‘கேப்டன் பதவியால் பேட்டிங் திறன் பாதிக்காது’ இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோரூட் கருத்து


‘கேப்டன் பதவியால் பேட்டிங் திறன் பாதிக்காது’ இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோரூட் கருத்து
x
தினத்தந்தி 16 Feb 2017 8:49 PM GMT (Updated: 16 Feb 2017 8:49 PM GMT)

‘கேப்டன் பதவியை ஏற்பதால் தனது பேட்டிங் திறன் பாதிக்காது’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஜோரூட் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

‘கேப்டன் பதவியை ஏற்பதால் தனது பேட்டிங் திறன் பாதிக்காது’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் ஜோரூட் தெரிவித்துள்ளார்.

ஜோரூட் பேட்டி

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அலஸ்டயர் குக் அந்த பொறுப்பில் இருந்து விலகியதும் 26 வயது பேட்ஸ்மேனான ஜோரூட் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நேற்று ஜோரூட் தனது சொந்த ஊரில் உள்ள லீட்ஸ் மைதானத்துக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அணியின் கேப்டன் பொறுப்பையும் கூடுதலாக ஏற்று இருப்பதை சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். இது நான் இன்னும் சிறப்பாக செயல்பட நிச்சயம் உத்வேகம் அளிக்கும். எல்லா இளைஞர்களுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஒருநாளில் வர வேண்டும் என்பதே கனவாக இருக்கும். கேப்டன் பதவியில் சாதிக்க வேண்டும் நோக்குடன் இந்த பொறுப்பை ஏற்கிறேன்.

பேட்டிங் திறன் பாதிக்காது

இங்கிலாந்து அணியின் கேப்டனாக பதவி வகிப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். கேப்டன் பொறுப்புக்கு எனது பெயரை பரிந்துரை செய்த போது எந்தவித தயக்கமும் இன்றி இந்த பதவியை ஏற்க சம்மதித்தேன்.

கேப்டன் பதவியால் எனது பேட்டிங் திறன் பாதிக்காது. மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேட்டிங் உள்பட எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்டு அணியில் உள்ள எல்லா வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருப்பேன். இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் ஆகியோர் கேப்டன் பதவியில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தில் அடுத்த நிலைக்கு சென்று இருக்கிறார்கள். அவர்களை போல் என்னால் ஏன் செய்ய முடியாது?.

சவாலாக விளங்க வேண்டும்

எனக்கு அதிக அளவில் கொடுத்து இருக்கும் ஆட்டத்துக்கு ஏதாவது திருப்பி அளிக்க இதனை நல்ல வாய்ப்பாக கருதுகிறேன். எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், திறமையான இளம் வீரர்களும் இடம் பெற்று இருப்பது எனது அதிர்ஷ்டமாகும். எதிரணிகளுக்கு கடும் சவாலாக விளங்கி வெற்றி பெறும் கேப்டனாக விளங்க வேண்டும் என்று விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை எல்லாரும் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் நன்றாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஜோரூட் கூறினார்.


Next Story