100–வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார், அம்லா


100–வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார், அம்லா
x
தினத்தந்தி 11 Jan 2017 10:00 PM GMT (Updated: 11 Jan 2017 8:53 PM GMT)

ஜோகனஸ்பர்க், இலங்கை கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா–இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள்

ஜோகனஸ்பர்க்,

இலங்கை கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா–இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் போர்ட்எலிசபெத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 206 ரன்கள் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடந்த 2–வது டெஸ்ட் போட்டியில் 282 ரன்கள் வித்தியாசத்திலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா–இலங்கை அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டென்–3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனான 33 வயது ஹசிம் அம்லாவுக்கு இது 100–வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் 100–வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8–வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். ஏற்கனவே காலிஸ், பவுச்சர், கிரேமி சுமித், பொல்லாக், டிவில்லியர்ஸ், கேரி கிர்ஸ்டன், நிதினி ஆகியோர் இந்த சிறப்பை பெற்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆவார்கள். 99 டெஸ்ட் போட்டியில் ஆடி இருக்கும் அம்லா 25 சதம் உள்பட 7,665 ரன்கள் எடுத்துள்ளார். முச்சதம் அடித்த ஒரே தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இந்த போட்டி குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் அளித்த பேட்டியில், ‘தற்போது கிரிக்கெட் ஆட்டம் வேகமாக அதிக மாற்றங்களை கண்டு வருகிறது. எனவே டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் 100 ஆட்டங்களில் விளையாடுவது என்பது எளிதான காரியம் அல்ல. அனேகமாக தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் 100–வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கடைசி வீரராக அம்லா தான் இருப்பார் என்று நான் கருதுகிறேன். குயின்டான் டி காக், ரபடா ஆகியோருக்கு இந்த வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும், அதற்காக அவர்கள் இன்னும் நீண்டகாலம் பயணிக்க வேண்டி இருக்கிறது’ என்றார்.


Next Story