டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆஸ்திரேலியா அச்சுறுத்தல்


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணியின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆஸ்திரேலியா அச்சுறுத்தல்
x
தினத்தந்தி 14 Feb 2017 9:30 PM GMT (Updated: 14 Feb 2017 9:28 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆஸ்திரேலியாவினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆஸ்திரேலியாவினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கோலி 2–வது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா 12–வது இடத்தில் இருந்து 9–வது இடத்துக்கு வந்துள்ளார். மற்றபடி டாப்–10 வரிசையில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (933 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இந்திய கேப்டன் விராட் கோலி கூடுதலாக 20 புள்ளிகள் சேகரித்துள்ளார். ஆனாலும் அது முதலிடத்திற்கு முன்னேறும் அளவுக்கு போதுமானதாக இல்லை.

சுமித்தை விட 38 புள்ளிகள் பின்தங்கி இருக்கும் விராட் கோலி மொத்தம் 895 புள்ளிகளுடன் 2–வது வகிக்கிறார். அடுத்த வாரம் தொடங்கும் ஆஸ்திரேலிய தொடரில் அசத்தும் பட்சத்தில் அவர் 900 புள்ளிகளை தாண்டி விடுவார். இந்த மைல்கல்லை இந்திய வீரர்களில் இதுவரை சுனில் கவாஸ்கர் (916 புள்ளி) மட்டுமே எட்டியுள்ளார். ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர்(898 புள்ளி), ராகுல் டிராவிட் (892 புள்ளி) ஆகியோர் கூட 900 புள்ளிகளை நெருங்கினார்களே தவிர, ஒரு போதும் தொட்டதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

அஸ்வின் முதலிடம்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் தலா 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரவீந்திர ஜடேஜா 877 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளனர். 3 முதல் 5 இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (860 புள்ளி), இலங்கையின் ஹெராத் (827 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் ரபடா (821 புள்ளி) ஆகியோர் இருக்கிறார்கள்.

டெஸ்ட் ஆல்–ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் அஸ்வின் (478 புள்ளி), வங்காளதேசத்தின் ‌ஷகிப் அல்–ஹசன் (441 புள்ளி), ரவீந்திர ஜடேஜா (407 புள்ளி), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (327 புள்ளி), இங்கிலாந்தின் மொயீன் அலி (312 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி நீடிக்கிறார்கள்.

அணிகள் தரவரிசை

ஐதராபாத் டெஸ்டில் 208 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை பந்தாடிய இந்திய அணி, டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் கூடுதலாக ஒரு புள்ளி பெற்று 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. ஆஸ்திரேலியா 2–வது இடத்திலும் (109 புள்ளி), தென்ஆப்பிரிக்கா 3–வது இடத்திலும் (107 புள்ளி), இங்கிலாந்து 4–வது இடத்திலும் (101 புள்ளி), பாகிஸ்தான் 5–வது இடத்திலும் (97 புள்ளி) உள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி குறைந்தது ஒரு டெஸ்டில் வெற்றி பெற்றால் போதும், அதன் பிறகு இப்போதைக்கு ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. அது மட்டுமின்றி ஏப்ரல் 1–ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கு ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பட்டமும் ரூ.6½ லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். அதையும் இந்தியா வசப்படுத்தி விடலாம்.

அதே சமயம் ஆஸ்திரேலிய அணி மூலம் ‘நம்பர் ஒன்’ அரியணைக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அந்த அணி 3–0 அல்லது 4–0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க முடியும்.

4 கேப்டன்களின் அதிசய ஒற்றுமைகள்

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் முதல் 4 இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (933 புள்ளி), இந்தியாவின் விராட் கோலி (895 புள்ளி), இங்கிலாந்தின் ஜோ ரூட் (848 புள்ளி), நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் (823 புள்ளி) ஆகியோர் இருக்கிறார்கள்.

முதல் 4 இடத்தில் உள்ள இவர்கள் 4 பேருக்கும் பல அதிசய ஒற்றுமைகள் இருக்கிறது. அனைவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி படிப்படியாக முன்னேறியவர்கள். 4 பேரும் வலதுகை பேட்ஸ்மேன்கள். தற்போது தங்களது அணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை அலங்கரிக்கிறார்கள். குறைந்தது 50 டெஸ்டுகளில் விளையாடியதுடன், இரட்டை சதமும் அடித்திருக்கிறார்கள்.

மேலும் தற்போதைய காலக்கட்டத்தில் இவர்கள் தான் ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்கள். ஒரே மாதிரியான ரன் வேட்டை, ஏறக்குறைய ஒரே வயதை உடையவர்கள், 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருப்பவர்கள் என்று பல சிறப்பு அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்த மாதிரி ஒற்றுமை அமைவது அரிதான வி‌ஷயமாகும். ஏக காலத்தில் அணியின் தலைமை பொறுப்புக்கு வந்து விட்ட இவர்களில் கோலோச்சுவது யார்? அணிக்கு வெற்றியை தேடித்தருவதிலும் யாருடைய கை ஓங்கும் என்பதை காலம் தான் கணிக்கும்.

விராட் கோலி (28 வயது)

(இந்தியா)

டெஸ்ட்–54

ரன்கள்–4,451

சராசரி–51.75

சதங்கள்–16

அரைசதங்கள்–14

அதிகபட்சம்–235 ரன்

ஸ்டீவன் சுமித் (வயது 27)

(ஆஸ்திரேலியா)

டெஸ்ட்–50

ரன்கள்–4,752

சராசரி–60.15

சதங்கள்–17

அரைசதங்கள்–20

அதிகபட்சம்–215

ஜோ ரூட் (வயது 26)

(இங்கிலாந்து)

டெஸ்ட்–53

ரன்கள்–4,594

சராசரி–52.80

சதங்கள்–11

அரைசதங்கள்–27

அதிகபட்சம்–254

வில்லியம்சன் (வயது 26)

(நியூசிலாந்து)

டெஸ்ட்–58

ரன்கள்–4,507

சராசரி–50.07

சதங்கள்–15

அரைசதங்கள்–25

அதிகபட்சம்–242*


Next Story