20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணியிடம் நியூசிலாந்து தோல்வி


20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணியிடம் நியூசிலாந்து தோல்வி
x
தினத்தந்தி 17 Feb 2017 9:01 PM GMT (Updated: 17 Feb 2017 9:01 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

ஆக்லாந்து,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

20 ஓவர் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா–நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசிம் அம்லா, குயின்டன் டி காக் ஆகியோர் களம் இறங்கினார்கள். குயின்டன் டி காக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ், அம்லாவுடன் இணைந்தார். இருவரும் அதிரடியாக அடித்து ஆடினார்கள். பென் வீலெர் வீசிய ஒரு ஓவரில் அம்லா தொடர்ச்சியாக 4 பவுண்டரி விளாசி அசத்தினார். 11.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 102 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. டுபிளிஸ்சிஸ் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் கிரான்ட்ஹோம்ப் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நிலைத்து நின்று ஆடிய அம்லா (62 ரன், 43 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) பென் வீலெர் பந்து வீச்சில் டாம் புரூஸ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி

டிவில்லியர்ஸ் 26 ரன்னும், டுமினி 29 ரன்னும் துரிதமாக சேர்த்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், கிரான்ட்ஹோம்ப் தலா 2 விக்கெட்டும், பென் வீலெர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி, தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 14.5 ஓவர்களில் 107 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், 1–0 என்ற கணக்கில் தொடரையும் தனதாக்கியது. அதிகபட்சமாக டாம் புரூஸ் 33 ரன்னும், டிம் சவுதி 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இம்ரான் தாஹிர் சாதனை

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் இம்ரான் தாஹிர் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், பெக்லுக்வாயோ 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் சாய்த்தனர். ஆட்டநாயகன் விருது பெற்ற தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், டாம் புரூஸ் விக்கெட்டை வீழ்த்திய போது 20 ஓவர் போட்டியில் 50 விக்கெட்டுகளை கடந்தார்.

இதன் மூலம் இம்ரான் தாஹிர் 20 ஓவர் போட்டியில் குறைந்த ஆட்டத்தில் 50 விக்கெட்டுகளை (31 போட்டியில் 54 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 2–வது இடத்தை பிடித்தார். இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸ் 26 போட்டியில் 50 விக்கெட்டுகளை எட்டியதே இந்த வகையில் சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டி

இதனை அடுத்து தென்ஆப்பிரிக்கா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.


Next Story