ஐ.பி.எல். ஏலத்தில் 351 வீரர்கள்: 8 அணிகளின் நிலை, எதிர்பார்ப்பு என்ன?


ஐ.பி.எல். ஏலத்தில் 351 வீரர்கள்: 8 அணிகளின் நிலை, எதிர்பார்ப்பு என்ன?
x
தினத்தந்தி 15 Feb 2017 9:33 PM GMT (Updated: 15 Feb 2017 9:33 PM GMT)

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் 8 அணிகளின் எதிர்பார்ப்பு என்ன? என்ற விவரங்கள் கசிந்துள்ளன. ஐ.பி.எல். ஏலம் 8 அணிகள் பங்கேற்கும் 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்க

பெங்களூரு,

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் 8 அணிகளின் எதிர்பார்ப்பு என்ன? என்ற விவரங்கள் கசிந்துள்ளன.

ஐ.பி.எல். ஏலம்

8 அணிகள் பங்கேற்கும் 10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்த ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 20–ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. ஏலத்திற்கு 799 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு இறுதிப்பட்டியலில் 351 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய 122 பேரும் அடங்குவர்.

இந்த சீசனில் ஒவ்வொரு அணிகளும் வெளிநாட்டு ஆல்–ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை எடுக்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றன. சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய தொகைக்கு விலை போக வாய்ப்பில்லை. மேலும் பெரும்பாலான அணிகளுக்கு பேட்ஸ்மேன்கள் தேவை இல்லை என்பதால், பேட்ஸ்மேன்களும் குறைந்த விலைக்கு ஏலம் போவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இனி ஒவ்வொரு அணிகளின் நிலைமையை பார்க்கலாம்.

டோனி அணி

புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ்: புனே அணி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. டோனி தலைமையில் களம் இறங்கிய இந்த அணி 7–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தோல்வி எதிரொலியாக அணியில் இருந்து 6 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 பேர் அதிரடியாக கழற்றி விடப்பட்டனர். புனே அணி 10 வீரர்களை வாங்க முடியும். 4 வெளிநாட்டு வீரர்களுக்குரிய இடமும் காலியாக உள்ளது. வீரர்களை ஏலத்தில் எடுக்க ரூ.17½ கோடி செலவு செய்யலாம்.

குஜராத் லயன்ஸ்: கடந்த ஆண்டு அடியெடுத்து வைத்த சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்தாலும் பிளே–ஆப் சுற்றில் இரண்டு ஆட்டத்திலும் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இதைத் தொடர்ந்து அந்த அணி 8 வீரர்களை விடுவித்தது. இந்த சீசனுக்காக அந்த அணி 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 11 பேரை ஏலத்தில் வாங்கலாம். இதற்கு ரூ.14.35 கோடி செலவு செய்ய முடியும்.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் 20 வீரர்கள் இருக்கிறார்கள். ஏலத்தில் 7 வீரர்களை ரூ.11½ கோடிக்குள் செலவு செய்து எடுத்துக் கொள்ளலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆல்–ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செலுக்கு, ஊக்கமருந்து விதிமுறையை மீறியதற்காக ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டிருப்பது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவரது இடத்தை ஈடுகட்டுவதற்கு ஏற்ற ஒரு வீரரை அந்த அணி வாங்க வேண்டி உள்ளது. கொல்கத்தா அணி 6 அன்னிய வீரர்கள் உள்பட 14 பேரை இந்த ஏலத்தில் எடுக்க முடியும். ரூ.19¾ கோடி கையிருப்பு உள்ளது.

நடப்பு சாம்பியன்

ஐதராபாத் சன்ரைசர்ஸ்: நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி வெளியேற்றிய 6 வீரர்களில் இயான் மோர்கன், கரண் ‌ஷர்மா, டிரென்ட் பவுல்ட் குறிப்பிடத்தக்கவர்கள். டேவிட் வார்னர் தலைமையிலான அந்த அணியில் யுவராஜ்சிங், ஷிகர் தவான், ஹென்ரிக்ஸ், நமன் ஓஜா, முஸ்தாபிஜூர் ரகுமான், புவனேஷ்வர்குமார், நெஹரா என்று தற்போது கூட சரியான கலவையில் வீரர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள். எனவே அந்த அணி புதுவீரர்களின் வருகையை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அந்த அணியில் 3 வெளிநாட்டவர் உள்பட 10 வீரர்களின் இடங்கள் காலியாக இருக்கிறது. அதை நிரப்ப ஐதராபாத் நிர்வாகம் ரூ.20.9 கோடி வரை செலவு செய்யலாம்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணியாக வலம் வரும் பெங்களூரு அணி, இன்னும் ஒரு முறையும் கோப்பையை வென்றதில்லை. 10 வீரர்களை விடுவித்த அந்த அணியில் இன்னும் 20 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நடப்பு தொடருக்கு 7 வீரர்களை மொத்தம் ரூ.12.82 கோடி செலவு செய்து வாங்க தயாராக உள்ளது.

அதிக தொகையுடன் பஞ்சாப்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: பஞ்சாப் அணி கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட போதிலும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 19 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. குறைந்த எண்ணிக்கையாக வெறும் 4 வீரர்களை மட்டுமே விடுவித்தது. தற்போதைய ஏலத்தில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டவர் உள்பட 8 வீரர்களை எடுக்கலாம். ரூ.23.35 கோடி செலவு செய்யும் தகுதியுடன் இருக்கிறது.

டெல்லி டேர்டெவில்ஸ்: கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடியவர்களில் பவான் நெகி, இம்ரான் தாஹிர் உள்பட 7 வீரர்கள் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்கள். டுமினி தலைமையில் களம் காணும் டெல்லி அணி இந்த ஏலத்திற்கு ரூ.23.1 கோடி பயன்படுத்தலாம். 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 10 வீரர்களை மேற்கொண்டு நிரப்பப் முடியும்.

யார்–யாருக்கு வாய்ப்பு?

ஏலத்தில் மேத்யூஸ் (இலங்கை), பென் ஸ்டோக்ஸ்(இங்கிலாந்து), காலின் டி கிரான்ட்ஹோம் (நியூசிலாந்து), முகமது நபி (ஆப்கானிஸ்தான்), மைக்கேல் கிளைஞ்சர் (ஆஸ்திரேலியா), டேவிட் வைஸ் (தென்ஆப்பிரிக்கா), ரபடா (தென்ஆப்பிரிக்கா), பேட் கம்மின்ஸ்(ஆஸ்திரேலியா), இஷாந்த் ‌ஷர்மா (இந்தியா), அபினவ் முகுந்த் (இந்தியா), பிரித்வி ஷா (இந்தியா), டைமல் மில்ஸ் (இங்கிலாந்து), கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து), காலின் முன்ரோ (நியூசிலாந்து) உள்ளிட்டோருக்கு அதிக கிராக்கி இருக்கக்கூடும். ஆனால் சர்வதேச போட்டிக்காக இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் மே மாதம் முதல் வாரத்திலேயே ஐ.பி.எல்.–லை விட்டு கிளம்ப வாய்ப்பு இருப்பதால் அதையும் அணி நிர்வாகங்கள் கவனத்தில் வைத்திருக்கும்.


Next Story