இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்குமா? 2–வது பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் இன்று நடக்கிறது


இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்குமா? 2–வது பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 12 Jan 2017 12:00 AM GMT (Updated: 11 Jan 2017 9:03 PM GMT)

மும்பை, இங்கிலாந்து–இந்தியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2–வது பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.

இந்திய அணி தோல்வி

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் வருகிற 15–ந் தேதி நடக்கிறது.

ஒருநாள் தொடருக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய ‘ஏ’ அணியுடன் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டது. இதன்படி மும்பையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 305 ரன்கள் இலக்கை 7 விக்கெட் இழப்புக்கு எட்டிப்பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் டோனி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியை வீழ்த்தியது.

2–வது பயிற்சி ஆட்டம்

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாம் பில்லிங்ஸ் 93 ரன்னும், ஜாசன் ராய் 62 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவின் சதம் மற்றும் கேப்டன் டோனி, யுவராஜ்சிங், ஷிகர் தவான் ஆகியோரின் அரை சதமும் அணிக்கு பலன் அளிக்காமல் போனது.

இந்த நிலையில் இங்கிலாந்து–இந்திய ‘ஏ’ அணிகள் மோதும் 2–வது 50 ஓவர் பயிற்சி ஆட்டம் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

பதிலடி கொடுக்குமா?

காயத்தில் இருந்து மீண்டு வந்த ரஹானே இந்த போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணிக்கு கேப்டன் பொறுப்பை வகிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்பி இருக்கும் சுரேஷ்ரெய்னா இந்த ஆட்டத்தில் விளையாடுகிறார். இந்த சீசனில் ரஞ்சி போட்டியில் முச்சதம் அடுத்த ரிஷாப் பான்ட் தனது அதிரடியை தொடருவார் என்று நம்பப்படுகிறது.

முந்தைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் கண்ட தோல்விக்கு இந்திய ‘ஏ’ அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்–2 நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான உத்தேச அணிகள் வருமாறு:–

இந்தியா ‘ஏ’: ரிஷாப் பான்ட், ரஹானே (கேப்டன்), சுரேஷ்ரெய்னா, தீபக் ஹூடா, இஷான் கி‌ஷன், ஷெல்டன் ஜாக்சன், விஜய் சங்கர், ‌ஷபாஸ் நதீம், பர்வேஸ் ரசூல், வினய்குமார், பிரதீப் சங்வான், அசோக் திண்டா.

இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ்பட்லர், டாவ்சன், அலெக்ஸ் ஹாலெஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ்வோக்ஸ்.


Next Story