மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: குஜராத் அணி முன்னிலை


மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: குஜராத் அணி முன்னிலை
x
தினத்தந்தி 11 Jan 2017 11:00 PM GMT (Updated: 11 Jan 2017 8:59 PM GMT)

இந்தூர், மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் குஜராத் அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஞ்சி கிரிக்கெட்

இந்தூர்,

மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் குஜராத் அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ரஞ்சி கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை–குஜராத் அணிகள் இடையிலான இறுதிஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 228 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி தொடக்க நாளில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று குஜராத் வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். தொடக்க வீரர்கள் சமித் கோஹெல் (4 ரன்) பிரியாங் கிரிட் பன்சால் (6 ரன்) ஆகியோர் மும்பையின் வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து மண்ணை கவ்வினர். முக்கியமான நேரத்தில் ஏமாற்றிய பன்சால் (10 ஆட்டத்தில் 1,276 ரன்கள்) இந்த ரஞ்சி சீசனில் அதிக ரன்கள் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த பார்கவ் மெராய் 45 ரன்களில் வெளியேறினார்.

பார்த்தீவ் 90 ரன்கள்

இதன் பின்னர் கேப்டன் பார்த்தீவ் பட்டேலும், மன்பிரித் ஜூனேஜாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜூனேஜாவுக்கு 15 ரன்னில் இருந்த போது ஸ்ரேயாஸ் அய்யர் கேட்ச்சை கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்ட ஜூனேஜா அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார்.

மறுமுனையில் சதத்தை நெருங்கிய பார்த்தீவ் பட்டேல் 90 ரன்களில் (146 பந்து, 12 பவுண்டரி), அபிஷேக் நாயரின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரேவிடம் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் ஜூனேஜாவும் (77 ரன், 95 பந்து, 11 பவுண்டரி) அவுட் ஆனார். இருப்பினும் இந்த ஜோடியின் நிலையான ஆட்டத்தால் குஜராத் அணி மும்பையின் ஸ்கோரை கடந்தது. ருஜூல் பாட் தனது பங்குக்கு 25 ரன்கள் எடுத்தார்.

63 ரன்கள் முன்னிலை

நேற்றைய ஆட்ட நேர முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 92 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 291 ரன்கள் சேர்த்து 63 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருக்கிறது. சிராக் காந்தி (17 ரன்), ருஷ் களரியா (16 ரன்) களத்தில் இருக்கிறார்கள். மும்பை தரப்பில் அபிஷேக் நாயர் 3 விக்கெட்டுகளும், ‌ஷர்துல் தாகுர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இந்த சீசனில் மும்பைக்கு எதிராக முதல் இன்னிங்சில் குஜராத் அணி முன்னிலை பெறுவது இது 2–வது முறையாகும். ஒரே சீசனில் மும்பைக்கு எதிராக ஒரு அணி முதல் இன்னிங்சில் இரண்டு முறை முன்னிலை கண்டிருப்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இன்று 3–வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story