இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி ‘திரில்’ வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 29 Jan 2017 10:30 PM GMT (Updated: 29 Jan 2017 7:38 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

நாக்பூர்,

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்றிரவு நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் பர்வேஸ் ரசூலுக்கு பதிலாக அமித் மிஸ்ராவும், இங்கிலாந்து அணியில் பிளங்கெட்டுக்கு பதிலாக டாவ்சனும் சேர்க்கப்பட்டனர்.

மீண்டும் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி லோகேஷ் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஆட்டத்தின் 4-வது ஓவரில் டைமல் மில்சின் பந்து வீச்சில் கேப்டன் கோலி சிக்சர், பவுண்டரி விரட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஆனால் அவரது அதிரடிக்கு ஆயுசு குறைவு. கிறிஸ் ஜோர்டான் சற்று வேகத்தை குறைத்து (ஸ்லோ) வீசிய பந்தில் கோலி (21 ரன், 15 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் லோகேஷ் ராகுல் நிலைத்து நின்று விளையாட மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சுரேஷ் ரெய்னா (7 ரன்), யுவராஜ்சிங் (4 ரன்) ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். அடுத்து வந்த மனிஷ்பாண்டே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். பாண்டே 10 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவரது அதிர்ஷ்டம், பந்து ஸ்டம்பு மீது பட்ட போதிலும், பெய்ல்ஸ் கீழே விழவில்லை.

ராகுல் அரைசதம்

மிடில் ஓவர்களில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி, வெகுவாக தடுமாற வைத்தார். சிக்கனமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தார்.

நெருக்கடிக்கு மத்தியில் அரைசதத்தை கடந்த லோகேஷ் ராகுல் 71 ரன்களில் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு ஷேவாக் 68 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ராகுலைத் தொடர்ந்து மனிஷ் பாண்டே 30 ரன்களில் (26 பந்து, ஒரு சிக்சர்) கிளன் போல்டு ஆனார்.

இந்தியா 144 ரன்

இறுதி கட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்குவார்கள் என்று ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. கடைசி ஓவரில் ஹர்திக் பாண்ட்யா (2 ரன்), அமித் மிஸ்ரா (0), டோனி (5 ரன், 7 பந்து) ஆகியோர் வரிசையாக வீழ்ந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது. இது முந்தைய ஆட்டத்தை விட 3 ரன் குறைவாகும்.

அவ்வப்போது கச்சிதமாக மெதுவான பந்துகளை வீசி கட்டுப்படுத்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் தனது பங்குக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்

அடுத்து 145 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. பெரிய மைதானம், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் சாம் பில்லிங்ஸ் (12ரன்), ஜாசன் ராய் (10 ரன்) இருவருக்கும் ஒரே ஓவரில் நெஹரா ‘செக்’ வைத்தார். கேப்டன் மோர்கனை (17 ரன்), சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா காலி செய்தார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் மிஸ்ராவின் முதல் பந்திலேயே கிளன் போல்டு ஆனார். ஆனால் அது நோ-பாலாக போனதால் ஸ்டோக்ஸ் தொடர்ந்து ஆடியதுடன் தனது பங்குக்கு 38 ரன்கள் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

இறுதிகட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியது. 18-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார். கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட போது, 19-வது ஓவரை வீசிய நெஹரா 16 ரன்களை வாரி வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திரில் வெற்றி

கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 8 ரன் மட்டுமே தேவைப்பட்டது. 20-வது ஓவரை பும்ரா துல்லியமாக வீசினார். முதல் பந்தில் ஜோ ரூட்டை (38 ரன், 38 பந்து, 2 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆக்கிய பும்ரா, 2-வது பந்தில் ஒரு ரன் கொடுத்தார். 3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தில் அபாயகரமான வீரர் ஜோஸ் பட்லர் (15 ரன்) கிளன் போல்டு ஆக்கினார். 5-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு சிக்சர் தேவைப்பட்டது. அந்த பந்தை பும்ரா ஆப்-சைடில் புல்டாசாக வீசி அடிக்க விடாமல் செய்து, ஹீரோவாக ஜொலித்தார். இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 139 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக கான்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் நாளை மறுதினம் (புதன்கிழமை) நடக்கிறது.

Next Story