சூப்பர் சிக்ஸ் சுற்றில் 2–வது வெற்றி பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தகுதி


சூப்பர் சிக்ஸ் சுற்றில் 2–வது வெற்றி பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தகுதி
x
தினத்தந்தி 17 Feb 2017 9:04 PM GMT (Updated: 17 Feb 2017 9:04 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி 2–வது வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், உலக போட்டிக்கும் தகுதி பெற்றது.

கொழும்பு,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி போட்டியில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய அணி 2–வது வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், உலக போட்டிக்கும் தகுதி பெற்றது.

உலக கோப்பை தகுதி சுற்று

11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இங்கிலாந்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஏற்கனவே 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.

இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, இலங்கை, அயர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும், எதிர் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இந்திய அணி தகுதி

இதில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 33.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2–வது வெற்றியை ருசித்தது. இந்த சுற்றில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வென்று இருந்தது. தனது பிரிவில் இடம் பிடித்துள்ள இலங்கை, அயர்லாந்து அணிகளை ஏற்கனவே லீக் ஆட்டத்தில் வென்று இருந்ததால் அதன் மூலம் கிடைத்த 4 போனஸ் புள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 8 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய அணி உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது. இதன் மூலம் 6 புள்ளிகள் சேகரித்து இருக்கும் தென்ஆப்பிரிக்கா அணி உலக போட்டிக்கு தகுதி பெற்றதுடன், இறுதிப்போட்டியையும் நெருங்கியது. இன்னொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்தது முதல் வெற்றியை சொந்தமாக்கியது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சூப்பர் சிக்ஸ் சுற்று கடைசி ஆட்டங்களில் இந்தியா–பாகிஸ்தான், அயர்லாந்து–தென்ஆப்பிரிக்கா, இலங்கை–வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.


Next Story