ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடருமா? முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோதல்


ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடருமா? முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 18 Feb 2017 9:16 PM GMT (Updated: 18 Feb 2017 9:15 PM GMT)

தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.

ஹாமில்டன்,

தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில், சமீபகால தென்ஆப்பிரிக்காவின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சாதனை நோக்கி தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய தென்ஆப்பிரிக்க அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

வலுவான அணியாக அடியெடுத்து வைக்கும் டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, கடைசியாக ஆடிய 11 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்டிருக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்றிருந்த தனது முந்தைய சாதனையை (2005–ம் ஆண்டில் தொடர்ந்து 12 வெற்றி) சமன் செய்யும். இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா (21 வெற்றி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘நம்பர் ஒன்’ இடம்

20 ஓவர் போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் மற்றும் ரபடா நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் குடைச்சல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தென்ஆப்பிரிக்காவின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளூரில் வெற்றிக்கனியை பறிப்பதில் நியூசிலாந்து வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். சிறிய மைதானம் என்பதால் ரன்மழை பொழியலாம். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு தொய்வு இருக்காது.

தற்போது ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் 119 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்கா, தொடரை குறைந்தது 3–2 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க முடியும். மாறாக 113 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி தொடரை 3–2 என்ற கணக்கில் கைப்பற்றினால், தென்ஆப்பிரிக்கா 2–வது இடத்துக்கு சரியும். ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை பிடிக்கும்.

வீரர்கள் பட்டியல்

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

தென்ஆப்பிரிக்கா: அம்லா, குயின்டான் டி காக், பாப் டு பிளிஸ்சிஸ், டிவில்லியர்ஸ் (கேப்டன்), டுமினி, பெஹர்டைன், கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னல், பெஹல்க்வாயோ, ரபடா, இம்ரான் தாஹிர்.

நியூசிலாந்து: டீன் பிரவுன்லி, டாம் லாதம், கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், நீல் புரூம், ஜேம்ஸ் நீ‌ஷம், லுக் ரோஞ்ச், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்ஹி, டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.

இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்தியாவில் இந்த ஆட்டம் நேரடி ஒளிபரப்பு கிடையாது. ஆட்டத்தின் போது மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளது.


Next Story