களை விரைவாக அந்த பகுதிகளில் பெற முடியும். அதாவது, மருத்துவ வசதிகள், மாவட்ட வேலை வாய்ப்பகங்களில் பதிவு, கல்வி தொடர்பான பணிகள், பேரிடர் மேலாண்மை தொடர்பான அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் தொடர்பான பணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த பணிகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், நிலம் தொடர்பான பணிகள் மற்றும் இதர நலத்திட்டங்களை எளிதில் பெற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story