கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: 100–வது போட்டியில் சதம் அடித்து அம்லா சாதனை


கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: 100–வது போட்டியில் சதம் அடித்து அம்லா சாதனை
x
தினத்தந்தி 12 Jan 2017 10:30 PM GMT (Updated: 12 Jan 2017 8:06 PM GMT)

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: 100–வது போட்டியில் சதம் அடித்து அம்லா சாதனை

ஜோகனஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்கா–இலங்கை அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஸ்டீபன் குக் 10 ரன்னிலும், டீன் எல்கர் 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து டுமினி, ஹசிம் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஸ்கோரையும் வேகமாக உயர்த்தினார்கள். அடித்து ஆடிய டுமினி 140 பந்துகளில் 14 பவுண்டரியுடன் தனது 6–வது சதத்தை பூர்த்தி செய்தார். இதனை அடுத்து 100–வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹசிம் அம்லா 169 பந்துகளில் 14 பவுண்டரியுடன் சதத்தை எட்டினார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 26–வது சதம் இதுவாகும். 100–வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 8–வது வீரர், 2–வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அம்லா படைத்தார். தென் ஆப்பிரிக்க வீரர்களில் கிரேமி சுமித் ஏற்கனவே தனது 100–வது டெஸ்டில் சதம் கண்டு இருந்தார். நிலைத்து நின்று ஆடிய டுமினி 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 3–வது விக்கெட்டுக்கு அம்லா–டுமினி ஜோடி 292 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்க அணி திரட்டிய அதிகபட்ச ரன் இதுவாகும். நேற்றைய ஆட்டம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. அம்லா 125 ரன்னுடனும், ஆலிவெர் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story